×

சீவலப்பேரி துர்க்காம்பிகை

சீவலப்பேரி தலத்தில் அருள்புரியும் பிரத்யட்ச துர்க்காம்பிகை, தன் சகோதரரான மகாவிஷ்ணுவுடன் சம உயரத்தில் ஒரே கல்பீடத்தில் காட்சி தருகிறாள். மகாவிஷ்ணு இடது காலை மடக்கி, வலது காலை கீழே தொங்கவிட்டபடி நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் அளிக்கிறார். அவரது பின் வலக்கரத்தில் சிவனுக்குரிய திரிசூலமும் பின் இடக்கரத்தில் சங்கும் ஏந்தியுள்ளார்.

எனவே இத்தலம் சங்கரநாராயண திருத்தலமாகக் கருதப்படுகிறது. தொங்கவிடப்பட்ட அவரது வலதுகாலின் அடியில் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
முன் வலக்கரம் அபயம் காட்ட, முன் இடக்கரத்தை தன் மடியின் மீது வைத்துள்ளார். மகாவிஷ்ணுவின் இடதுபக்கம் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில், சாந்தமும் அழகும் கருணையும் பொங்கக் காட்சி தருகிறாள், விஷ்ணு துர்க்கை. இந்த பிரத்யட்ச துர்க்காம்பிகை பாதத்தின் அடியில் எருமைத்தலை இல்லை.

மேற்கைகள் இரண்டும் சங்கு-சக்கரம் ஏந்தியிருக்கின்றன. முன் வலக்கையில் துளசிதளங்கள் ஏந்தி மஹாவிஷ்ணுவை அர்ச்சிக்கும் பாவனையில் இவள் தோற்றமளிக்கிறாள். விஷ்ணு பிரதானமாக இடம் பெற்றிருந்தாலும், இத்திருக்கோயில் துர்க்காம்பிகா கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கேட்ட வரம் தரும் வரப்பிரசாதி இவள். ஆலயத்தில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அதிக அளவில் பெண் பக்தர்கள் கூடுகிறார்கள். மாங்கல்யம் காத்து மங்கலம் அருளும் தேவி இவள்.

மகாலட்சுமி இத்தலத்தை வலம் வந்ததால் ‘ஸ்ரீ (திருமகள்) வலம் வந்த ஊர்’ என அழைக்கப்பட்டு நாளடைவில் மறுவி ஸ்ரீ வல்லபேரையாகி பின் சீவலப்பேரி என்றானதாம். இந்த ஊரில் உள்ள மிகப்பெரிய ஏரி ஸ்ரீ வல்லப பாண்டிய மன்னன் அமைத்ததாம். இவர் பெயரால் ஸ்ரீ வல்லபபேரேரி என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டு பின் அதுவே சீவலப்பேரி ஏரி என்று மாறியதாம். சீவலப்பேரி திருத்தலம் திருநெல்வேலிக்கு கிழக்கில் சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

தொகுப்பு: அருள்ஜோதி

Tags : Sawalappari Turk Pupi ,
× RELATED இந்த வார விசேஷங்கள்