×

அழகான குழந்தைப் பேறுக்கு அமைய வேண்டிய பொருத்தம்

அத்தனை பொருத்தங்களிலும் மிக முக்கியமானது இப்போது நாம் பார்க்கப் போகும் யோனிப் பொருத்தம். உடற்பசிக்குக் காரணம் காமம். காமத்தின் அடிப்படை, அடுத்த தலைமுறை. இது இயற்கையின் சிருஷ்டித்தலுக்கான தொடர் முயற்சி. இதில்கூட எந்த நட்சத்திரத்துக்கு யார் பொருந்துவார்கள் என பிரித்து வைத்திருக்கிறது ஜோதிடம். வான்வெளியில் நட்சத்திரக் கூட்டங்கள் கணக்கிட முடியாத அளவுக்கு உள்ளன. நாம் சொல்லும் இருபத்தேழு நட்சத்திரங்களும்கூட, தனித்தனி நட்சத்திரங்கள் அல்ல. ஒவ்வொன்றுக்குள்ளும் உள்ள கூட்டமைப்பான நட்சத்திரங்களே ஒரு பெரிய நட்சத்திரமாக காட்சியளிக்கிறது.

பல நெல்மணிகள் சேர்ந்து ஒரு கதிராகக் காட்சியளிப்பது போல நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பெரிய நட்சத்திரமாகத் தெரிகிறது. இப்படி ஒன்றுகூடும்போது அந்த நட்சத்திரக் கூட்டம் ஒரு உருவத்தைத் தருகிறது. அந்த உருவத்தை அடிப்படையாகக் கொண்டே உயிரினங்களின் உடற்கூறும், மனக்கூறும் அமைகின்றன. இதைப் பொறுத்துத்தான் இந்தப் பொருத்தம் அமையும். ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும், ராசிக்காரர்களுக்கும் உண்ணும் விதம், உடுத்தும் விதம், உறங்கும் விதம், சிரிக்கும் விதம், பேசும் விதம் என எல்லாமே வித்தியாசப்படும். அதுபோல தாம்பத்ய உறவில் அவர்கள் காட்டும் அணுகுமுறையும் வித்தியாசப்படும். சிலருக்கு பேசிக் கொண்டே சாப்பிடப் பிடிக்கும்; சிலர் நின்று கொண்டே சாப்பிடுவார்கள்.

இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் ரசனைகள் மாறுபடுவதெல்லாம்கூட நட்சத்திரங்கள் செய்யும் மாயைதான். அப்படித்தான் தாம்பத்ய உறவும். கவலையோடு ஒரு முதிய தம்பதியினர் என்னைப் பார்க்க வந்தனர். ‘‘எங்க பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சி பத்து நாள்தான் ஆகுது. நிச்சயதார்த்தம் ஆனதுக்கு அப்புறம் கூட நல்லாத்தான் இருந்தா. கல்யாணத்தை விமரிசையா பண்ணோம். கல்யாணம் முடிஞ்சும்கூட எல்லோர்கிட்டயும் சகஜமாத்தான் பேசினா. அப்புறம் ஒரு வாரம் கழிச்சு, ‘நான் அங்க போகவே மாட்டேன்’னு எங்க வீட்டுக்கு வந்துட்டா. ஏதோ எங்களைப் பிரிஞ்ச ஏக்கத்தால இப்படி பேசறாள்னு நினைச்சோம். மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பலாம்னு பேச்சை எடுத்தாலே சொணங்கிப் போறா. ஏதும் பிரச்னையான்னு கேட்டாகூட எதுவும் சொல்ல மாட்டேங்கறா’’ என்று கண்ணீரோடு பேசினர்.

‘‘பொருத்தம் பார்த்துத்தானே கல்யாணம் முடிச்சீங்க?’’

‘‘ஆமாங்க… வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஜோசியர்கிட்ட தான் பார்த்தோம். மாப்பிள்ளை வீட்லயும் பார்த்தாங்களாம். எங்க ஜோசியர் மட்டும், ‘அநேக பொருத்தங்கள் இருக்கு. எண்பது பர்சன்டேஜ் சரியா வரும். ஆனா, ஒரு முக்கியப் பொருத்தம் மட்டும் இல்லை’ன்னு சொன்னாரு’’ என்று முடித்தார் அந்த அம்மா. இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்தேன். அதில் தாம்பத்ய வாழ்க்கையை சுட்டிக் காட்டும் யோனிப் பொருத்தம் இல்லாமல் இருந்தது. பெண் பூச நட்சத்திரம், கடக ராசி. யோனியில் இவர் ஆடு வர்க்கம். பையன் விசாக நட்சத்திரம், துலாம் ராசி. யோனியில் புலி வர்க்கம். ஆணின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது.  ‘‘நீங்க கொஞ்சம் வெளிய இருங்க.

உங்க பொண்ண மட்டும் கூப்பிடுங்க’’ என்றேன். பெண் உள்ளே வந்தார். ‘‘கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. தனியா படுக்க ஆரம்பிச்சிட்டீங்க போலிருக்கே’’ என்று நேரடியாகக் கேட்டேன். அந்தப் பெண்ணின் கண்களில் நீர் வழிந்தது. விம்மியவர் வெடித்து அழத் தொடங்கினார். ‘‘ரொம்ப கடுமையா நடந்துக்கறாரு. அவர்கூட வாழ முடியாது. நான் சாதாரண மனுஷிதான். அவரைப்போல மிருகமில்லை’’ என்றார். சில அறிவுரைகள் கூறி பெண்ணை அனுப்பினேன். பெற்றோரை அழைத்தேன். ‘‘ஆட்டையும் புலியையும் சேர்த்திருக்கீங்களே. பெட்ரூம்ல போய் ஆடுபுலி ஆட்டம்தானே ஆடுவாங்க. உங்க பொண்ணு விருப்பமில்லைன்னு சொல்றாங்க.

அவங்க இஷ்டத்துக்கு விட்ருங்க. எதுல பிரச்னை வரக்கூடாதோ அதுல வந்துடுச்சு. மறுமணம் செய்யற உத்தேசம் இருந்தா, யோனிப் பொருத்தம் சரியா இருக்கற ஜாதகமா பார்த்து சேர்த்துடுங்க’’ என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.  எதற்காக திருமணம் செய்து வைக்கிறார்களோ அங்கேயே பிரச்னை என்கிறபோது என்ன செய்வது? அதென்ன ஆடு – புலி என்று கேட்கலாம். மனம் என்பது குரங்கு மாதிரி என்றால் உடனே நாம் குரங்கு என்று பொருள் கொள்வோமா என்ன? அதுபோலத்தான் இங்கும். குரங்கு எப்படி ஓரிடத்தில் நிலையாக இருக்காது தாவித் தாவி திரியுமோ, அதனுடைய மனம் அலைபாய்ந்தபடி இருக்குமோ, அப்படித்தான் நம்முடைய மனமும் என்றுதானே பொருள் கொள்கிறோம்.

இப்படி மனசை விலங்கினத்தோடு ஒப்பீடு செய்வதுபோல, மோகத்தையும் காமத்தையும் அந்தந்த விலங்கினத்தோடு ஒப்பிட்டுச் சொன்னார்கள். ஜோதிடத்தில் இது மிகப் பெரிய ஆராய்ச்சி. யோனியில் இயல்பு நிலை, இயக்க நிலை என்பதெல்லாம் நட்சத்திரங்களைப் பொறுத்து மாறுபடும். கொஞ்சம் நேர்மையாக யோசித்தால், மனம் என்கிற விஷயத்தைத் தாண்டி நாமும் ஒரு பிராணிதான். நாம் மனிதப் பிராணி; அவ்வளவுதான். ஆகவேதான் இப்படி ஒப்பிட்டு வகைவகையாக பிரித்திருக்கிறார்கள்.

இதில் யோனி என்பது ஒரு குறியீடு; அவ்வளவே! அதாவது ஒரு விலங்குக்குள் ஏற்படும் மோகம் மற்றும் காமத்தை உற்றுக் கவனித்து குறித்து வைத்துக் கொண்டார்கள். அதேபோன்ற மோகத்தின் அளவும், காமத்தின் வீச்சும் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தோரிடம் இருக்கிறது என்று ஒப்பிட்டு ஆராய்ந்தார்கள். அதன் முடிவில்தான் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் விலங்குகளின் பெயரை வைத்தார்கள். அதிலேயே சில குறிப்பிட்ட விலங்குகள் மட்டும் சேரும்போது பொருத்தம் என்றும், மற்றவைக்கு பொருத்தமில்லை என்றும் முடிவாகத் தெரிவித்தார்கள்.

எந்தெந்த நட்சத்திரங்களுக்கு எந்தெந்த விலங்கினத்தின் யோனி என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா?

அஸ்வினி ஆண் குதிரை எனில் சதயம் பெண் குதிரை. பரணி ஆண் யானை எனில் ரேவதி பெண் யானை. பூசம் ஆண் ஆடு எனில் கார்த்திகை பெண் ஆடு. ரோகிணி ஆண் நாகம் எனில் மிருகசீரிஷம் பெண் நாகம். திருவாதிரை ஆண் நாய் எனில் மூலம் பெண் நாய். ஆயில்யம் ஆண் பூனை எனில் புனர்பூசம் பெண் பூனை. மகம் ஆண் எலி எனில் பூரம் பெண் எலி. உத்திரம் எருது எனில் உத்திரட்டாதி பசு. ஹஸ்தம் பெண் எருமை எனில் சுவாதி ஆண் எருமை. சித்திரை ஆண் புலி எனில் விசாகம் பெண் புலி. அனுஷம் பெண் மான் எனில் கேட்டை ஆண் மான். பூராடம் ஆண் குரங்கு எனில் திருவோணம் பெண் குரங்கு. அவிட்டம் பெண் சிங்கம் எனில் பூரட்டாதி ஆண் சிங்கம். இதில் உத்திரட்டாதி மட்டும் கீரிப்பிள்ளை ஆகும். ஒரே இனத்தைச் சார்ந்தவர்களை அவரவர்க்குள்ளாக சேர்த்து வைப்பது நல்லது. பூராட நட்சத்திரத்தில் பிறந்த பையனை திருவோண நட்சத்திர பெண்ணோடு சேர்க்கலாம். பூராடம் ஆண் குரங்காகவும் திருவோணம் பெண் குரங்காகவும் வரும்.

சேர்க்கக் கூடாத இனங்கள் எவையென்றும் பார்ப்போமா?

குதிரையோடு யானையையும், யானையோடு சிங்கத்தையும், ஆட்டோடு குரங்கையும், பாம்பையும் எலியையும், பசுவையும் புலியையும், எலியையும் பூனையையும், கீரியையும் பாம்பையும், மானையும் நாயையும் சேர்க்க கூடாது என்று பழைய நூல்கள் சொல்கின்றன. இதையும் தாண்டி ஆடு, மான் யோனி வரும் நட்சத்திரங்களுக்கு புலியைத் தவிர்ப்பது நல்லது.‘‘காலைலேர்ந்து சாயந்தரம் வரைக்கும் ஒரே சண்டையா இருக்கு. ராத்திரி ஒன்பது ஆயிடுச்சுன்னா வீடே அமைதியா இருக்கும்’’ என்று எங்கேனும் சொல்லக் கேட்டால் அங்கு யோனிப் பொருத்தம் பலமாக இருக்கிறது என்று அர்த்தம். பொருத்தம் இல்லையெனில் என்ன ஆகும்? வெளியில் மனம் தேடத் துவங்கும்.

இந்தப் பொருத்தம் இருக்கும் தம்பதியருக்குள் எல்லா மந்திரங்களையும்விட தலையணை மந்திரம் உடனே வேலை செய்யும். இந்தப் பொருத்தம் இருக்கும் தம்பதியருக்கு அழகும் அறிவும் மிக்க குழந்தைகள் பிறக்கும் என்று துணிந்து சொல்லலாம். இந்தப் பொருத்தத்தை சரியாகப் பார்த்தால், கருச்சிதைவு மற்றும் குறைப் பிரசவத்தைக்கூட தவிர்த்து விடலாம். இந்தப் பொருத்தம் சரியில்லையெனில், திருமணமான உடனே பெண்களில் சிலர் மாதவிடாய் பிரச்னையால் அவதியுறுவார்கள். பொருத்தமற்றவர்களை சேர்க்கும்போது, தம்பதியர் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். முடி உதிர்தல், சரும நோய்கள் வந்து நீங்கும். இந்தப் பொருத்தம் கச்சிதமாக இருந்தால், பெண் பார்க்கும் வைபவத்தின்போதே பரஸ்பரம் கவர்ச்சியும் ஈர்ப்பும் கொள்வார்கள்.

காரணமின்றி, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொள்வார்கள். ‘உன்னைப் பார்த்தபின்புதான் நான் நானாகினேன்’ என்று காதல் மொழிகளைப் பரிமாறிக் கொள்வார்கள். கணவன் – மனைவி ஆனபின்பும் வாழ்க்கையில் கவிதைச் சாரல் வேண்டுமெனில் இந்தப் பொருத்தத்தை சரியாகப் பாருங்கள். ‘‘புருஷன் உன்னை சந்தோஷமா வச்சிருக்காராம்மா?’’ என்று பெரியவர்கள் கேட்கும் கேள்வியே, ‘தாம்பத்ய வாழ்க்கை எவ்வாறு உள்ளது’ என்பதற்கான விசாரிப்புதான் என்பதை மறக்காதீர்கள். நகை, நட்டு, பணம், பண்டம் என்று ஆயிரம் இருந்தாலும்… இந்த சந்தோஷம்தான் இருக்க வேண்டிய சந்தோஷம்; இயற்கையான சந்தோஷம்.

இந்தப் பொருத்தம் பார்த்தலின் மூலமாக பாலியல் குற்றங்களை வெகுவாகக் குறைத்து விடலாம். இந்தப் பொருத்தம் சரியாக அமைந்த திருமண வரம் கிடைத்து, இனிய குழந்தைப் பேறு அடைய வேண்டுமா? அல்லது, இந்தப் பொருத்தம் அமையாதபடி திருமணம் நிகழ்ந்துவிட்டதா? கவலைப் படாதீர்கள். எல்லா சிவாலயங்கள் மற்றும் பெருமாள் கோயில்களிலும் பள்ளியறை என்று ஒன்று இருக்கும். நமக்கு படுக்கையறை போல இறைவனுக்கும் அதை வைத்திருக்கிறார்கள். அர்த்த ஜாம பூஜை முடிந்து சுவாமியின் உற்சவர் சிலைகள் அந்த அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதற்குரிய பூஜைகள் நிகழ்த்தி, உறங்க வைப்பர். இந்து மதத்தில் காமமும் தெய்வீகம்தான் என்பதை உணர்த்தவே இந்த விஷயங்கள். இப்படி அர்த்த ஜாம பூஜை முடித்து பள்ளியறையிலுள்ள உற்சவ மூர்த்தங்களை தரிசியுங்கள். தம்பதியரின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாகும்.

 

The post அழகான குழந்தைப் பேறுக்கு அமைய வேண்டிய பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!