
தற்போது அஜித் குமார் ஆசியன் லீ மென்ஸ் கார் ரேஸ் போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுதொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது. இப்பயணத்தை ஏ.எல்.விஜய், ‘சிறுத்தை’ சிவா இணைந்து ஆவணப்படமாக உருவாக்கி வருகின்றனர். ெபாதுவாக ஆவணப்படங்களுக்கு பின்னணி இசை என்பது மிகவும் முக்கியம் என்பதால், சாம் சி.எஸ் இசை அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாம் சி.எஸ் அளித்த பேட்டியில், ‘அஜித் குமாரின் அடுத்த படத்துக்கு நான் இசை அமைக்கவில்லை. ஆனால், அவருடன் 100 சதவீதம் பணியாற்றுகிறேன். அது என்ன என்பது பற்றி அடுத்தடுத்து உங்களுக்கு தெரியவரும்.
நான் மூணாறில் படித்துக் கொண்டிருந்தபோது, ‘தீனா’ படத்தில் இடம்பெற்ற ‘சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்’ என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அஜித் குமாரை நேரில் பார்த்தேன். சக மனிதர்களிடம் இனிமையாக நடந்துகொள்வது அவரது இயல்பிலேயே இருக்கிறது. இந்த குணத்தினால்தான் அவர் சிறந்த மனிதராக இருக்கிறார். திரையுலகில் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி சிகரத்துக்கு வந்த அவரை போன்றவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன். தற்போது நான் பல்வேறு மொழிகளில் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்து பிசியாக இருக்கிறேன்.
இப்படி மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டே பணியாற்றுவதை மிகவும் விரும்புகிறேன். எந்த நிலையிலும் எனக்கு சலிப்பு ஏற்படவில்லை. பாடல்கள் எழுதுவது, பின்னணி பாடுவது, புத்தகம் எழுதுவது என்று என்னை எப்போதுமே பிசியாக வைத்துக்கொள்கிறேன். இன்று எனது இசையில் ‘ரெட்ட தல’ என்ற அருண் விஜய் நடித்த படமும், ‘விருஷபா’ என்ற மோகன்லால் நடித்த பான் இந்தியா படமும் வெளியாகியுள்ளது. கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன், கங்கனா ரனவத் நடிக்கும் பான் இந்தியா படம் உள்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்திருக்கிறேன்’ என்றார்.

