×

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சை: கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி கூறிய தாய்

சென்னை: முதல்வரின் நேரடி கண்காணிப்பில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களுக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் டான்யா (9). வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கன்னம் முழுவதும் சிதைந்த நிலையில் டான்யா அவதிப்பட்டு வந்தார். இதனால் சிறுமி பள்ளி படிப்பை தொடர முடியாமல் சிரமப்படுவது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு சார்பில் செய்து தரப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின்படி, சிறுமி டான்யாவை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தினமும் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வந்தார்.   இந்நிலையில், அமைச்சர் சா.மு.நாசர், நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து சிறுமியை  ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றார். சிறுமி டான்யாவுக்கு 10 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் நேற்று அறுவை சிகிச்சை செய்தனர். அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. குழந்தைக்கு 10 மணி நேரம் அறுவை சிகிச்சை: இதுகுறித்து மருத்துவக்குழுவினர் கூறுகையில், ‘பேரிரொம்போக் என்னும் இந்த நோய் உலகத்திலேயே இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்குதான் வரும். சிறுவர்களை இந்தநோய் அதிகளவு பாதிக்காது. பெரியவர்களைத்தான் பாதிக்கும். ஆனால் இந்த சிறுமிக்கு முகச்சிதைவு நோய் பாதிப்பு அதிகளவில் உள்ளது. சிறுமிக்கு சுமார் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. குழந்தையின் தொண்டை பகுதியில் இருந்து சதையை எடுத்து அதனை  குழந்தையின் முகத்தில் பொறுத்தி தற்போது  சிகிச்சை தரப்பட்டது. குழந்தை டான்யா, அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமாக இருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக சிறுமி டான்யாவுக்கு தான் முகைச்சிதைவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது’ என்றனர். டான்யா, குழந்தைகள் வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.நலம் விசாரித்த முதல்வர்இதுகுறித்து சிறுமியின் தாய் கண்ணீர்மல்க கூறுகையில், ‘என்னுடைய மகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிகவனம் எடுத்து அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். தமிழக முதல்வருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது குழந்தை பழைய நிலைக்கு வந்துவிடுவாள் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தை பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை. மிகவும் தைரியமாக இருந்தார். நலமான பின்னர் என் குழந்தையை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேண்டும். முதல்வர் ஐயா என்னை பார்க்க வருவார்களா என குழந்தை என்னை கேட்டுக் கொண்டிருந்தார். எந்த வேலையாக இருந்தாலும் தினமும் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் ஐயா எங்களை பார்த்துவிட்டுத் தான் செல்வார். அவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். உரிய மருத்துவ உதவிகள் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.தினகரன் நாளிதழுக்கு நன்றிஅறுவை சிகிச்சைக்குப்பின்பு தாய் சௌபாக்கியா கூறும்போது, தினகரன் நாளிதழில் முதல் முறையாக செய்தி வெளியானது. இன்று தினகரன் மூலம் என் மகளுக்கு புதிய வழி பிறந்துள்ளது. தினகரன் நாளிதழைப் பார்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தினகரனுக்கு எங்களுடைய நன்றிகள் என்று கண்ணீருடன் தெரிவித்தார்….

Tags : Chennai ,Poondamalli ,Danya ,Stefanraj ,Awadi Veerapuram ,Sriwari Nagar ,Tanya ,Weerapuram Rajasinar School ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...