கந்துவட்டி தாதா விட்டல் ராவிடம் வட்டிக்கு கடன் வாங்கிய ரஞ்சித், ஒரு கோடியை தொட்டுவிட்ட கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் கலங்குகிறார். இதனால் அவரது மனைவி மெகாலி மீனாட்சியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோம் என்று விட்டல் ராவும், அவரது அடியாட்களும் மிரட்டுகின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. ‘மறுமலர்ச்சி’, ‘பீஷ்மர்’ ஆகிய படங்களுக்கு பிறகு ரஞ்சித் இதில் கடனாளியாகவே மாறி, குடும்பத்தை காப்பாற்ற முடியாத கையறு நிலையில், குணச்சித்திர நடிப்பில் கலங்க வைக்கிறார்.
அவரது மனைவி மெகாலி மீனாட்சி, மகள் மவுனிகா, மகன் நீலேஷ் நடிப்பு இயல்பு. கந்துவட்டி கொடுமைக்காரன் கேரக்டரில் விட்டல் ராவ் கவனிக்க வைக்கிறார். புதுப்பேட்டை சுரேஷ், கதிரவன் நடிப்பு யதார்த்தம். விஜய் சேதுபதியின் ‘வாய்ஸ்’ குறிப்பிடத்தக்கது. கடன் தொல்லையால் குடும்பம் தற்கொலை செய்வது எவ்வளவு வலியை கொடுக்கும் என்பதை இயக்குனர் வெங்கட் ஜனா உருக்கமாக சொல்லியிருக்கிறார். சூர்யகாந்தியின் கேமரா விறுவிறு. சுனில் லாசரின் பின்னணி இசை கூடுதல் பலம். மெதுவாக நகரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது.

