×

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை… : ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்!!

சென்னை : வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணைக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, முந்தைய ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை எதிர்த்துப் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பிற சமுதாயத்தினர் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்குகளின் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தச் சட்டத்தை நடப்புக் கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு நேற்று (ஜூலை 27) அரசாணை பிறப்பித்துள்ளது.இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது.அப்போது, சட்டத்துக்குத் தடை கோரிய வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதா என, இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கமளிக்கும்படி, அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து பிற்பகலில் மேற்கண்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆஜராகிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்திரம் , வன்னியர் உள்ஒதுக்கீடு காரணமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை எனவும் ஏப்ரல் மாதமே அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வன்னியர் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்றும் எனவே வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான அரசாணைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதாடினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்க முடியாது என்று கூறிய நிலையில், வழக்கை ஆகஸ்ட் 2ம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.  …

The post கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை… : ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்!! appeared first on Dinakaran.

Tags : Vanniyars ,Tamil Nadu Government ,Chennai ,Madras High Court ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்