மும்பை: ‘ராமாயாணம்’ பான் இந்தியா படத்தின் கிளிம்ப்ஸ் நேற்று இந்தியாவின் 9 நகரங்களில் வெளியானது. ஆமிர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தை இயக்கியவர் நிதிஷ் திவாரி. இவரது இயக்கத்தில் ‘ராமாயாணம்’ படம் 18 மொழிகளில் உருவாகிறது. நமித் மல்கோத்ரா இப்படத்தை தயாரிக்கிறார். இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, அனுமாராக சன்னி தியோல், ராவணனாக யஷ் நடிக்கிறார்கள். 2 பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக ஒரு வருடம் தேவைப்படுவதால் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதன் கிளிம்ப்ஸ் எனப்படும் சிறு முன்னோட்டம் நேற்று டெல்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா, ஐதராபாத், பெங்களூரு உள்பட 9 நகரங்களில் தியேட்டர்களில் வெளியானது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இசையமைக்கிறார்.

