×

வெள்ளகுதிர விமர்சனம்…

நகரத்தின் நரக வாழ்க்கையை துறந்து, போலீஸ் துரத்தலுக்கு பயந்து, சூழ்நிலை கைதியாய் மலையிலுள்ள தனது பூர்வகுடிக்கு மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனுடன் வருகிறார், ஹரிஷ் ஓரி. அங்கு கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார். மலைக்கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உதிரி விஜயகுமார், அந்த மக்களின் அறியாமையை பயன்படுத்தி, நிலங்களை ஏமாற்றி எழுதி வாங்குகிறார்.

இந்நிலையில், அங்கு பிரபலமாக இருக்கும் மூலிகை ரசத்தை சாராயமாக காய்ச்சி நகரத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் ஹரிஷ் ஓரியை போலீஸ் துரத்துகிறது. திருந்தாத கணவன் மற்றும் ஊரால் பரிகசிக்கப்படும் அபிராமி போஸ் என்ன ஆகிறார்? ஹரிஷ் ஓரி பிடிபட்டாரா என்பது மீதி கதை. அப்பாவியாக வந்து, அடப்பாவி என்று சொல்ல வைக்கும் இயல்பான நடிப்பை வழங்கிய ஹரிஷ் ஓரி, இறுதியில் திருந்தி வாழ முயற்சிக்கும்போது மனதை உருக்குகிறார்.

அபிராமி போஸ் சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் ஜீவிதா வெங்கடேசன், உதிரி விஜயகுமார், ரெஜின் ரோஸ், மெலடி டார்கஸ், ஜெயலட்சுமி, அறிவு உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். கொல்லிமலையின் பேரழகை நிறம் மாறாமல் கொடுத்துள்ள ஒளிப்பதிவாளர் ராம் தேவ் பணிக்கு பாராட்டுகள். கதைக்கேற்ற பாடல்களை வழங்கி, பின்னணி இசையில் படத்துக்கு உயிரூட்டியுள்ளார் பரத் ஆசீவகன்.

மலைவாழ் மக்களின் வெள்ளந்தி வாழ்க்கை, பாசம், பூர்வகுடி மீதான பற்றை உணர்வுப்பூர்வமாக சொன்ன இயக்குனர் சரண் ராஜ் செந்தில் குமார், கண்மூடித்தனமாக கைரேகை பதிக்கும் மக்களின் அறியாமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, மண் மீது வெறிகொண்டவர்களின் அராஜகங்களை சொல்லியிருக்கிறார். யதார்த்த திரைப்பட ரசிகர்களுக்கு ‘வெள்ளகுதிர’ பிடிக்கும்.

Tags : Harish Ori ,Abhirami Bose ,Uthiri Vijayakumar ,
× RELATED ‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்