
42 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், தனது சொந்த வாழ்க்கையின் விதிகளை மீண்டும் எழுத தொடங்கினால் என்ன ஆகும் என்ற கதையில் ரேணு திரிபாதியாக மாதவனும், மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கும் ’ஆஃப் ஜெய்சா கோய்’ (உன்னைப் போல் ஒருவர்) என்ற படத்தின் டிரைலரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலையில் நமக்கு கிடைக்கும் துணை, காதல், தோழமை ஆகியவற்றை கொண்டாடும் ஃபேமிலி டிராமாவாக படம் உருவாகியுள்ளது. ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
விவேக் சோனி (மீனாட்சி சுந்தரேஸ்வர்) இயக்க, தர்மாடிக் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. மாதவன் கூறுகையில், ‘நான் நடித்த மிகவும் சிக்கலான கேரக்டர்களில் ரேணு திரிபாதியும் ஒருவர். இப்படம் அதிரடியாக இருக்காது. ஆனால், பார்வையாளர்களை ஆழமாக பாதிக்கும் வகையில் இருக்கும்’ என்றார். அவரது ஜோடியாக நடித்துள்ள பாத்திமா சனா ஷேக் கூறும்போது, ‘இப்படத்தில் நடித்தது நான் செய்த பாக்கியம். காரணம், மாதவனின் தீவிர ரசிகை நான். வலிமை மற்றும் நம்பிக்கையை ஆண்மையுடன் தொடர்புபடுத்துகிறோம்.
இதில் அந்த குணங்களை மென்மை மற்றும் பெண்மையுடன் வெளிப்படுத்துகிறேன். அன்பின் வெவ்வேறு வடிவங்களை உணர்ந்த எனக்கு இந்த மது போஸ் கேரக்டர் ஒரு தெரபியாக அமைந்தது’ என்றார். வரும் ஜூலை 11ம் தேதி ஒளிபரப்பாகும் இப்படத்தை கரண் ஜோஹர், ஆதார் பூனவல்லா, அபூர்வா மேத்தா, சோமன் மிஸ்ரா தயாரித்துள்ளனர். ‘தங்கல்’ என்ற இந்தி படத்தில், ஆமிர் கான் மகள் வேடத்தில் பாத்திமா சனா ஷேக் நடித்திருந்தார். தற்போது தமன்னாவின் முன்னாள் காதலனும், பாலிவுட் நடிகருமான விஜய் வர்மாவை அவர் தீவிரமாக காதலித்து வருகிறார்.

