×

தில்லைவாழ் அந்தணர்க்கும் அடியேன்!

சமயம் வளர்த்த நாயன்மார்கள்-4

தில்லைக் கூத்தனின் அருள்விளையாடல்கள்  காலவெளிகளுக்கு அப்பால் நிகழ்ந்த ஒன்றாகும். சிதம்பரத்தில் நிகழ்ந்த பெருங்கூத்துடன் கூடிய அருள்விளையாடலை அறியும்தோறும் அத்தல மான்மியத்தின் ஆழம் உணரலாம். வாருங்கள் அறிவோம்!கயிலைநாதன் உமையோடு வீற்றிருந்தார். மெல்ல தம் முக்கண்களையும் மூடி மூவுலகங்களையும் தம் அகக் கண்களால் பார்த்தார்.

உலகின் ஒரு பெரும் பகுதியை அரக்கர்கள் மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தனர். எதிர்பட்டோரையெல்லாம் வகிர்ந்து வானம் நோக்கி வீசினர். அரக்கர்களின் ஆர்ப்பாட்டம் முனிவர்களை மிரள வைத்தது. தேவர்களைத் தலை தெறிக்க ஓட வைத்தது. மானிடர்களும், மண்ணுயிர்களும் அவர்களது கரங்களில் சிக்கி மீள இயலாது தவித்தனர். தப்பிக்க வேண்டி ஈசனின் திருப்பாதம் நோக்கி தங்கள் சிரசை உயர்த்தினர். மெல்ல தம் திருவடியை தீண்டும் அவர்களின் மேல் முக்கண்களையும் குவித்து அவர்களைக் குளிர்வித்தான், ஈசன்.

ஈசன் கண்களை முழுமையாகத் திறந்தான். அது கனலாய் கனன்று எரிந்தது. தன்னில் சரிபாதியாய் விளங்கும் அம்மையை பார்க்க, அவள் வேறொரு உரு கொண்டாள். புது உருவம் கொண்ட உமையவள் ஈசனைப் பார்க்க, தில்லையில் தன் கடாட்சம் மீண்டும் கிடைக்கும் என்று சொன்னார். தம் இடப்பாகத்துடன் இணைத்துக் கொள்வதாய்ச் சொல்லி இனிமையாய் சிரித்தார். சட்டென்று முகம் சிவந்து அரக்கர்களைப் பார்க்கச் சொன்னார். இப்போது அவளுக்குள் கிளர்ந்தெழுந்த சக்தியால் சகலமுமாய் மாறி நின்றாள்.

ஈரேழு உலகத்தையும் விஞ்சி நின்றாள். மெல்ல தம் சொரூபம் மறைத்து கோபாக்னியோடு பூலோகம் முதல் மூவுலகத்தையும் வலம் வந்தாள். பிரபஞ்சத்தில் அடாது செய்யும் சக்திகளை விடாது வதம் செய்தாள். வதம் செய்ததினாலேயே இன்னும் வீரமாய் வளர்ந்தாள். வீரமாகாளியாய் நிமிர்ந்தெழுந்தவள் உக்கிர காளியாய் கனன்று சிவந்திருந்தாள். கோபம் தணியாது அந்த தில்லைக் காடுகளில் திரிந்து காற்றாய் சுழன்று கொண்டிருந்தாள். காளி என்றாலே காற்று என்பது பொருள்.

உலகம் காக்கும் பொருட்டு, முனிவர்களையும், மானிடர்களையும் காக்கும் பொருட்டு, உமையன்னையை உக்கிர காளியாய், பெருங்காற்றாய் மாற்றிய அந்த ஆனந்தக் கூத்தன், தில்லை நாயகனாய், நடராஜனாய் குகை நோக்கினான். வார் சடை பரப்பி நடனமாடும் மூவுலக வேந்தன் தன் சிரசில் சிலிர்த்துக் கிடக்கும் ஒரு சடையை மெல்ல வீச அது சூரையாய் புரண்டெழுந்து அந்த அடர்ந்த இருளை நோக்கி பாய்ந்தது. குகைக்குள் தன்னில் ஒருபாகமாய் இருந்தவளை, சக்தியாய் ஒளிர்ந்தவளை தன்னோடு ஏகமாய் இணைக்க பேருவகை கொண்டான்.

தன் வலப்பாதம் தூக்கி நர்த்தனம் புரிந்தான். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் சுழன்று அதிர்ந்தது. அண்டங்கள் இயங்கின. வேறொரு நாட்டியம் அங்கு ஆரம்பமானது. பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் பரவசமாய் பரமனின் பாதத்தின் அசைவுகளை அசையாது பார்த்தபடி இருந்தனர். மூவாயிரம் முனிவர்கள் முக்கண்ணனை பூஜித்தனர்.

நான்மறைகளையும் உருவாகக்கொண்ட பிரம்மன் பரம பக்தனாய் பாதம் பணிந்து கிடந்தான்.அந்த வனத்தினுள் ஒரு பகுதி மட்டும் தில்லைச் செடிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து குகை போல் குறுகி அடர்ந்த இருளோடு இருந்தது. குகைக்குள்ளிருந்து ஒரு பெருமூச்சு அப்பகுதியையே அதிர வைத்தது. மூச்சின் வெம்மை அனலாய் தகிக்கச் செய்தது. ஒரு சூரைக் காற்று சுழித்துக் கொண்டு குகையின் வாயிலை அடைந்து அதிவேகமாய் அந்தப் பெரிய உருவத்தின் மீது மோதித் திரும்பியது.

அந்தக் கரிய உருவமும், கார்மேகத்தையே அடைத்து சடையாக்கி, அதன் மேல் கபாலம் தாங்கி, அரக்கர்களின் தலைகளை மாலையாக்கிக் கொண்டு, கண்களில் தீப்பிழம்பு அனலை அடைமழையாய் பொழிய, அக்கினியாகி அமர்ந்திருந்தாள். எண்கரங்களிலுள்ள ஆயுதங்களும் அரக்கர்களின் குருதி படிந்து கருஞ் சிவப்பேறியிருந்தன. ஈசன் இசைந்தபடியே தீந்தவம் புரிந்திருந்த காளி இன்னும் உக்கிரம் தணியாத கோபத்துடன் புருவம் நிமிர்த்தி எழுந்தது. மகிஷாசுரன், தாரகாசுரன், பண்டாசுரனின் தலைகளை தொன்னைகளாய் கையிலேந்திக் கொண்டது. அவள் சிரசின் பின்புறம் தீந்தழல்கள் விரிந்து எண்திக்கும் பரவியது. தில்லை வனச் செடிகள் மெல்ல கருகின.

தொலை தூரத்தில் ஆடல்வல்லான் நடராஜனின் கால் சதங்கைச் சத்தம் தொடர்ச்சியாய் காளியின்  காது குண்டலங்களின் மீது எதிரொலித்துத் திரும்பியது. தன் தவப் பெருமை புரியாது முனிவர்களின் பூசனையில் முகிழ்ந்திருக்கும் ஈசன் மீது கோபம் பொங்கியது. தன் சக்தியை விடவா அது பெரிது என்று விபரீதமாய் சிந்தித்தது. சிவசக்தியே அனைத்தின் மையம் என்று மறந்து சக்தியே அனைத்தினும் முதன்மை என்று தன்னை பகுதியாய் பிரித்துப் பார்த்தது. தன்னை பெருமகளாய் நினைத்த கரிய உருவான காளி இன்னும் கனலாகி, கங்காதரனான நடராஜரை நோக்கி நடந்தது. முனிவர்களின் குடில்களை கவிழ்த்துப் போட்டது. தவத்திலிருந்த யோகிகளின் தவத்தை சிதைத்தது. ஊழித்தாண்டவம் தொடர்ந்தது.

அரனின் அண்மையில் நெருங்கினாள். கோரப்பல் காட்டிச் சிரித்தாள். ஆடலரசன் கனலாய் சிவந்தான். தன் சீர் சடையை விரித்தெழுந்தான். இத்துடன் நிறுத்திக் கொள் என்றான். காளி சீற்றமாய் எதிர்வாதம் புரிந்தாள். ‘‘ஆடலுக்கு உரியோர் பெண்டிரே. நீர் அல்ல. அக்கலையை அபத்தமாய் ஆடி ஆடல்வல்லான் என மகுடம் சூடுவது முறையல்ல. முடிந்தால் என்னோடு ஆடிப்பாரும். நீர் தோற்றால் தில்லை எல்லையில் அமரும். நான் தோற்றால் தில்லையே எனது எல்லை’’ என பாதம் உதைத்து நின்றாள்.

அந்தச் சபை அதிர்ந்தது. மகேசனான நடராஜன், மாகாளியோடு போட்டி ஆட்டத்தைத் தொட ங்கினான். நாரத முனிவர் யாழை இழைக்க, பிரம்ம தேவன் ஜதி சொல்ல தொடங்கினார். மஹாவிஷ்ணு மத்தளம் கொட்டினார். மத்தளத்திற்கு இணையாக நந்தி பகவான் தாளமிட்டார். சரஸ்வதி வீணையின் சுருதியை கூட்ட, காளி குதூகலித்தாள். ஈசன் சிலிர்த்தெழுந்தார். நாட்டிய வேகத்தின் கதியை துரிதப்படுத்திய காளி, குழைவாய் சுழன்றெழுந்தாள். நடராஜர் இன்னும் ஆனந்தமானார்.

பூமிக்கும் வானுக்கும் அலைபோல் எழுந்தாடினார். காளி கால் வீசி எண்புறமும் எழுந்தாள். சிரசின் நெருப்பு நாற்புறமும் எரித்தது. பிறைசடையோன் பிரபஞ்சம் அதிர இன்னும் வேகமாய் ஆடினான், மேருவே மெல்ல அவனின் நர்த்தனத்தில் நடுங்கியது. எண்திக்கும் பரவிய ஜோதியாய் மாறினான், ஆதவனை மறைத்தான். முனிவர்களும், தேவர்களும் யார் வெற்றி பெறுவார், யார் தோல்வியுறுவார் என பிரமித்த நிலையில் சிவதாண்டவத்திலும், காளியாட்டத்திலும் லயித்தனர். காலத்துக் கட்டுப்படாத அந்த தாண்டவம் பார்த்து திக்குமுக்காடினர்.

சட்டென்று ஆடலரசன் தன் காது குண்டலத்தை கீழே விழச் செய்தார். அது தம் பாதத்தின் கீழிருக்கும் முயலகனின் மீது விழுந்தது. சபை மிரண்டது. காளி அதை கவனமாய் பார்த்தாள். நான்கு புறத்தையும் வீசி அளந்த அந்த கால்கள் காதின் குண்டலத்தை மெல்லப் பற்றியது. காளி கூர்மையானாள். தன் நடன அசைவுகளின் வேகம் குறைத்தாள். நடராஜர் மெல்ல நானிலமெங்குமாய் நிமிர்ந்தார். காளி அரனை அண்ணாந்து பார்த்தாள். மெல்ல சுற்றிச் சுற்றி வந்தாள். ஈரேழுலுகங்களும் தம் அசைவுகளே என அடைத்து நின்றார்.

வேறொரு பிரபஞ்சத்தை அனைவரின் விழிக்குள்ளும் காட்டினார். சபை எழுந்தது. ‘நடராஜா... நடராஜா...’ என வாய்விட்டு அலறியது. காளி சிலிர்த்து எழுவதற்குள், அகில மெல்லாம் ஆளும் அரசன் தில்லை நாயகன் சட்டென்று தம் இடக்காலை அழுந்த ஊன்றி வலக்காலை நேர் செங்குத்தாய் தூக்கி நின்றார். காதில் குண்டலம் சூடினார்.

அந்த ஊர்த்துவ தாண்டவம் பார்த்தகாளி அதிர்ந்தாள். ஈசன் பிரபஞ்சம் தாண்டி அங்கிங்கெனாதபடி அனைத்திலும் ஊடுருவி விஞ்சி நின்ற நிலை அது. அந்நிலையின் வெளிப்பாடாய் அமைந்த நாட்டியக் கரணம் அது. ஆடல்வல்லானைத் தவிர வேறெதுவும் அசையாத நிலை அது. சட்டென்று ஒரு கணம் காளி உட்பட, தேவாதி தேவர்களும்.தேவியர்களும், பிரம்மனும், விஷ்ணுவும், பிறரும் தங்களை மறந்து ஈசனோடு ஈசனாய் கலந்தனர்.

காளி, தான் சக்தியின் அம்சமான, ஈசனின் இடப்பாகம் என்பதை அந்தக் கணத்தில் உணர்ந்தாள்.தான் தோற்பது, ஜெயிப்பது என்கிற அளவைத் தாண்டி, தன் இயல்பான சிவசக்தி சொரூபத்தை ஊர்த்துவ தாண்டவத்தின் மூலம் அகத்திலும், புறத்திலும் பார்த்து தெளிந்தாள். பெண் எனும் சக்தியின் மையமாய் இருக்கும் எல்லைகளை புரிந்து கொண்டாள்.

மௌனமாய் தில்லையின் எல்லை நோக்கி நடந்தாள். கிழக்கு நோக்கி அமர்ந்தாள். ஆதி அந்தமில்லா காலமிலா பெருவெளியில் ஈசன் தன்னை தில்லை வனங் களுக்கிடையே பேரருள்பெருக்கி அமர்ந்தான். ஈசன் அமர்ந்ததும் கயிலையிலிருந்து ஈசனை பூசிக்க மூவாயிரம் அந்தணர்கள் புவியிலுள்ள தில்லை வனக்கூத்தனின் முன்பு அமர்ந்தனர். முப்போதும் நெற்றியில் திருநீறுபூசி அகத்திலே சிவத்தீயை  மூட்டினர்.

எம்பெருமானையே எப்போதும் தொழுவர். அந்தணர் என்போர் அறுதொழிலோர் என்பதற்கேற்ப தங்களின் தர்மப்படி வாழ்ந்து வருகின்றனர். இந்த மூவாயிரம் பேர்களும் தெய்வத் தன்மை வாய்ந்தவர்கள். தங்களுக்கு கிடைக்கும் எல்லா செல்வங்களையும் காட்டிலும் திருநீறே தலையாய செல்வம் என்று எப்போதும் நினைப்பவர்கள். தில்லை கூத்தனை தவிர வேறெந்த தெய்வத்தையும் அவர்கள் அறிகிலர்.

எப்போதும் சிவச் செம்பொருளான சிதம்பரம் ஆடல்வல்லானின் திருவடியை மட்டுமே தியானிப்பவர்களே, தில்லை வாழ் அந்தணர்கள். அவர்களின் அடி பரவி நிற்போம். அடியார்க்கும் அடியான் என்பதே சிவ தத்துவம். சிவம் வேறு அடியார்கள் வேறு அல்ல என்பது சிவானுபவம்.

( சிவம் ஒளிரும்)

தொகுப்பு: கிருஷ்ணா

Tags : servant ,
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்...