×

அன்னப் பஞ்சம் போக்கும் அன்னபூரணி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருச்சோற்றுத்துறை

சோற்றுத்துறை வயல்களின் சாய்ந்த செந்நெற்கதிர்களின் மீது சூரியன் தன் செங்கிரணங்களை வீச வயலே பொன் வேய்ந்த தகடாக ஜொலித்தது. சீரடியார்கள் அருளாளத் தம்பதியரின் திருமடத்தின் முன் நின்று பஞ்சாட்சரத்தை சொல்ல சோற்றுத்துறையே சிவநாமச்சாரலில் ஓயாது நனைந்து, நெக்குருகி நின்றது. ஒப்பிலா சோற்றுத்துறையனை, அடிமுடி காணா சிவநேசனை அந்த திவ்ய பக்த தம்பதியர் தம் மனச்சிறைக்குள் முடிந்து வைத்தனர். நோக்கிய இடமெல்லாம் நாதனின் திருவுருவே எனும் இணையிலா நிலையில் ஒருநிலையாக நின்றனர்.

சீரடியார்களின் அடிபரவி தம் சிரசில் அவர்கள் திருவடி சூடி பேரானந்தம் பொங்க வாழ்ந்தனர். ஐயிரண்டு நாளும் அடியார்களுக்கு அன்னமிடும் வேலையே தாம் வையம் புகுந்ததின் பேறு என்று இனியர்களாக விளங்கினர். விரித்த கைகளில் எதுவுமற்று இருப்பதெல்லாம் ஈசனுக்கே என ஈந்து ஈந்து உய்வுற்றனர். கயிலைநாதனைத் தவிர கிஞ்சித்தும் வேறெந்த எண்ணமும் இல்லாது இருந்தனர். ஈசன் இன்னும் அவ்விருவரின் மகோன்னதத்தை மூவுலகும் அறியும் வண்ணம் விளையாடத் தொடங்கினார்.

காலம் அதிவேகமாகச் சுழன்றது. சமையல் கலன்கள் காலியாக மாறின. சோற்றுத்துறையே சோறுக்காக அலைந்தது. அருளாள தம்பதியர்கள் மெய்வருந்தி சோறுண்ணாது துறையுள் உறையும் ஈசனின் சந்நதியே கதி என்று கழித்தனர். சிவனடியார்களும் சூழ்ந்து நின்று அவர்களை ஆற்றுப்படுத்த துக்கம் இன்னும் மடைஉடைந்த வெள்ளமாகப் பெருகியது.

ராப்பகல் அறியாது கண்கள் மூடி தவமிருந்தனர். தீந்தவம் சுட்டெரிக்கும் சூரியனையே உரச, ஆதவன் ஓடி ஒளிந்தான். கயிலைநாதன் தம் அருட்கண்களை விரித்துப்பார்த்தான். குடம் குடமாக அரனின் அருளைக் கொட்டித் தீர்த்தான். அவ்விரு அடியார்கள் முன்பும் எடுக்க எடுக்க குறையாத அட்சயபாத்திரத்தை அவர்கள் முன் பரப்பினான், சோற்றுத்துறை சிவபெருமான். அன்னத்தை அட்சயபாத்திரம் சோவெனப் பொழிந்தது. ஓயாது ஓதனத்தை சுரந்தது. அக்காட்சியைக் கண்ட அருளாள தம்பதியர் ஓதனவனேசா...

ஓதனவனேசா... என அவன் நாமத்தைச் சொல்லி ஆனந்தக் கூத்தாடினர். (ஓதனம் என்றால் அன்னம் என்பது பொருள்) மறைந்திருந்த வருணன் அதிவேகமாக வெளிப்பட்டான். அடை மழையால் ஆறுகளும். தாமரைத் தடாகங்களும் நிரம்பி வழிந்தன. இயற்கை பொய்த்தாலும் இணையிலா ஈசனின் தாள் பணிய அரனின் அருட்கை துணை நிற்கும் என திவ்யதம்பதியை முன்னிறுத்தி விளையாடினார்.

அன்றிலிருந்து அட்சயப் பாத்திரம் கடலாகப் பொங்கியது. அவ்வூரை நெருங்கியோரை வயிறு நிறையச் செய்தது. ஈசன் இன்னும் ஒரு படி மேலேபோய் அவ்வூரையே சோற்றுக்கடலில் ஆழ்த்திவிடத் துணிந்தார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தது. நெல்மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பது பார்த்த அடியார்களும், பக்தர்களும் நமச்சிவாய... நமசிவாய... என விண்பிளக்க கோஷமிட்டனர்.

பச்சைவயலுக்கு பொன்காப்பிட்ட செந்நெற்கதிர்கதிர்களுக்கு மத்தியில் வெண்முத்துக்கள் கோர்த்த மாலைபோல் அவ்விடம் ஒளிர்ந்தது. ஊரார் வயலில் இறங்கி கூடைக்குள் சூடாக அன்னப்பருப்பை நீவி யெடுக்க அழகாகக் கூடையில் சென்று அமர்ந்தது. அன்ன மலர்கள் மலையாகக் குவிந்தது. ஈசனின் பேரணையாலும், கௌதமர் எனும் மகாகுருவின் அண்மையாலும் அவ்வூர் வளமாகத் திகழ்ந்தது.

திருச்சோற்றுத்துறை எழில்சூழ் குடமுருட்டியில் நீர் சுழித்துக்கொண்டோட தென்றல் தோள் தொட்டுச் செல்லும் அழகிய கிராமம். நான்கு வீதிகளோடும், இரு பிரகாராங்களோடும் கிழக்குப் பார்த்த கோயில் இன்னும் எழிலாக்கு கிறது. கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கருவறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாளத் தம்பதியினர் அமர்ந்திருக்கிறார்கள்.

சோறு என்பது உண்ணும் சோறு என்று பொதுப்பொருள் உண்டு. அதே நேரம் சோறு என்பது வெண்மையின் அடையாளம். பேரின்பப் பெருக்கெடுக்கும் ஊற்று என இருவேறு பொருளுண்டு. அடியார் மனதிற்கிணங்க பேரின்பத்தையும், உயிர்காக்கும் சோறும் இட்டு இன்பம் பெருக்குவான் இப்பெருமான். அப்பரடிகள் ‘‘சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக்கட் சேரலாமே’’ என ஆனந்தம் பொங்கப் பேசுகிறார்.

கோயிலின் வெளிப்பிரகாரத்தே அம்பாள் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். எழில்கொஞ்சும் தென்னந் தோப்பிற்கு நடுவே நின்றிருக்கிறாள் அன்னை. சோறூட்டும் அன்னையாதலால் இவளுக்கு அன்னபூரணியெனும் நாமத்தோடு திகழ்கிறாள். நெடிய திருமேனி கொண்டவள் குளிர்பார்வையால் மனதை நிறைக்கிறாள். தஞ்சாவூர் - திருவையாறு பாதையில் திருக்கண்டியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் திருச்சோற்றுத்துறை அமைந்துள்ளது.

தொகுப்பு: கிருஷ்ணா

Tags : Annapoorani ,
× RELATED மண்ணாங்கட்டியை முடித்தார் நயன்தாரா