×

வரன் தேடுகிறீர்களா? இதைத் தெரிந்துகொள்ளுங்கள்

சுமார் 40 வருடங்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு ஜோசியர் எனக்குச் சொன்ன செய்தி. எல்லோரும் தங்களுக்கு ஏற்ற மணப்பெண்ணை / மணமகனைத் தேடுகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு என்ன விதமான வாழ்க்கை அமையும் என்பது அவர்கள் ஜாதகத்துக்குள் இருக்கிறது. அதே அமைப்பில்தான் அமையுமே தவிர, அவர்கள் விருப்பப்பட்டபடி அமையாது. எனக்கு அப்பொழுது புரியவில்லை. ஆனால், பிறகு ஒரு சம்பவம் நடந்தது. ஒருவர் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பொருத்தம் பார்ப்பதற்காக வந்தார். அவர் கையில் ஏழெட்டு ஜாதகங்கள் இருந்தன. அவைகள் நல்ல வசதியான பெண்ணின் ஜாதகங்கள் என்று சொன்னார். ஜோதிடர் பார்த்துவிட்டுச் சொன்னார்.

‘‘இந்த ஜாதகங்கள் எதுவுமே உங்களுக்குப் பொருந்தாது. உங்கள் ஜாதகத்திலேயே உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமையும் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது’’ என்றார். ‘‘உங்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் பாவகிரகம் இருக்கிறது. அதற்கு எந்தச் சுபப் பார்வையும் இல்லை. ஆயினும் அதற்கு இரண்டாமிடமான உங்களுடைய எட்டாவது இடம் பலமாக இருக்கிறது. உங்களுடைய ஏழாம் இடத்தின் நான்காம் இடமான பத்தாம் இடம் பலம் பெற்று இருக்கிறது. எனவே, உங்களுக்கு அமைகின்ற மனைவி சற்று உடல் குறை உள்ளவராகத் தான் இருப்பார். ஆனால், உங்களுடைய எட்டாம் இடமும் பத்தாம் இடமும் பலமாக இருப்பதால், குணக்குறை இருக்காது’’ என்றார்.

இன்னொன்றும் அவர் சொன்னார். ‘‘உங்களுடைய ஏழாம் இடம், பத்தாம் இடத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால், உங்கள் மனைவி வந்தபிறகு உங்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்’’ என்றார். அவர்கள் அப்பொழுது ஜோதிடரின் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நிறைய ஜாதகங்கள் பார்த்தார்கள். எதுவும் சரியாக வரவில்லை. கடைசியில் வெறுத்துப் போய் ஒரு உறவினரின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பெண்ணை நிச்சயம் செய்தார்கள். அந்தப் பெண்ணுக்கு கால் சற்று ஊனமாக இருந்தது. கொஞ்சம் தாங்கித் தாங்கி நடப்பார். ஆனால், எந்த குணக் குறையும் இல்லை. நல்ல குணவதியாக இருந்தார்.

அதற்குப் பிறகு அவருடைய வாழ்க்கை மிகச் சிறப்பாக மாறியது. ஆறு ஏழு வருடங்கள் கழித்து ஜோதிடரிடம் வந்து அவர் சொன்னார். ‘‘நீங்கள் சொன்னதுதான் நடந்தது. நான் அழகை மட்டும் பார்த்தேன். ஆனால், எனக்கு அமைந்த மனைவி மிகச் சிறந்த குணவதியாக இருப்பதால், அவரைவிட அழகானவர் எனக்கு இப்போது யாரும் இருப்பதாகத் தெரியவில்லை’’ என்று மனப்பூர்வமாகச் சொன்னார். எனவே, ஜாதகத்தில் என்ன இருக்கிறதோ அது எழுதப்பட்ட விதி. அது அப்படித்தான் நடக்கும். ஒரு அருமையான கதை. ஒரு முறை மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் வானத்தில் சென்று கொண்டே இருந்தார்கள். அப்பொழுது ஒரு அழகான இளவரசிக்கு திருமணம் நிச்சயம் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாலட்சுமி, ‘‘பரவாயில்லையே, இந்தப் பெண்ணுக்கு நல்ல அழகான வரன்தான் கிடைத்திருக்கிறது.

ஜோடிப் பொருத்தம் அபாரம்’’ என்று சொல்லும் பொழுது மகாவிஷ்ணு சிரித்தார்.‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?’’ என்று கேட்ட பொழுது அவர் சொன்னார். ‘‘இந்த இளவரசியின் விதிப்படி இவன் அவளை மணக்கப் போவதில்லை’’ ‘‘அப்படியானால் யாரை மணக்கப் போகிறாள்?’’ ‘‘அந்த ரகசியம் இப்பொழுது உனக்கு வேண்டாம். நீ வருத்தப்படுவாய்’’ மகாலட்சுமி ‘‘என்ன நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள்? எனக்கு அவசியம் யார் இவளை மணக்கப் போகிறார்கள் என்பதை காட்டித்தான் ஆக வேண்டும்’’ என்று பிடிவாதம் பிடிக்க, டக்கென்று மகாவிஷ்ணு தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு வாலிபனைக் காட்டி, இவன்தான் அவளை மணக்கப் போகிறான் என்று சொன்னவுடன் மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்தாள்.

‘‘என்ன பிரபோ.. நீங்கள் கருணையோடுதான் பேசுகிறீர்களா? அவள் அழகும் அந்தஸ்தும் எங்கே? இவன் எங்கே? ஏதாவது சாத்தியக் கூறு இருக்கிறதா?’’ என்று சொன்னவுடன், ‘‘தேவி, விதி சாத்தியக் கூறுகளை உருவாக்கிக்கொள்ளும்’’ என்று சிரித்தார். ‘‘நீங்கள் என்ன சொன்னாலும், இப்படிப்பட்ட ஒரு விளையாட்டை நான் அனுமதிக்கப்போவதில்லை’’ என்று கடுமையாகச் சொன்ன மகாலட்சுமி, கருடாழ்வாரை அழைத்து, ‘‘இதோ பார், இந்த வாலிபனை இப்பொழுதே கண்காணாத இடத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு வா. இங்கே இருந்தால்தானே அந்த பெண்ணுக்கும் இவனுக்கும் திருமணம் நடக்கும் பார்த்துவிடலாம்’’ என்று சொல்ல, கருடாழ்வார் பிச்சைக்காரனை கொண்டு போய் ஏழு கடல் தாண்டி எட்டாத ஒரு தீவில் வைத்துவிட்டார்.

அங்கே ஆள் அரவமே இல்லை. தான் எதற்காக இங்கே கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறோம் என்பது அவனுக்குத் தெரியவில்லை. கருடாழ்வார் கருணை மனம் கொண்டவர் அல்லவா. ‘‘பாவம் இவன் பசியோடு இருப்பானே, இங்கே எதுவும் கிடைக்காது. எனவே இவனுக்கு ஏதாவது ஒரு ஆகாரத்தை கொண்டு வந்து கொடுத்து விடலாம்’’ என்று மறுபடியும் அரண்மனைக்குள் வந்தார். அரண் மனையில் நிறைய பலகாரக் கூடைகள் மூடப்பட்டிருந்தன. அதில் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு போய் அந்தத் தீவில் வைத்துவிட்டார். பிச்சைக்காரனுக்கு பசி.

உடனே அவன் ஆவலோடு அந்தக் கூடையைத் திறக்க, அந்த கூடைக்குள் இருந்த இளவரசி தன்னுடைய கழுத்தில் இருந்த மாலையை அந்த பிச்சைக்காரனுக்குப் போட்டு, ‘‘முகூர்த்த வேளையில் உன்னைப் பார்த்ததால் இனி நீ தான் எனக்குக் கணவன்’’ என்று சொல்லிவிட்டாள். ஆந்திரப் பகுதிகளில் ஒரு கூடையில் மணமகளை அலங்கரித்து உட்கார வைத்து மணவறைக்கு அழைத்து வருவார்கள். முகூர்த்த நேரத்தில் அந்தக் கூடையில் இருந்து மணமகள் எழுந்து மணமகனின் கழுத்தில் மாலையிடும் வழக்கம் இருந்தது. மகாவிஷ்ணு மகாலட்சுமியை அழைத்துக் காண்பித்தார். ‘‘தேவி, அங்கே என்ன நடக்கிறது பார். விதி தனக்கான சூழ்நிலையை எப்படி அமைத்துக் கொண்டது என்பதைப் பார். இதில் என் பொறுப்பு என்ன இருக்கிறது? கர்மா தன் வேலையை எப்படிச் செய்கிறது என்பதைப் பார்” என்றார். இதை நம்முடைய சங்க இலக்கிய செய்யுள் ஒன்றும் ஏற்றுக் கொள்கிறது.

“பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல்
ஆருயிர் முறை வழிப் படூஉம் கொள்கிறது”

அதில், “நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம்” வரியை கவனியுங்கள். ஆற்றின் வழியே தெப்பம் செல்வதைப் போலே விதி வழியே வாழ்க்கை செல்லும்.
இதைத்தான், “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” (லிக்யதே ஜென்ம பத்ரிகா) என்று ஒரு திரைப்பட பாடலில் சொன்னார் கவியரசு கண்ணதாசன்.

பரா–ச–ரன்

 

The post வரன் தேடுகிறீர்களா? இதைத் தெரிந்துகொள்ளுங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்