
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 69’ படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது கடைசி படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது குடியரசு தினத்தினை முன்னிட்டு நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘லியோ’ மற்றும் ‘கோட்’ படப்பிடிப்புகளுக்கு இடையே ரசிகர்களுக்கு மத்தியில் வண்டியின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி மிகவும் பிரபலம். அந்தப் புகைப்படப் பாணியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
