×

திருப்புவனம் அருகே பழையனூரில் கிருதுமால் நதியில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்-12 கிராம மக்கள் கோரிக்கை

திருப்புவனம் : திருப்புவனம் அருகே பழையனூரில், கிருதுமால் நதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என 12 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த பழையனூர் அருகே, கிருதுமால் நதி செல்கிறது. இந்த நதியில் செப்டம்பர் முதல் ஜனவரி வரை  தொடர்ந்து தண்ணீர் செல்லும். தற்போது தொடர் மழையால் வைகை அணை நிரம்பி நீர்மட்டம் 71 அடியை நெருங்கியுள்ளது. இதையடுத்து பூர்வீக வைகை பாசனத்தின் முதல் பிரிவான ராமநாதபுரத்திற்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. அதன்பின் பூர்வீக வைகைப்பாசன இரண்டாம் பிரிவில் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக மதுரை மாவட்டத்திற்கும் திறக்கப்படவுள்ள நிலையில், வைகையின் உபரிநீர் அதிகமாகி, விரகனூர் மதகு அணையிலிருந்து  கிருதுமால் நதிக்கு தண்ணீர்  திறக்கப்பட்டாலும், கிருதுமால் நதியில் குறைந்த அளவே உபரிநீர்  செல்கிறது. இந்நிலையில், கிருதுமால் நதியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, அதிமுக ஆட்சியில் போடப்பட்ட  தரைப்பாலம் மூழ்கும். இதனால், 12க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படும். சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள பழையனூரையும், விருதுநகர் மாவட்ட கிராமங்களுக்கும் இடையே கிருதுமால் நதி செல்கிறது.மழை காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, ஓடாத்தூர், சிறுவனூர், எஸ்.வாகைக்குளம், வல்லாரேந்தல், சேந்தநதி, முக்குளம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும். ஆற்றின் கரையின் இருபுறமும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும். ஒரு கரையில் இறங்குபவர்கள் தண்ணீரில் நீந்தி கடந்து வந்து மறுகரையில் உள்ள ஷேர்ஆட்டோவில் ஏறி  செல்லும் நிலையே உள்ளது. பழையனூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 200 பேர், பழையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  படித்து வருகின்றனர். கிருதுமால் நதியில் தண்ணீர் செல்லும் காலங்களில் மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கடந்தாண்டு தரைப்பாலம் கட்டும்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் அல்லது சிமெண்ட் குழாய் வைத்து பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினர். நபார்டு வங்கி மூலம் கட்டப்பட்ட தரைப்பாலம் தண்ணீர் வந்தால் மூழ்கி விடுகிறது. இதனால், பயனில்லை என 12 கிராம மக்கள்  குற்றம் சாட்டுகின்றனர். பழையனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியே சுற்றுவட்டார மக்கள் உள்ளனர். கிருதுமால் நதியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, ஆற்றைக் கடந்து சிகிச்சை பெற வரவேண்டியுள்ளது. பலமுறை கிருதுமால் நதியில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பல ஆண்டுகளாக போராடியும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு நிதி ஒதுக்கியாச்சு… பழையனூர் ஒன்றியக் கவுன்சிலரும், திருப்புவனம் ஒன்றியச் சேர்மனுமான  தூதை சின்னையா கூறுகையில், ‘கிருதுமால் நதியில் உயர்மட்டப்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  கடந்த அதிமுக ஆட்சியில் தரைப்பாலம் அமைக்கும்போது, இப்பகுதியில் மக்கள் தரைப்பாலம் வேண்டாம், உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து திமுக ஆட்சியில், கிருதுமால் நதியில் உயர்மட்ட பாலம் அமைவது உறுதியானது. கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி லாடனேந்தல்-பெத்தானேந்தல் உயர்மட்டப்பாலம் அடிக்கல் நாட்டுவிழாவில், கிருதுமால் நதியில் உயர்மட்டப் பாலம் விரைவில் கட்டப்படும். இப்பணிக்கு அரசு  நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடும் நிலையில் உள்ளது’ என்றார்….

The post திருப்புவனம் அருகே பழையனூரில் கிருதுமால் நதியில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்-12 கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Krithumal ,Badayanur ,Tirupuvanam ,Krithumal river ,Tirupuvanum ,Dinakaran ,
× RELATED ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சிவகங்கை...