×

வைகுண்ட ஏகாதசியன்று பரமபத சோபனம் விளையாடுவது ஏன்?

இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்
- கண்ணதாசன்

அனுபவக் கவியல்லவா? தான் பார்த்ததையும் கேட்டதையும் மட்டுமல்ல; தன் சொந்த அனுபங்களையும் பாடல்களாகவே கொட்டிக் குவித்து விட்டார். அவற்றில் ஒரு பாடலின் வரிகள்தாம் இவை.
உண்மைதானே! என்னவோ நடக்கிறது; என்னவோ செய்கிறோம்; எதைச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? ஊஹும்! ஒன்றும் புரியவில்லை. அதைப் புரிந்துகொண்டால், நமது மயக்கம் தெளிந்து விடும். இதை விளையாட்டாகப் புரிய வைப்பதே ‘பரமபத சோபனம்’ எனும் விளையாட்டு. இந்த விளையாட்டிற்கென பழங்காலத்தில் ஒரு படம் உண்டு. அதை வைத்து விளையாடுவார்கள். இந்த விளையாட்டில், இவ்வளவு பேர்கள்தான் கலந்து கொள்ளலாம் என்ற வரைமுறையெல்லாம் கிடையாது. பலவிதமான படங்கள், ஏணிகள், பாம்புகள் என அச்சடிக்கப்பட்டிருக்கும், விளையாட்டிற்கு உண்டான படத்தை விரித்து வைத்து, தாயக்கட்டையை உருட்டி விளையாட்டைத் துவங்க வேண்டும். அதிலும் தாயம் விழுந்தால்தான், நமக்கென உள்ள கல்லை - அதாவது அடையாளத்தை முதல் கட்டத்தில் வைத்துத் தொடர்ந்து ஆடலாம். விழும் எண்களுக்குத் தகுந்தாற்போலக் காயை நகர்த்த வேண்டும். அந்தக் கட்டத்தில் என்ன அடையாளக் குறியீடு உள்ளதோ, அதற்குத் தகுந்தாற்போலச் செயல்பட வேண்டும். உதாரணமாக நமது காய் சென்று சேரும் கட்டத்தில் ஏணி இருந்தால், மேலே ஏறி ஏணி முடியும் கட்டத்தில் நிற்க வேண்டும். அதே சமயம் நமது காய் சென்று சேரும் கட்டத்தில் பாம்பு இருந்தால், அப்படியே கீழே இறங்கிப் பாம்பின் வால் எந்தக் கட்டத்தில் முடிகின்றதோ, அந்தக் கட்டத்தில் தங்க நேரிடும்.

நமது காய் சென்று நிற்கும் கட்டத்தில், என்ன இருக்கிறதோ, அதுதான் நாம். ஏணியில் மேலே ஏறி, பாம்பில் கீழே இறங்கி விடாமுயற்சியுடன் ஒருவழியாக மேலே ஏறி, பரமபதத்தை - அதாவது இறைவனின் திருவடியை அடைவதை விளக்குவதே இந்த விளையாட்டு. சோபனம் என்ற சொல்லுக்குப் படிக்கட்டு என்பது பொருள். இறைவனை அடைவதற்கு ஒவ்வொரு படிக்கட்டாக ஏற முயல வேண்டும். அம்முயற்சியில் நம்மை மேலே ஏற்றும் ஏணியைப் போன்ற நிகழ்வுகளும் - நபர்களும் உண்டு; கடித்துக் குதறிக் கீழே இறக்கிவிடும் பாம்பைப் போன்ற நிகழ்வுகளும் - நபர்களும் உண்டு. விடாமுயற்சியுடன் சமாளித்து வெற்றி பெற வேண்டும். பரமபத சோபனம் எனும் இவ்விளையாட்டு விளக்கும் ஆழ்ந்த அடிப்படை உண்மை இதுவே. நம் குணங்கள், செயல்களில் ஈடுபடத் தூண்டுகின்றன. விளைவு? செயல்கள் நல்லதாக இருந்தால், உயர்வும்; செயல்கள் தீயவையாக இருந்தால் தாழ்வும் உண்டாகின்றன. இப்பெரும் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவதே ‘பரமபத சோபனம்’ எனும் இவ்விளையாட்டு. தாயக்கட்டைகளின் உருட்டலில் விழும் எண்களுக்கு ஏற்பக் காய்கள் நகர்வதைப் போல; குணங்களின் தூண்டுதல் காரணமாக நாம் செய்யும் செயல்கள், நம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்பதே வாழ்க்கைக்கான சோபனம். உதாரணமாக, நம்முடைய துவேஷம் நம்மைக் கீழே இறக்கிவிடும் என்பதை விளக்கவே, 26-ம் எண்ணுள்ள கட்டத்தில் பாம்பின் தலை இடம் பெற்றிருப்பதோடு, துவேஷம் என்ற சொல்லும் இடம் பெற்றிருக்கிறது. மாற்றான் மனைவியை விரும்பினால் கீழ் நிலை தான் என்பதை விளக்க, 17ம் எண்ணுள்ள கட்டத்தில் ‘பிறன்மனை விழைதல்’ என்பதோடு ‘இராவணன்’ என்பதும் இடம் பெற்றிருக்கிறது.

அதேபோல, தியானம் என்பது நம்மைத் தவ உலகில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதை, 30-ம் எண் உள்ள கட்டமும் 50-ம் எண் உள்ள கட்டமும் அறிவுறுத்துகின்றன. மனதை நம் வசப்படுத்தினால், நாம் மிகவும் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை, 65-ம் எண்ணில் உள்ள ஸித்தசக்தி என்பதும்; 105-ம் எண்ணில் உள்ள மகாலோகம் என்பதும்  விளக்குகின்றன. பரமபதத்தை அடைய அதாவது இறைவனை அடைய, இறையருளைப் பெற நற்குணங்கள் எனும் படிக்கட்டுகளில் ஏற வேண்டும்; மறந்து போய்க்கூடத் தீய குணங்கள் எனும் பாம்புகளின் வாயில் நாம் அகப்பட்டு விடக் கூடாது என்பதை விளக்குவதே, வைகுண்ட ஏகாதசி அன்று விளையாடப்படும் ‘பரமபத சோபன’ விளையாட்டு. வாழ்க்கை எனும் விளையாட்டுக் களத்தில் நல்ல விதமாகச் செயல்படுவோம்! பரமபதம் எனும், இறைவன் திருவடிகளை அடைய முயல்வோம்!

- பி.என்.பரசுராமன்

Tags : Paramapatha Sopanam ,Vaikunda Ekadasi ,
× RELATED ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று...