×

ஓடிடியை நோக்கி உலக சினிமா

உலக சினிமாவே ஓடிடியை நோக்கி நகரும் நிலைக்கு வந்துள்ளது. இது சினிமா வரலாற்றில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. சினிமா என்றாலே தியேட்டர்கள்தான் என்ற நிலை மாறிவிட்டது. இணையதளத்தில் உள்ள டிஜிட்டல் நிறுவன தளத்தில் (ஓடிடி) படங்கள் வெளியாவது அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்புக்கு பிறகு உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைத்துறையினருக்கும் சினிமா ரசிகர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது ஓடிடி தளம். இந்த ஆண்டில் ஹாலிவுட் படங்கள் மட்டும் 41 படங்கள் வரை ஓடிடியில் வெளியாகிறது. இதில் 26 படங்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. 

இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட அதிக படங்கள் தயாரிக்கும் நாடுகளும் ஓடிடியின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. இந்நாட்டு படங்கள் சமீபத்தில் அதிகமாக ஓடிடியில் ரிலீசாகியுள்ளது. இந்த மாற்றத்தை நோக்கிதான் இந்திய சினிமாவும் இப்போது நகர தொடங்கியுள்ளது. இந்த லாக்டவுன் சமயத்தில் மட்டும் இந்தியாவில் 48 சதவீதம் பேர் ஓடிடியில் படம் பார்க்கிறவர்களாக மாறியுள்ளனர் என புள்ளி விவரம் கூறுகிறது. தியேட்டர்கள் மூடப்பட்டது மட்டுமே இதற்கு காரணம் இல்லை. விரும்பிய நேரத்தில் படம் பார்ப்பது, போக்குவரத்து தொல்லை இல்லாமல் வீட்டிலேயே பார்ப்பது, குறைந்த செலவில் பல படங்கள் பார்ப்பது என பல காரணங்களை குறிப்பிடலாம்.

படங்களை உருவாக்கிவிட்டு, அதை வெளியிட முடியாமல் தவித்து வரும் தயாரிப்பாளர்களுக்கும் ஓடிடி தளம் பெரும் லாபகரமான தளமாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த குலோபோ சீதாபோ, வித்யா பாலன் நடித்த சகுந்தலா தேவி, தேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்த குஞ்சன் சக்ஸேனா, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படம் தில் பேச்சாரா உள்ளிட்டவை ஓடிடியில் வெளிவந்தன.  இப்போது அஜய் தேவ்கன் நடித்துள்ள புஜ், அக்‌ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள லட்சுமி பாம்ப், அபிஷேக் பச்சன் நடித்துள்ள தி பிக் புல், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள யாரா உள்பட பல படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. அதேபோல் தமிழில் ஆர்கே நகர், லாக்கப், பொன்மகள் வந்தாள், பெண்குயின், காக்டெயில் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியானது. இப்போது சூர்யாவின் சூரரைப் போற்று படமும் அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் வெளியாகிறது. 

குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கவும் தரமான கதை, திரைக்கதையுடன் கூடிய படங்கள் உருவாகவும் இந்த ஓடிடி தளம் வழியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன் மூலம் ஹீரோக்களின் சம்பளமும் குறைந்து தரமான படங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறிய படங்கள், நல்ல விலையுடன் விற்கப்படுவதுடன் பெரிய படங்களும் நல்ல லாபம் சம்பாதிக்கின்றன. அஜய் தேவ்கன் நடித்துள்ள புஜ், ரூ.110 கோடிக்கும் அக்‌ஷய்குமாரின் லட்சுமி பாம்ப் ரூ.125 கோடிக்கும் விலைபோயுள்ளது. சூர்யாவின் சூரரைப் போற்று ரூ.40 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 

இது பற்றி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது, ‘தியேட்டரில் படம் பார்ப்பது தனி அனுபவம். அதை மறுக்கவே முடியாது. இப்போது ஓடிடி தளம் என்பதும் தவிர்க்க முடியாத மாற்றம்தான். இதனால் பைரசி பெருமளவில் ஒழியும்’ என்றார். இயக்குனர் பாரதிராஜா கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாற்றுவழிதான் ஓடிடி. தியேட்டரில் டிக்கெட் விலை, பாப்கார்ன் விலை எல்லாம் பார்த்து மக்கள் பயப் படுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியில் இத்தகைய மாற்று தளங்களை தவிர்க்க முடியாது’ என்றார்.

தயாரிப்பாளர் வசமாகும் திரையுலகம்
முன்பு சினிமா உலகில் தயாரிப்பாளர்களை முதலாளி என்றுதான் ஹீரோக்கள் அழைப்பார்கள். தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில்தான் அப்போது சினிமா இருந்தது. படிப்படியாக இது ஹீரோக்கள் கைக்கு மாறியது. இதையடுத்து பல கோடிகளில் ஹீரோக்கள் சம்பளம் வாங்கும் நிலை ஏற்பட்டது. இப்போது ஓடிடி தளம் வந்ததால், தயாரிப்பாளர்கள் தங்களது படைப்பை உரிய விலைக்கு விற்க முடியும் என்ற நிலை வந்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் உருவாக்கி, ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு அதற்குள் சம்பளம் பேசப்படும் நிலை உருவாகும் சூழல் உள்ளது. இதனால் சினிமா மீண்டும் தயாரிப்பாளர் வசமாகும். 

Tags : World Cinema ,
× RELATED ‘சென்னை உலக சினிமா விழா’வில் கலைஞரின்...