×

திருநீறு செய்முறை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவ.சதீஸ்குமார்

திருநீறு என்பது பசுஞ்சாணத்தைச் சிவநெருப்பில் இட்டு எரித்துக் கிடைக்கும் சாம்பல்தான் எனினும் அவற்றைத் தயாரிக்கின்ற செயல்முறைகளால் கற்பம், அனுகற்பம், உபகற்பம், அகற்பம், உள்ளிட்ட பெயர்களைப் பெறுகின்றன. அதற்காகப் பயன்படுத்தப்படும் சாணமானது எல்லாப் பசுக்களிலிருந்தும் கிடைக்கின்றவற்றைப் பயன்படுத்தாமல் அதற்கென, சில தூய்மை நெறியுடைய பசுவின் சாணத்தையே பயன்படுத்த வேண்டும். இதனை,

‘‘ஈனமுறு கன்னியாக் கொடுவை செவி கொம்புவால்
இவையறுதன் முதுமை சூலான்,
இழிதரு மலர் புதித்திடு மான், மலட்டான்,
இலக்கணமிலாத வானோய்,
தானுடைய தேனுவுடன், ஈன்ற பதினைந்துநாள்
தன்னிலுட்படு பசுக்கள்,
தழை செவிடு குருடு, முடமாய்ந்த கன்றுடைய கோச்
சாற்றுமிக குற்றமது எலாம்
ஊனமுளது, இவையலது நற்றேனு பூசனைசெய்
துறைகொளும் பிரம மனிவால்
உயர் கற்பம், அனுகற்பம், உகற்பம், மறைநூல்
உறைத்திடும் கற்ப  முறையல்  
தேனுமனுவோதி நல் விபூதி விளைவிக்கச்    
சிவாகமம் தனிலுரைத்தாய்
சிவசிதம்ப          ரவாச சிவகாமியுமை நேச    
செகதீச நடராசனே’’
(நடராச சதகம், பா.77)


-  என்ற பாடலில் கன்று ஈனாதது, உடலுறுப்புகள் குறையடையது முதலிய பசுக்களும் காது, கொம்பு மற்றும் வால் இல்லாத பசுக்களும் வயது முதிர்ந்தது, கருவுற்றிருப்பது, மலத்தை உண்பது, மலடானது. இவற்றின் சாணத்தைத் திருநீற்றிற்குப் பயன்படுத்தக் கூடாது என்றும், கன்றும் ஈன்று பதினைந்து நாட்கள் ஆகாதது, காது கேளாதது, கண்பார்வையற்று, முடமானது உள்ளிட்ட பசுக்களின் சாணத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும், இக்குறைகள் இல்லாத நல்ல பசுக்களின் சாணத்தை மட்டுமே பயன்படுத்தி கற்பம் முதலான திருநீற்றின் வகைகளைச் சிவமந்திரம் ஓதித் தயாரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிவாகமம் ‘‘பசுக்களில், கரடு முரடாகவும் மேடு பள்ளமாகவும் விளங்கும் உடலையுடையதும், பயித்தியம் பிடித்ததும், கட்டுக்கு அடங்காமல் கண்டபடி காடுமேடுகளில் திரிவதும், சேற்றிலும் புழுதியிலும் புரள்வதும், சூடுகள் போட்டதும், கன்றிடாத கிடாரியும், உடல் மெலிந்ததும், கன்று இறந்துபோனதும், பொறுமை அற்றதும், பால் கறவை நின்றுபோனதும், இனிமேல் கன்று ஈனுவதற்குத் தகுதியற்ற கிழப்பசு மற்றும் நோய்ப்பசு முதலியனவும், புல் தின்னாததும், மயிர், துணி, எலும்பு, மற்றும் மலம் இவைகளைத் தின்பதும், கருவுற்றதும் அண்மையில் கன்று போட்டதும், ஆகிய பசுக்களின் சாணம் திருநீற்றுக்கு ஆகாது’’ என்று கூறுகிறது.

மேலும், ‘‘இரண்டு கன்றுகளை ஒரே காலத்தில் ஈன்றதும், முதிர்ந்த கன்றினை உடையதும், வால், காது மற்றும் கொம்பு அறுபட்டதும் ஆகாது’’ என்றும் கூறுகிறது. இவை சிவாவகம் கூறும் விதிமுறைகளாகும். ‘‘பசுமையான அறுகம்புல்லையும், பங்குனி மாதத்தில் விளையும் சம்பா நெல்லின் வைக்கோலையும் உண்பனவே திருநீற்றுக்குப் பயன்படுவனவாம். புளித்த கழுநீர், ஊர்ப்புறங்களில் மக்கள் மலம் முதலியன கழுவும் குட்டைகளின் நீர், சாக்கடை நீர் முதலியனவற்றைக் குடிப்பனவும் ஆகிய பசுக்கள் ஆகா’’ என்று மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் குறிப்பிட்டுள்ளார்.

நெருப்பிடும் முறை

காற்றோட்டமும் ஒளியும் உள்ள தூய இடத்தில் நெல் உமியை நான்கு அங்குல உயரம் பரப்பி, அதன்மேல் சாண உருண்டைகளை சிவமந்திரம் சொல்லிக்கொண்டே கீழே விழாதவாறு ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். அடுக்கிய பின்னர் அவற்றின் மீது நெல்உமியைப் பரப்பி, மீண்டும் உருண்டைகளை அடுக்கி மேலும் நான்கு விரலளவு உமியைப் பரப்பி கீழே விழாத வகையில் சரிசெய்ய வேண்டும். அதன்மீது, கற்பூரதீபம், சிவாலய திருவமுதுக்கூடம், தூண்டா மணிவிளக்கு அல்லது வேள்வித்தீ இவற்றிலிருந்து ஒன்றின் நெருப்பை எடுத்து வந்து, அதனை சிவாக்கினியாகக் கருதி, 108 முறை சிவமந்திரம் சொல்லிக்கொண்டே ஈசானத்திக்கின் அடிப்பகுதியில் நெருப்பினை மூட்ட வேண்டும். (ஈசானத்திக்கு என்பது வடகிழக்கு மூலையாகும்).

முழுவதும் எரிந்து செந்நிறமாகக் காட்சி தரும் வரையில் வடக்குத்திசை நோக்கி அமர்ந்து சிவமந்திரம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். நெருப்பு நன்றாக மூண்டபிறகு, நெருப்பிற்கு நறும்புகை (தூபம்), சுடரொளி (தீபம்), சுவையமுது (நைவேத்தியம்) மற்றும் பேரொளி (கற்பூர தீபம்) வழிபாடுகள் செய்ய வேண்டும். பிறகு, ‘‘ஒளி வடிவான இறைவனே! இந்த உலகம் உய்வுபெறவும், அடியேன் மண்ணுலக மற்றும் விண்ணுலக இன்பங்களை அடையவும், நற்பேறுகள் அனைத்தும் கிடைக்கவும் மங்கலப்பொருளாகிய திருநீறு நன்றாக விளையத் திருவருள் செய்க’’ என்று வேண்டுதல் செய்து அவ்விடத்தைவிட்டு விலக வேண்டும்.

அவ்வப்போது சென்று, காற்றினால் நெருப்பு அணையாமலும் அடுக்கி வைத்துள்ள குவை கலையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். திருநீறு தயாரிக்க நெருப்பிட்டுள்ள இடத்திற்கு ஒன்பது முழச் சுற்றளவில் தூய்மையில்லாதவர்களோ, தீண்டல் பெற்றவர்களோ, நாத்திகர்களோ, அணுகாமல் பார்த்துக்கொள்வது மிகவும் இன்றியமையாதது. சாணம் எரிந்துமுடிந்து வெப்பம் முழுவதுமாகத் தணிந்தபின் தொண்ணூறு நாழிகை (36 மணி நேரம்) கழித்து, அதிகாலைப்பொழுதில் நீராடி, முன்னர் சாணம் எடுப்பவருக்குச் சொல்லப்பட்ட விதிமுறைகளில் கூறியவாறு நித்யபூசை முதல் சிவாலய வழிபாடுவரை அனைத்துச் செயல்பாடுகளையும் முடித்துக்கொண்டு, திருநீற்றுக் குவையை சிவபரம்பொருளாகக் கருதி, நறும்புகை (தூபம்), சுடரொளி (தீபம், சுவையமுது (நைவேத்யம்) பேரொளி வழிபாடு (கற்பூர தீபாராதனை) முறையே செய்ய வேண்டும்.

ஈசான மூலையிலிருந்து (வடகிழக்கு) பிரிக்க வேண்டும். கரிசல், பதரின் சாம்பல், செந்நிறமுடைய சாம்பல் போன்வற்றை நீக்கிவிட்டு நன்றாக விளைந்த உருண்டை ஒவ்வொன்றையும் திருவைந்தெழுத்தைத் செபித்துக்கொண்டே புதிய மண்பாண்டத்தில் அடுக்கிக் கொள்ள வேண்டும்.

மறுபுடம் இடுதல்

இவ்வண்ணம், எடுத்து வைத்த உருண்டைகளை உடைத்து, வாய் அகலமான பாத்திரத்தில் புதிய மெல்லிய வெள்ளை ஆடையைக் கட்டி, திருநீற்றினை வடிகட்ட வேண்டும். மண், மணல் போன்றவற்றை நீக்கிவிட்டு, நயமான திருநீற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு இளங்கன்றினை உடைய பசுவின்பாலை விட்டுப்பிசைந்து வெயிலிலும் பனியிலும் வைத்து ஒரு வார காலம் உலர்த்த வேண்டும். பிறகு, சலித்த நெல்உமி மற்றும் உலர்ந்த வில்வஇலை ஆகியவற்றைப் பரப்பி மறுபடியும் நெருப்பிட்டு, நன்றாக வெந்தபிறகு, ஒரு வாரம் கழித்தபின் சாம்பற் குவையைப் பிரிக்க வேண்டும்.

பிரிக்கின்ற நாள் மாத சிவராத்திரி நாளாக இருப்பது சிறப்புடையது. பௌர்ணமி, நான்காம் பிறை (சதுர்த்தி), ஆறாம்பிறை (சஷ்டி) ஆகிய பிறை (திதி) நாட்களிலோ அல்லது திருவாதிரை, பூசம் மற்றும் கார்த்திகை ஆகிய விண்மீன் (நட்சத்திரம்) உடைய நாட்களிலோ பிரிப்பதும் நல்லது. இப்படி, மறுபுடம் இடுவதால் திருநீறானது வெண்மை நிறத்திலும், நுண்ணிய துகள்கள் உடையதாகவும், நீரில் குழைக்கின்றபோது நிறம் மாறாமலும் இருக்கும். இவ்வண்ணம், மறுபுடம் இடும்போது புகைசூழாமல் இருக்க வேண்டும். அதற்கு காற்றோட்டமுள்ள வெளியிடத்தைத் தேர்வு செய்து மறுபுடமிடுவது நல்லது. மறுபுடமிட்டு எடுக்கப்படும் திருநீறு புகைநிறமுடையதாகவோ, கருப்பு நிறமுடையதாகவோ இருந்தால் மார்கழி, தை மற்றும் மாசி மாதங்களில் நாள் தோறும் பனியில் வைத்தால் வெண்மை நிறத்தை அடையும்.

இவ்வாறு, மறுபுடமிட்டு எடுக்கப்படும் திருநீற்றை மெல்லிய துணியால் வடிகட்டி ஒரு புதிய குடத்தில் நிறைக்க வேண்டும். பிறகு சாணமிட்டுத் தூய்மை, செய்த ஓர் இடத்தில் அந்தக் குடத்தை வைத்து, குடத்தினுள் நறுமணம் மிக்க மலர்களைச் இட்டு, ஒரு தூய்மையான துணியால் குடத்தின் வாயைக் கட்ட வேண்டும். இப்படிச் சில நாட்கள் மட்டுமே வைக்க வேண்டும். இதனால் மலரில் உள்ள, நறுமணம் திருநீற்றிற்கும் பரவும். இந்த நறுமணம் சேர்க்கும் முறையை வாரியார் சுவாமிகள் கூறும் போது, ‘‘புதிய பாண்டத்துள் திருநீற்றை வைத்து திருநீற்றுப் பதிகத்தை ஓதுக, அதில், மல்லிகை, முல்லை பாதிரி, சிறுசண்பகம் முதலிய நறுமலர்களை சிவமந்திரம் கூறி இட்டு, புதிய ஆடையைப் பாத்திரத்தின் வாயில் கட்டி, இது நமது அளவற்ற ஐசுவரியம் என்று கருதி வைக்க வேண்டும்’’ என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட மலர்களுடன் வில்வம், குங்குமப்பூ, வெட்டிவேர், பச்சைக் கற்பூரம் போன்ற பொருட்களை நறுமணத்திற்காகச் சேர்த்துக் கொள்ளலாம்.

Tags : Thiruneeru ,
× RELATED பழநியாண்டவரும்.. திருநீறும்…