
தெலுங்கு திரைத்துறையினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா பங்கேற்றனர். அப்போது விரேந்திர சேவாக் பேசுகையில், ‘நான் தென்னிந்திய படவுலகின் தீவிர ரசிகன் என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இங்கு வெளியான நிறைய படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தெரியாததால், அப்படங்களை இந்தியில் பார்ப்பேன். எனக்கு மிகவும் விருப்பமான தெலுங்கு நடிகர், மகேஷ் பாபு. அதுபோல் அல்லு அர்ஜூன், பிரபாஸ் ஆகியோரை எனக்கு பிடிக்கும். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ என்ற படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்து வியந்துள்ளேன். நான் ரிட்டையர்டு ஆகிவிட்டதால், வேலை செய்வதற்கு ஒன்றும் இல்லை’ என்றார். மகேஷ் பாபு கடைசியாக ‘குண்டூர் காரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் நடிக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். ஹீரோயினாக முன்னாள் உலக அழகியும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா, வில்லனாக பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கின்றனர். கடைசியாக அல்லு அர்ஜூன் ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்திருந்தார். இப்போது அட்லீ இயக்கும் பான்வேர்ல்ட் படத்தில் நடிக்கிறார். இதில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். பிரபாஸ் கடைசியாக ‘கல்கி 2898 ஏடி’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

