×

பெருசு: விமர்சனம்

அந்த ஊரிலுள்ள அனைவராலும் ‘பெருசு’ என்று மதிக்கப்படும் அலெக்ஸிஸ் என்பவரின் மகன்கள் சுனில், வைபவ். அன்று தனது நண்பர்களுடன் பேசிவிட்டு வீட்டுக்கு வந்து டி.வி பார்க்கும் பெருசு, திடீரென்று மரணம் அடைகிறார். ஆனால், அவரது உடலை இறுதி அஞ்சலி செலுத்த ஃப்ரீசரில் வைக்க முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அது என்ன சிக்கல்? சடலத்தை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைத்து வைத்து நாடகமாடும் குடும்பத்தினர், இறுதியில் அப்பிரச்னையை எப்படி சமாளித்தனர் என்பது மீதி கதை.

கத்தி மேல் நடப்பது போன்ற ‘அடல்ட் கன்டென்ட்’ கதையை விரசமின்றி, முழுநீள காமெடி படமாக கொடுத்த இயக்குனர் இளங்கோ ராம் பாராட்டுக்குரியவர். மது போதையில் மிதக்கும் வைபவ், இயல்பான காமெடி நடிப்பில் கவனத்தை ஈர்க்கிறார். அவரது மனைவியாக வரும் நிஹாரிகா, நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கதையின் நாயகனாக சுனில், அளவெடுத்து தைத்த சட்டை போல் நேர்த்தியாக நடித்துள்ளார். அவரது மனைவியாக வரும் சாந்தினி தமிழரசன், ஆங்காங்கே ஷாக் கொடுத்து இருக்கிறார். பாலசரவணன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் கூட்டணியின் காமெடி கலகலக்க வைக்கிறது.

ரமா, கருணாகரன், தனலட்சுமி, தீபா சங்கர், சுவாமிநாதன், கார்திகேயன், சுபத்ரா ராபர்ட், கஜராஜ், அலெக்ஸிஸ் ஆகியோரும் கச்சிதமாக நடித்துள்ளனர். ஒரே வீட்டில் காட்சிகள் நடந்தாலும், சத்ய திலகத்தின் ஒளிப்பதிவு சோர்வடைய விடாமல் செய்திருக்கிறது. அருண் ராஜின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசையின் மூலம் காமெடி உணர்வை அதிகப்படுத்தி இருக்கிறார். பாலாஜியின் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. ரசிகர்கள் முகம் சுளிக்கக்கூடாது என்ற விஷயத்தில் இயக்குனர் இளங்கோ ராம் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். மற்றபடி, இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று ஆச்சரியப்படும் ஒரு விஷயத்தை கதையாக்கி, நம்பி வருவோரை ஏமாற்றவில்லை.

Tags : Perusu ,Sunil ,Vaibhav ,Alexis ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்