×

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்

யோகிகளில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒருவரான யோகீஸ்வர யாக்ஞ வல்கியர், ஜனக மன்னருக்கு, இத்தலத்தின் மகிமையை விரிவாகச் சொல்லி இருக்கிறார்.

* திருப்பெயர்கள் 18


திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கு, 18.திருப்பெயர்கள் உண்டு. அவை: ஆன்ம நாதர், பரமசுவாமி, திருமூர்த்தி தேசிகர், சதுர்வேத புரேஸ்வரர், சிவயோகவனாதீசர், குந்தவனேஸ்வரர், சிவ க்ஷேத்திர நாதர், சந்நவகேஸ்வரர், ஜனவந்நாதர், மாயாபுரி நாயகர், விப்பிர நாதர், சப்த நாதர், பிரகத் தீர்த்தேஸ்வரர், திருசனதக்கர், அஸ்வ நாதர், சிவபுரவதி, மகாதேவர், திரு ஜகத்குரு என இந்த 18-திருப்பெயர்களைப் படிப்பவர்கள், கேட்பவர்கள், பிரம்ம வித்தை, தானம், குழந்தைகள், உறவினர், முதலான போகங்களை அனுபவித்து சிவனை அடைவார்கள்.

* விநாயகர் பலர்

ஆதப கணபதி, வெயில் உவந்த விநாயகர், சொக்க விநாயகர், சம்சர்க்க விநாயகர், பள்ளிக்கூடப் பிள்ளையார், சக்தி கணபதி, முக்தி விநாயகர், ஆகண்டலன் விநாயகர் எனப் பல விநாயகர்கள் இங்கு உள்ளனர்.

* அம்பிகையின் திருப்பெயர்கள்

சிவயோகாம்பிகை, சிவயோக நாயகி,
சிவயோகம் பிரியாள், யோக நாயகி, ஆளுடை நாயகி, ஆளுடையாள் என, இங்கு எழுந்தருளி இருக்கும் அம்பிகைக்குப் பல பெயர்கள் உண்டு.

* அற்புதப் பீடங்கள் 2

ஒன்று, ஆத்மேசர் எனும் சுவாமி எழுந்தருளி உள்ள பிரணவ பீடம். மந்திர உபதேசம் பெற்றவர்கள் இங்கு வந்து முறைப்படி மந்திரம் செபித்தால், ஒன்றுக்குப் பலவாகப் பலனளித்து, விரைவாக மந்திர சித்தி கிடைக்கும். இரண்டாவது பீடம், அம்பிகை எழுந்தருளி இருக்கும் ‘யோக பீடம்’. அம்பிகை எழுந்தருளி உள்ள சக்தி பீடங்களில் (இதைத் தவிர), அனைத்துமே காரிய பீடங்கள். இது ஒன்று மட்டுமே காரண பீடம். நல்லவை நம்மைச் சேர விடாமல் தடுக்கும் காரணம் என்ன என்பது தெரியாமல், தடை நீக்க வழி தெரியாமல் தவிக்கும்போது, அந்தக் காரணத் தடையை நீக்கி அருள்புரியும் அம்பிகை எழுந்தருளி இருக்கும் ‘காரண’ பீடம்.

* உபதேசம் செய்த உன்னத தல விருட்சம்

குருந்த மரம், இங்குத் தலவிருட்சமாக உள்ளது. இதன் அடியில் அமர்ந்துதான், சிவபெருமான் பிரம்மதேவருக்கும், மாணிக்கவாசகருக்கும் மந்திர உபதேசம் செய்தார். இந்தத் தல விருட்சமே சிவ சொரூபம். மந்திர உபதேசம் பெறுபவர்கள், இங்கு வந்து மந்திர உபதேசம் பெறுவது சிறப்பு.

* தீர்த்தங்கள் 9:

1. பிரம்ம தீர்த்தம் - பிரம்மதேவரால் உண்டாக்கப்பட்டது.
2. நாராயண தீர்த்தம் - மகா விஷ்ணுவால் உண்டாக்கப்பட்டது.
3. ருத்திர தீர்த்தம் - காலாக்கினி ருத்திரரால் உருவானது.
4. வாயு தீர்த்தம் - வாயு பகவானால் உருவானது.
5. அசுர தீர்த்தம் - அசுரர்களால் உருவானது.
6. தேவ தீர்த்தம் - தேவர்கள் இதில் நீராடித் தங்கள் விருப்பங்களை அடைந்த தீர்த்தம்.
7. முனிவர் தீர்த்தம் - அகத்தியரால் உண்டாக்கப்பட்டது.
8. அக்னி தீர்த்தம் - சிவபெருமானின் நெற்றிக் (அக்னி) கண்ணால் உருவானது.
9. ஆத்ம கூபம் - ஈசனுக்கு அபிஷேகம் செய்வதற்காக அம்பிகையால் உருவாக்கப்பட்டது.

இந்த ஒன்பது தீர்த்தங்களில் ஆத்ம கூபம் மற்றும் அக்னி தீர்த்தம் எனும் இரண்டுமே, கோயிலின் உள்ளே உள்ளன. மற்ற ஏழு தீர்த்தங்களும் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளன.

* அரிதான 6 சபைகள்


ஆனந்த சபை, சித்சபை, சத்சபை, தேவசபை, நிருத்த சபை, கனக சபை என ஆறு சபைகள் இங்குள்ளன. அந்த ஆறு சபைகளின் விவரங்கள்:

(1) ஆனந்த சபை

இது கர்பக் கிருகம் - கருவறை, இதன் உள்ளே செல்லும் ஆறாவது படி வாசலில், ‘கலா தீபம்’ எனும் 5 தீபங்கள் அமைந்துள்ளன. சபைக்குள் ஓங்கார வடிவான 27-நட்சத்திர தீபங்களும், உயரத்தில் சந்திர, சூரிய தீபங்களும் அமைந்துள்ளன.

(2)  சித் சபை

அர்த்த மண்டபம்! ஒளி வீசும் இடம். உள்ளே செல்லும் ஐந்தாவது படி வாசலில், `வர்ண தீபம்’ எனும் அட்சரங்களின், எழுத்துக்களின் வடிவான 51 தீபங்கள் அமைந்துள்ளன. பீஜாட்சர மந்திர உபதேசம் பெற்றவர்கள், இங்கு வந்து ஜபம் செய்வது விசேஷமானது.

(3) சத் சபை

நிவேதன மண்டபம், அமுது மண்டபம்

என்றும் சொல்வர். இதன் நடுவில் ‘அன்ன பூரணி’யைப் பிரதிஷ்டை செய்து, அதற்கு ஆறு காலங்களிலும் சூடாக அன்னம் படைத்து, நைவேத்தியம் செய்வார்கள். அப்போது எழும் அன்னப்புகை, அம்பாள் சந்நதியில் உள்ள அன்னபூரணியை அடைவதற்கு வசதியாக, மேல் புறத்தில் ஒரு பலகணி ஜன்னல் அமைந்துள்ளது. உள்ளே செல்லும் வழியில் 4-ஆம் படி வாசலில் ‘தத்துவ தீபம்’ என்ற 36 தீபங்கள் உள்ளன. சாப்பிட முடியாமல், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும் ‘அன்னத் துவேஷம்’ எனும் நோய், இங்கே வந்து நைவேத்திய காலங்களில் தரிசித்து வேண்டினால், அந்த நோய் நீங்கும்.

(4) தேவ சபை

அனைவரும் நின்று தரிசனம் செய்யும் இடம் இது. திருவிழா காலங்களில் ஸ்ரீமாணிக்கவாசகரை, இங்கே எழுந்தருளச் செய்வார்கள். சுந்தர பாண்டியர் என்பவரால் திருப்பணி செய்யப்பட்டதால், ‘சுந்தர பாண்டிய மண்டபம்’ என்றும் இதைச் சொல்வார்கள். இங்கே `மந்திர தீபம்’ எனும் 11 தீபங்கள் உள்ளன.

(5) நிருத்த (நடன) சபை

இது இரண்டாம் பிராகாரத்தில் உள்ளது. இங்கே அம்பிகையுடன் சேர்ந்த 4 சிவ வடிவங்கள் உள்ளன. பதஞ்சலி, வியாக்கிர பாதர், சிவ மூர்த்தி யோகி, புரூரவ சக்கரவர்த்தி, ஆஞ்சநேயர் முகம் கொண்ட நந்தீசர், சங்க நிதி - பதும நிதி ஆகிய வடிவங்கள், உயரத்தில் ராகு - கேதுக்களுடன் அமைந்த 12-ராசிகள் ஆகியவை உள்ளன. அரும்பெரும் வேலைப்பாடுகள் கொண்ட இடம்.

(6) கனக சபை

இது மூன்றாவது பிராகாரத்தில் உள்ள, சந்நதி மண்டபம். வாத்திய கோஷம் முழங்கும் இந்த மண்டபத்தில் எழுதப்பட்டுள்ள மூல மந்திரங்களுக்குக் கணக்கே கிடையாது. குதிரை மீது எழுந்தருளிய திருக்கோலத்தில் இறைவன் காட்சி தருவதால், இதைக் குதிரை மண்டபம் என்றும் கூறுவார்கள். இங்கு அமர்ந்து பஞ்சாட்சர மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘பஞ்சாட்சர ஜப’ சித்தியைத் தருவதால், இந்தக் கனகசபை ‘பஞ்சாட்சர மண்டபம்’ என்றும் கூறப்படும்.

* பள்ளிக்கூட மண்டபம்

இது திருப்பெருந்துறையில் இருந்து வடக்கூர் செல்லும் வழிக்குக் கிழக்கே அமைந்துள்ளது. ஆன்மேசரான சிவபெருமான் முதியவர் வடிவில் வந்து, சிவாசாரியார்களின் பிள்ளைகளுக்கு வேதம் ஓதுவித்த இடம் இது. முதியவராக வந்த ஈசன் வடிவமும் பாடம் கேட்கும் சிறுவர் வடிவங்களும் அற்புதமான முறையில் சிலை வடிவங்களாக அமைந்துள்ளன. ஆளுடைய பரமசுவாமியார் பள்ளிக்கூடம் எனத் தாமிரப் பட்டயம் கூறுகிறது.

* அதிசயம்! ஆவுடையார் மட்டும்

மற்ற எல்லாச் சிவன் கோயில்களிலும் இல்லாத விசேஷம் இங்குண்டு. மற்ற கோயில்களில் எல்லாம் கருவறையில், லிங்கத் திருமேனி, அம்பாள் சந்நதியில், அம்பிகை நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருவார்கள். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும், ஆவுடையார் எனும் பீடம் மட்டுமே இருக்கும். லிங்கத் திருமேனி இருக்காது. அம்பாள் சந்நதியிலும் அப்படியே, பீடம் மட்டும் இருக்கும்.

அம்பாளின் திருவுரு இருக்காது. பரம்பொருளான சிவ-சக்திகள் உருவம் அற்ற நிலையில் இங்கு எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். அதனால் இறைவன் திருப்பெயர், ஆத்ம நாதர். அம்பாள் திருப்பெயர், யோகாம்பிகை. இருவருமே இங்கு அந்தர்யாமியாகத்தான் எழுந்தருளி உள்ளார்கள். இங்குப் பீடமாகிய ஆவுடையாருக்கு முக்கியத்துவம் தந்து அபிஷேக ஆராதனைகள் நடப்பதால்தான், ‘ஆவுடையார் கோயில்’ என வழங்கப்படுகின்றது.

* இரு மாணிக்கவாசகர்கள்

இங்கு மட்டுமே மாணிக்கவாசகருக்கு இரண்டு விதமான திருவடிவங்கள் உள்ளன. குதிரைகள் வாங்க இங்கு வந்த அமைச்சர் மாணிக்கவாசகர், அந்தக் கோலத்துடனே இங்கு உள்ளார். தலையில் கிரீடம், காதுகளில் குண்டலங்கள், மார்பிலே மாலை, கைகளில் அணிகலன்கள் என ராஜகோலத்துடன் இருக்கிறார். அதற்கு எதிர்புறம் மாணிக்கவாசகரின் துறவுக்கோலம். அணிகலன்கள் அனைத்தையும் நீக்கி விட்டுக் கூப்பிய கைகளுடன் நிற்கும் துறவுக்கோலம் இடம்பெற்றுள்ளது.

தொகுப்பு : V.R.சுந்தரி

Tags : Thirupperundurai ,Auduiyar temple ,
× RELATED இந்த வார விசேஷங்கள்