×

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்


“அணி தரளக் கொப்பும்’’என்ற வார்த்தையால் மூன்று அணிகலன்களை குறிப்பிடுகின்றார். திருக்கடையூரை பொருத்தவரை திருமாலின் நகையே உமையம்மையாக கருதி வழிபடப்படுகிறது. அந்த வகையில் “அணி’’ என்பது அணிகளையும் “தரளம்’’ என்பது அசையும் படி செய்யப்பட்ட முத்தையும் கொப்பும் என்பது கூந்தலில் அல்லது காதில் அல்லது மார்பில் அணியப்படும் ஒரு விதமான அணி கலன். இந்த மூன்று அணிகலன்களிலும் வேறு பெயர் சூட்டியும் அழைக்கிறார்கள்.

சூடாமணி என்பது பெண்கள் வகிட்டில் நெற்றியில் படும் வண்ணம் முடியில் அணியும் ஒருவித அணி. இந்த அணியில் முத்துக்கள் அசையும் வண்ணமாகவும் ஒரு பகுதியில் கூந்தலில் நிலைத்து நிற்கும் வண்ணமாக அமைத்திருப்பார். இதையே “அணி தரளக் கொப்பும்’’ என்கிறார்.காதுகளில் நிலையாக இருக்கும் தோடுகளுடன் அசைந்தாடும் வகையில் இருக்கும் [ஜிமிக்கி] அதில் முத்துக்களை இணைத்து அமைத்திருப்பர். அதையும் “அணி தரளக் கொப்பும்’’ என்கிறார். மேலும், கூந்தலை ஒரு பக்கமாக சாய்த்து ஆண்டாளின் கொண்டை போல் கட்டி கூந்தல் முடிவில் முத்துக்களைக் கோர்த்து கட்டியிருப்பர். ஒருபக்கம் கூந்தலில் நிலையாக பிடித்திருக்கும். நெத்திசூட்டி, ஜிமிக்கி, சாய் கொண்டை, கொப்பி, முத்து இது அனைத்தையுமே “அணி தரள கொப்பு’’ என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

மஹாவிஷ்ணுவிற்கு பாற்கடலில் தோன்றிய கௌஸ்துபம், முத்து போன்றவற்றை அணிகலனாக மிகுதியாக சாத்தியிருப்பார்கள். இவை நீரிடை தோன்றியதாகும். அவர் தன் அணிகலனாலேயே உமையம்மையை தோற்றுவித்ததனால் அதில் முத்துக்கள் அதிகமாக இருக்கும். இதை ஆகமம் சாந்நித்யத்தை வளர்க்கும் என்கிறது. இதை வாரணாசி என்ற இடத்தில் விசாலாட்சி கலா பைரவர் என்ற வடிவில் சக்தி பீடமாக வழிபடுகிறார்கள். இவ்வாறு அபிராமிபட்டர் மனதிற்குள் எண்ணி தியானிப்பதையே “அணி தரளக் கொப்பும்” என்கிறார்.

“வயிரக் குழையும்” என்பதனால் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட காது தோட்டை குறிப்பிடுகிறார். சாக்த ஆகமங்கள் சக்கரத்தை தோடாக செய்து அணிவிப்பர். அதில் மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம், வைடூரியம் என்று ஒன்பது விதமான இரத்தினங்களை தனித்தனியே நாற்பத்தி மூன்று எண்ணிக்கையிலும், ஒரே வகை ரத்தினங்களை தனித்து பதித்தும் வழிபாடு செய்வர். ஒன்பது ரத்தினங்களை இணைத்து ஒரே சக்ர தாடங்கமாகவும் உமையம்மைக்கு அணிவிப்பர். தாடங்கத்தை தனியாகவும் வைத்து வழிபடுவர். அந்தந்த ரத்தினங்களின் வண்ணத்திற்கு ஏற்ப மலர், உடை, நைவேதியம், உமையம்மையின் கைகளில் உள்ள ஆயுதம், வாகனம், பெயர், வயது போன்றவற்றினால் பத்து விதமான மாறுபாட்டை செய்து வணங்குவர்.

அப்படி வணங்குவதால் வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பயன்களையும் காம்ய, மோட்ச, ஞான, தர்மம், அர்த்தம் போன்ற அனைத்தையும் அடையலாம் என்கிறது சாக்த ஆகமம். குறிப்பாக முத்தையும், வைரத்தையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மன உறுதியையும், மன அமைதியையும் இவ்விரண்டும் வழங்கவல்லது, இதில் ஒன்பது ரத்தினத்தோடும் [தனித்தனியே ரத்தினம் பதித்தது] ஒன்பதும் இணைந்த ரத்தினத் தோடும் மொத்தம் பத்தாகும்.

இதை நவராத்திரியில் ஒன்பது ரத்தினத்தையும் ஒன்பதும் இணைந்த ரத்தினத் தோட்டை தசமியிலும் அணிவிப்பர். முத்து, பவளம், மாணிக்கம், வைரம், போன்ற ஒன்பது வகை ரத்தினத்தினாலான தோட்டை தனித்தனியே, அதாவது முதல் நாள் முத்துத்தோடு, அடுத்த நாள் வைரத் தோடு, என்பது போல ஒன்பது நாளும் மாற்றி மாற்றி உமையம்மைக்கு அணிவிப்பார். பத்தாம் நாள் தசமியன்று ஒன்பது கற்களும் இணைந்த நவரத்தினத்தோட்டை உமையம்மைக்கு அணிவித்து வழிபடுவர்.

அபிராமி பட்டர் கீழே நெருப்பும், மேலே நிலவையும் எதிர்பார்த்து எழுபத்தி எட்டு பாடல்கள் பாடியும் வராதது கண்டு நெஞ்சு உறுதி இழந்து மனம் அமைதியின்றி இருக்கும் நிலையை சமன்பாடு செய்ய சாக்த தந்திரங்கள் கூறிய வைர, முத்துக்களை சூட்டி வணங்குவதனால் மன உறுதியையும், மன அமைதியையும் விழைகிறார். நாம் எல்லோரும் பெற வழிவகை செய்கிறார். இதை எல்லாம் மனதில்கொண்டே “வயிரக் குழையும்’’ என்கிறார்.“விழியின் கொழுங்கடையும்”என்பதனால் உமையம்மையின் பார்வையை குறிப்பிடுகின்றார் சிற்ப சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பத்துவிதமாக அந்தந்த தேவதை சார்ந்து கண்களை அமைப்பார்.

சிற்பத்திற்கு கண் திறப்பது என்பது ‘நேத்ரோன்மீலனம்’ என்ற ஆகம வழியில் செய்யப் படும் ஒரு பூசையின் பெயர். இந்த பூசையில் தேவதைகளின் பார்வையில் விஷேசித்து சொல்லப்பட்டிருக்கிறது. அதைச் சற்று விரிவாகப் பார்த்தால் இப்பார்வையின் நுட்பம் நமக்கு தெளிவாக புரியும். சிவகாம சுந்தரியின் பார்வையானது பரமேஸ்வரனின் நாட்டியத்தை கண்டு களிப்பதால் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் திகழ்கிறது. இதை சகஸ்ரநாமம் ‘மகேஸ்வர மஹாகல்ப மஹாதாண்டவ சாக்ஷினி’ என்பதனால் அறியலாம். ‘தவளத்திரு நகையும்’ (38) என்கின்றார் பட்டர்.

உலகிலுள்ளோர் அழுகையின் காரணமாக துன்பத்தை போக்குவதற்கு அல்லது அழிப்பதற்கு பார்க்கும் பார்வை கொண்டவளை கொளரி என்பார்கள். இவள் ருத்ர சக்தியாவாள்,
அவளுக்கு இருக்கும் பார்வையானது ஆன்மாக் களின் அழுகையை போக்கக்கூடியது. உலகிலுள்ளோர் வெறுத்து ஒதுக்கும் மலம், குப்பை, பாவம், துன்பம், இவற்றைத் தான் பெற்றுக்கொண்டு உலக உயிர்களுக்கு நன்மைகளை செய்யக்கூடியவள். பீடாபஹாரி என்ற தெய்வத்தின் பார்வை பாவத்தை ஏற்றுப் போக்கும் பண்புடையது.

‘முதுகன்’ (93) அசுரர்களின் பார்வைக்கு அமிர்தமானது செல்லாமல் தேவர்களுக்கு மட்டும் உரித்தாகும் வகையில் நாராயணனின் மோகினித் தோற்றமானது இருக்கும். அந்த தோற்றத்தின் கண்பார்வையை ஐந்து வகையான பொய், மெய் தன்மைகளை விளக்கும் வகையில் மருட்கை பார்வையுடன் அமைக்கப்பட வேண்டும் என்கிறது சிற்பம்.

போர்க்காலங்களில் வெற்றிக்காக வேண்டப்படுகிற இவளின் பார்வையானது பார்க்கும்போதே எதிரிகளுக்கு மரணத்தை குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைக்கப்பட வேண்டும்.
‘அந்தரி’ (8). உமையம்மையானவள் சுந்தரேஸ் வரரை மணக்கும்போது நானம் மிக்கவளாக சிவத்தை மணந்ததால் பெருமிதம் கொள்வதாக மீனாட்சியின் பார்வை அமைய வேண்டும். வெற்றி அடைய வேண்டி துர்கையின் பார்வை குறிப்பிடப்படுகிறது.

யுத்தத்தில் எதிரியோடு சண்டையிடும் போதும் கோப உணர்ச்சி மிகுந்தவளாய் அவளது கண்களை வடிக்க வேண்டும். அதே சமயத்தில் யுத்தத்தில் வெற்றி அடைந்தபின் சினத்தை. உடனே தவிர்க்க வெற்றிப் பார்வையை அமைக்க வேண்டும் ஆகம சாஸ்திரங்கள் ரௌத்ரதுர்க்கை, சாந்த துர்க்கை. என்று இரண்டு துர்க்கையும் ஒருங்கே அமைத்து வழிபட வேண்டும் என்கிறது தாந்ரீகம். நான்கு கைகளை உடைய துர்க்கையின் பார்வை வெளியாகவும் சிவபெருமான் கோயிலைச் சுற்றியுள்ள கோஷ்டங்களில் (பிறை போன்ற அமைப்பு) விநாயகர் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா அமைத்திருப்பர்.

இந்த துர்க்கையின் பார்வை சூழந்தையை போன்றது. சிதம்பரம், திருவெண்காடு, திருமறைகாடு, பட்டீஸ்வரம், வாஞ்சியம் போன்ற தளங்களில் அமைந்திருக்கும் துர்க்கையின் பார்வை சினக்குறிப்பை உணர்த்துவதாக அமைக்க வேண்டும். காமேஸ்வரி காமேஸ்வரன், சிவனோடு இணைந்த உமையம்மையின் பார்வையானது உவகை உணர்ச்சியோடு அமைக்கப்பட வேண்டும். அனைத்து உணர்வு களையும் வெளிப்படுத்துகின்ற பண்பு கொண்ட மனோன்மணியின் பார்வை மிக சிறப்பானது. இந்த பார்வையானது அனைவருக்கும் நன்மையைச் செய்யும் இந்த உமையம்மைக்கு கடைக்கண் பார்வையே மிக சிறந்தது. அந்த பார்வையை சிறப்பாக கூறும் வகையில் “விழியின் கொழுங்கடையும்” என்கின்றார்.

அத்தகைய பார்வையே காம்ய, மோட்ச, ஞானத்தையும் வழங்க வல்லது. இதையே அபிராமி பட்டர் விழியின் கொழுங்கடை என்கின்றார். கொழு என்கின்ற வார்த்தை உமையம்மையின் பார்வையினால் இந்த உலகத்தை படைத்து காத்து அழித்து மறைத்து அருள்கின்ற வல்லமமை உடையது அவளது விழி, அதனாலேயே அந்த பார்வையை மீண்டும் மீண்டும் வேண்டுகிறார். இதையே “விழியின் கொழுங்கடையும்’’ என்கிறார் உமையம்மையின் மூன்று சிறப்பான கண்களை மட்டுமே வணங்கும் சக்தி பீட தலம் குரோதிஷா என்ற இடத்தில் மகிஷாசுரமர்த்தினி, சிவபெருமானுடன் இணைந்து அருள்செய்யும் சக்தி பீடமாகும். இதையே “விழியின் கொழுங்கடையும்” என்றார்.

“துப்பும்” என்பதற்கு பவழம் என்பது பொருள். உமையம்மையின் மேல்உதடு, கீழ்உதடு என்று தனித்தனிப் பாகமாக சக்திபீடத்தில் தியானிப்பார்கள். பைரவகிரி என்ற இடத்தில் அவந்தி என்ற பெயரை உடைய சக்தியும், லம்பகண்ணகி என்ற சிவபெருமானும் அருள்பாலிக்கிறார்கள். அட்டகாசம் என்ற இடத்தில் புல்லரா என்ற தேவி விஷ்வேஷ்வர் என்ற சிவபெருமானுடன் சக்தி பீடத்தில் தியானம் செய்கிறார்கள். அவர்களை தியானம் செய்வோருக்கு வாக்சித்தி உண்டாகும் [அவர்கள் சொல்வது பலிதமாகும்]. “துப்பும்” என்ற வார்த்தையால் பவளம் போன்ற சிவந்த உதடுகளை தியானம் செய்வதை குறிப்பிடுகின்றார். பட்டர் ‘பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்’ (38) என்பதையே “துப்பும்” என்கிறார்.

“நிலவும்”“நிலவு” என்பதற்கு மனம் என்னும் பொருள் என்பதனால் நிலவு வர வேண்டும் என்கின்ற பிரார்த்தனையும், நிலவைத் தலையில் சூடிய உமையம்மையையும், தியானம் செய்ததையே குறிப்பிடுகின்றார். உமையம்மையை மூன்று விதமாக நிலவுடன் சேர்ந்து குறிப்பிடுகிறார். ‘பானு மண்டல மத்யஸ்தா’ நிலவின் நடுவாக இருப்பவள் உமையம்மையே. கோயில்களில் சந்திரப்பிரபை என்ற வாகனத்தில் உமையம்மையை எழுந்தருளச் செய்வர். உமையம்மையின் கணவனுக்கு சந்திரமௌலி என்ற பெயரைச் சூட்டி அழைத்தனால் சந்திரனை தலையில் அணிந்த சிவபெருமானின் மனைவி என்பதாக ஒரு பொருள்.

இதையே ‘திங்களும்… படைத்த புனிதரும்’ (4) என்பதால் அறியலாம். உமையம்மையே தலையில் சந்திரனை சூடியிருக்கிறார் என்கிறது காமாட்சி தியானம்.
இந்த அனைத்து வகையிலேயும் நிலவும் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். தன் மனதில் [அகப்பூசனையில்] நிலவு வடிவில் இருக்கும் உமையம்மையையே இங்கு தியானிப்பதையே இங்கு “நிலவும்” என்றார்.

“எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே”“துணை விழிக்கே” என்பதால், வலது இடது கண்களை குறிப்பிடாமல், மனிதன் பார்வையையே, மனக்கண்ணையே “துணை விழிக்கே” என்கின்றார். அதில் உமையம்மையின் உருவத்தை நிலைநிறுத்துவதையே “எழுதி வைத்தேன்” என்கின்றார். வயது, ஸ்தனம், கூந்தல், உதடு, வயிறு, வாய், கண், குண்டலம், என்று எந்தெந்த உறுப்புகளை சிறப்பாக கருதி தியானிக்கிறாறோ, அந்த உறுப்புகளைத் தனித்து பிரித்து தியானிப்பதை “வித்யா தியானம்’’ என்று சிறப்பாக குறிப்பிடுகிறது. இந்த தியானம் ஞானத்தை உணர்த்துவதற்கு மிகச் சிறந்ததாகும்.

மனதில் உமையம்மையின் ரூபத்தியானத்தை தந்திர சாஸ்திரங்களில் சொல்லியபடி உறுப்புகளையும் தனித்தனியே அதன் சிறப்பு களையும், அதன் தத்துவங்களையும், மனதில் நிலை நிறுத்துவதையே அதாவது, தியானம் செய்வதே “எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே” என்கிறார்.“அந்தமாக”“செம்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி, அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்” என்பதால் தியானம் செய்ய வேண்டிய திருவருள் வடிவை பத்து உறுப்பு களாக குறிப்பிடுகின்றார். இது உமையம்மையைத் தான் உணர்ந்து பிறருக்கு உணர்ந்த வேண்டிய ஆச்சார்யர்கள் தியானிக்க வேண்டிய சக்தி பீடங்களின் தியானமேயாகும்.

“துப்பும் நிலவும்” என்ற வார்த்தையால் நிலவையும் அதை மனதில் நிலை நிறுத்தலையும். “எழுதிவைத்தேன்” என்பதனால் வேதாலயங்களில் கூறப்பட்ட நிர்குண சகுன கருத்துக்களின் உருவங்களை மனதில் நிலை நிறுத்துவதையும். “என் துணை விழிக்கே” என்பதனால் உமையம்மையை தொடர்ந்து தியானம் செய்ய அவளை பற்றிய தேவி பாகவதம், தேவி மஹாத்மியம், தேவி ஆகமங்களையும் அகக்கண்ணில் உள்நோக்கி எழுதியதை எண்ணி பார்த்தலாகிய தியானப் பயிற்சியையுமே குறிப்பிடுகிறார். அதையே செய்து அருள் பெற முயல்வோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.

Tags : Abhrami Antadi-Shakti Tattva ,Ani Taralak Koppum ,Thirukkadaiyur ,Tirumal ,
× RELATED அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்