- தாவூத்
- சாரதா
- நோரா
- பாலிவுட்
- மும்பை
- தாவூத் இப்ராஹிம்
- ஷ்ரத்தா கபூர்
- நோரா ஃபதேஹி
- போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு
- மும்பை போலீஸ்
- மகாராஷ்டிரா

மும்பை: மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பெரும் போதைப்பொருள் கும்பல் ஒன்று சிக்கியுள்ள நிலையில், இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், நோரா ஃபதேஹி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சர்வதேச அளவிலான போதைப்பொருள் மற்றும் ஹவாலா மோசடியில் ஈடுபட்டு வந்த பெரும் கும்பலை சமீபத்தில் கண்டறிந்தது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான சலீம் டோலாவின் மகன் தாஹிர் டோலா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணை அறிக்கையின்படி, தாஹிர் டோலா இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து போதைப்பொருள் விருந்துகளை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போதுதான் பாலிவுட் நடிகைகள் ஷரத்தா கபூர், நோரா ஃபதேஹி, ஷரத்தாவின் சகோதரர் சித்தார்த் கபூர், தாவூத் இப்ராஹிமின் மருமகன் அலிஷா பார்க்கர், ராப் பாடகர் லோகா, திரைப்பட இரட்டை இயக்குனர்களான அப்பாஸ்-மஸ்தான், சமூக ஊடக பிரபலம் ஓர்ரி அவத்ரமணி மற்றும் ஜிஷான் சித்திக் ஆகியோரின் பெயர்கள் வெளிவந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களை நடிகை நோரா ஃபதேஹி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக மறுத்துள்ளார். அதில், ‘நான் இதுபோன்ற போதை பொருள் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் எனது பெயரை குறிவைக்கின்றனர். எனது பெயரையும் புகழையும் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்’ என எச்சரித்துள்ளார்.
ஆனால், ஷ்ரத்தா கபூர் மற்றும் அவரது சகோதரர் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இவை அனைத்தும் தற்போதுள்ள விசாரணைத் தகவல்களே தவிர, அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் அல்ல. விரைவில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார்கள். போதைப் பொருள் கும்பலின் டிஜிட்டல் சாதனங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பயண விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தனர்.
