×

கருடாழ்வார் தரிசனம்

திருமால் வாகனம் ‘கருடன்’. பெருமாளின் திருவடி கருடன் மீது படுவதால் கருடனுக்குப் பெரிய திருவடி என்ற பெயர் உண்டு.  கருடாழ்வார் ஸத்யன், ஸுபர்ணன், விஹேச்வரன், பந்தகாசனன் பதகேந்திரன் என்ற ஐந்து மூர்த்திகளை உடையவர் என்றும், உயர்ந்த பூதங்களைத் திருமேனியாகக் கொண்டவர். ரிக், யஜுர், சாம வேதங்களையும் தனது திருமேனியாக உடையவர் கருடர் என்று பத்ம புராணம் கூறுகிறது. கருடாழ்வார் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதி ஸ்வாதி நட்சத்திரத்தில் காஸ்யப முனிவரின் மனைவி வினதைக்கு மகனாக அவதரித்தார்.  சாமுத்திரிகா லக்சணப்படி கருடர், முக அழகு வசீகரிக்கும் பார்வை உள்ளவர் என்பதால் ‘செம்பருந்து’ என்று அவரை அழைப்பார்கள். திருவேங்கடப் பெருமாளுக்குக் கருடன் கொடியாக இருக்கிறார். இதையே ஆண்டாள் ஒரு பாசுரத்தில் ‘ஆடும் கருடக் கொடியார்’ என்று ஒரு பாசுரத்தில் பாடுகிறார்.  ‘கருட ஸ்கந்தவாகினி ஸ்ரீவேங்கடேசாய நமஹ’ என்பது திருவேங்கடவனின் நூற்றி எட்டுத் திருநாமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.  ராவணனுக்கு முன்பு வாழ்ந்த ‘மாலி’ முதலான அரக்கர்களைக் கொன்று முடிசூட்டிக்கொண்டவர் கருடாழ்வார். இதை ‘‘இலங்கை பதிக்கு இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர் மாள கொடிபுள் திருத்தாய்’’ என்று திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.  இந்திரஜித்தின் ‘நாகாஸ்திரத்தில்’ மயக்கமுற்றுக்கிடந்த ராமலட்சுமணரை உயிர்ப்பித்தவர் கருடாழ்வார். கிருஷ்ணர் ஒருசமயம் பசுக்களை மேய்க்கக் காட்டிற்குள் சென்றபொழுது கடுமையான வெயில் காய்ந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் வெப்பம் தாங்காமல் அவதிப்பட்டார். அப்போது ஆகாயத்தில் தன் சிறகுகளைப் பரப்பி நிழல் தந்து கிருஷ்ணரை காத்தருளினார் கருடர்.   ஒருசமயம் பிரகலாதனுடைய மகன் விராசணன் பாற்கடலிலிருந்த மகா விஷ்ணுவின் கிரீடத்தைத் திருடிக்கொண்டு சென்று விட்டான். இதை அறிந்த கருடன், பாதாள உலகத்தில் வெள்ளையம் என்ற தீவிற்குச் சென்று அங்கிருந்த விராசணனுடன் போரிட்டு கிரீடத்தை மீட்டு வந்தபோது, பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் ஒரு மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். உடனே கிரீடத்தை அவர் தலையில் சூடிவிட்டார். இந்த நிகழ்ச்சி இன்றும் பல விஷ்ணு ஆலயங்களில் ‘வைரமுடி சேவை’ என்று கொண்டாடப்படுகிறது. திவ்ய க்ஷேத்திரமான திருநாராயணபுரத்தில் இது விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பத்ம பிராணப்படி கருடனுக்கு பிறரை ரகசியம் செய்வது, பகைவர்களை அடக்குவது, உணர்வுகளை மயங்க வைப்பது படிப்பில் தேர்ச்சி பெறச் செய்வது, காற்று, நீர் நெருப்புகளில் அச்சமின்றி புகுவது, வாதத்தில் வெற்றியடைவது, அதிக நினைவாற்றல் போன்ற அபூர்வ சக்தியுண்டு. கருட மந்திரத்தை ஜபித்தால் மேற்கண்ட மகிமைகளைப் பெறலாம்.  சபரி மலையில் மகர ஜோதியின்போது ஆகாயத்தில் பறக்கும் கருடனை ‘கிருஷ்ணப்பருந்து’ என்றழைப்பார்கள்.  வீட்டுக்குள் பாம்பு தென்பட்டால், அப ஸர்ப்ப ஸர்ப்ப பத்ரம்கேதூரம் கட்டமஹாசய’’என்னும் மந்திரத்தை ஜபித்தால் பாம்பு ஓடிவிடும்.  கருடன் நிழல் பட்ட வயல்களில் விளைச்சல் அதிகமிருக்கும்.  கருடன் எடுத்து வந்த அமிர்த கலசத்தில் ஒட்டியிருந்த தேவலோகப்புல்லே பூமியில் விழுந்து தர்ப்பைப்புல்லாக விளைந்தது.  கருடக்கிழங்கு என்ற கிழங்கை வாசலில் கட்டினால் விஷப்பூச்சிகள் வராது.  மிகவும் சுமை கொண்ட ‘கல் கருடன்’ நாச்சியார் கோயிலில் உள்ளது. புத்தர் நாட்டு நாணயத்தில் கருட முத்திரையைப் பதித்திருந்தார்கள்.  ஸ்ரீரங்கத்தில் கருடனை பெரிய வடிவிலும், திருவெள்ளியங்குடி கோயிலில் கோலவில்லிராமன் சந்நதியில் கருடரை சங்கு சக்கரமுடனும் காணலாம்.  தேவகிரி யாதவர்களின் கொடி ‘கருடன்’ கொடியாகும்.  இலங்கை எனும் நாடு கருடன் தகர்த்த மேருமலையின் ஒரு தீவாகும்.  வானத்தில் கருடனை ஞாயிற்றுக்கிழமையில் தரிசித்தால் நோய் தீரும். திங்கள், செவ்வாயில் தரிசித்தால் துன்பம் அகலும். புதன், வியாழனில் தரிசித்தால் பகை நீங்கும் வெள்ளி சனிக்கிழமையில் தரிசித்தால் செல்வம் பெருகும்.தொகுப்பு: ராமசுப்பு

The post கருடாழ்வார் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Vigilaner ,Tirumal ,Karudan ,Tiruvadi ,Perumal ,Karidalwar Satyan ,VISIAN VISION ,
× RELATED அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்