பெங்களூரு: கன்னட நடிகை காருண்யா ராம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரி சம்ருதி ராம் மற்றும் கடன் கொடுத்தவர்கள் மீது ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் வியாபாரத்தில் சுமார் 25 லட்ச ரூபாய் பணத்தை இழந்த சம்ருதி, வீட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதனால், கடன் கொடுத்தவர்கள் தன்னை மிரட்டுவதாகவும், தனது செல்போனுக்கு ஆபாச செய்திகள் அனுப்புவதாகவும், சமூக வலைத்தளங்களில் தனது போட்டோக்களுக்கு மோசமான கருத்துகளை பதிவிடுவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பிரதீபா, கபில், பிரஜ்வல் உள்பட சிலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒரு புகார் அளித்திருந்தார்.
அந்த அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டதுடன், காருண்யா ராம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட காருண்யா ராம், ‘நான் சட்ட நடவடிக்கை மீது முழு நம்பிக்கை வைத்தேன். பொதுவெளியில் நாடகம் ஆடாமல், தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நீதி கிடைக்கும் வகையில் சட்டப்படி பிரச்னையை எதிர்கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.
