×

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

* ந.பரணிகுமார்

நெல்லுக்கு வேலியிட்டுக் காத்த சிவனே நெல்லையப்பர் ஆனார். அதே நெல்லைச் சீமையிலே பச்சையென பரவிக்கிடக்கும் வயல்கள் சூழ அன்னை கோயில் கொண்டுள்ள இடம் 8, குறுக்குத்துறை ரோடு, ரயில்வே கேட் அருகில், திருநெல்வேலி டவுன், பூமாதேவி ஆலயம் தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் குறுக்குத்துறை சாலையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி செங்கோட்டை இடையே ஓடும் ரயில்பாதை இதன் புறத்தே உள்ளது.

ரயிலில் பயணம் செய்கிறவர்கள் தாமிரபரணியில் நீராடி குறுக்குத்துறை சாலையில் வருபவர்கள், பஸ் பயணிகள் எனப் பலரும் வணங்கிச் செல்கிறார்கள். விழாக்காலங்களில் வெளியூர்ப் பயணிகள் உள்ளூர் பக்தர்கள் என கூட்டம் அலைமோதும். இதில் பிற மதத்தவரும் வெளிநாடு மற்றும் நெடுந்தொலைவிலிருந்து வரும் பக்தர்களும் அடக்கம்.கடவுளைக் கணவனாகவும், குழந்தையாகவும் நினைத்து வாழ்ந்து முக்தி அடைந்தவர் வரிசையில் அன்னை பூமிதேவியைத் தன் தாயாகக் கொண்டு அந்த அன்னை மூலம் பக்தர்களுக்கு அருட்பாலித்து வந்தவர் ஸ்ரீ குரு சுப்பிரமணியம்.

அன்னைக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் கருவாக அவரிடம் உருவாக, அவரது மறைவுக்கு (மார்ச் 1979) பிறகு கட்டி முடிக்கப்பட்டது (1994). நெற்றியில் இடும் நாமத்தைப் போல் வடிவமைப்பு கொண்டது. பூமாதேவி பக்தர்கள் மற்றும் குருவின் அருளாசி பெற்றவர்கள். அறக்கட்டளை மூலமாக முழுக்க பராமரிக்கப்பட்டு வருவதால் இது ஒரு தனியார் ஆலயம் ஆகும். பூமாதேவிக்கு தனி ஆலயம் என்று இருப்பதும் இதன் சிறப்பு அம்சமாகும்.

பூமியின் அம்சமாக விளங்குபவள் பூமாதேவி. அதற்கேற்ப அன்னை பூமியிலிருந்து வெளிவந்தவளாக அன்னையின் கருவறைக்கு கீழே கிணறு உள்ளது. சிறிய கர்ப்பகிரகம். அதையடுத்த சிறிய அர்த்த மண்டபம், பின் ஷண்முக சுந்தர தரும மகா மண்டபம் என அமைந்துள்ளது. அன்னை வீற்றிருப்பது பூமி கோளமாகும். வடக்கு நோக்கி அமர்ந்து இந்த பாரத நாட்டையே பரிபாலித்து வருவது போல இருக்கிறது. சாந்த சொரூபமாக அன்னை இடது கையில் கரும்பும், வலதுகை அபய ஹஸ்தமாகவும் அமைந்துள்ளது. சகலவரங்களை தரும் வரத ஹஸ்தமாகவும் இருக்கிறது. கரும்பு தித்திப்பது போல அவளது கருணையினால் எல்லாமே இனிக்கும்.

அன்னைக்கு முன்னே சிம்ம வாகனமும் மகாபலிபீடமும் அமைந்துள்ளது.சகல விக்னங்களை தீர்க்கும் வெற்றி விநாயகர் சந்நதி கோயில் வளாகத்தில் முதலில் நம்மை வரவேற்கிறது. பூமாதேவி கோயிலுக்கு இடப்புறமும் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது. அரசும் வேம்பும் குடை பிடிக்க விநாயகர் கம்பீரமாய் காட்சி தருகிறார். தன் இரு பக்கங்களிலும் நாகர்களை கொண்டுள்ளது. இங்கு சிறப்பு அம்சம் நாகதோஷம் நிவர்த்தி, ராகு, கேது நிவர்த்திகளுக்கு சிறந்த வழிபாட்டு தலமாகும்.

பயன் அடைந்தவர்கள் பலர். விநாயகர் சந்நதிக்கு வடக்கே அமைந்துள்ள குருவின் தாயார் ராஜமாதா சந்நதி ஆகும். இங்கு சந்நதி தழைக்க நெய் விளக்கேற்றி பக்தர்கள் வலம் வருகிறார்கள். குரு அருள் இருந்தால் தெய்வ கடாட்சம் நிச்சயம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு முன் நமக்கு வழிகாட்டுபவர் குருவே. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார் அருணகிரிநாதர். சாந்தி நிலைய மணி மண்டப சந்நதியில் ஞாயிறு காலை தோறும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. தியானம் இங்கு விரைவில் சித்திக்கும்.குருவின் சந்நதிக்கு இடப்புறமாக கருடனின் சந்நதியும் வலதுபுறமாக ஆஞ்சநேயர் சந்நதியும் அமைந்துள்ளது. இருவரும் அஞ்சலி ஹஸ்தர்களாக காட்சி அளிக்கிறார்கள். இதன் பின்புறம் நந்தவனம் அமைந்துள்ளது.

பூஜைக்குரிய மலர்கள் இங்கிருந்து கிடைக்கிறது.  குரு வணங்கி வழிபட்ட அரிய படங்கள் அமைந்த இடம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு பாட்டுக்களும் ஆராதனையும் நடைபெறும்.வில்வ மரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஆதிஜோதி மனோன்மணீஸ்வரர் ஆதிலோக கற்பகாம்மாள் திருவடிகள் நந்தீஸ்வர்.    நாக கன்னி அழைத்துவர அன்னை கருமாரி வீற்றிருக்கும் இடம். பிள்ளை வரம் கொடுப்பவள்.விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி தோறும் பூஜை நடைபெறுகிறது. மற்றும் மஹா சங்கடஹர சதுர்த்தி சதுர்த்தியன்று சிறப்பு பூஜைகள் ஹோமத்துடன் நடைபெறுகிறது. அன்னைக்கு நவராத்திரி விழா, மார்கழி மாத அதிகாலை பூஜை மற்றும் வருஷாபிஷேகம் (சித்திரை மாதம்) பூஜைகள் நடைபெறுகின்றது.  

நவராத்திரி விழாக்களில் கொலுதர்பார் சிறப்பாக இருக்கும். பாடல்கள், ஆராதனைகள் மேன்மையுடன் நடக்கும். கருட ஜெயந்தி, ஹனுமத் ஜெயந்தி கிருஷ்ணஜெயந்தி போன்ற விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறுகின்றது. பங்குனி முதல் வெள்ளி இத்தலத்தில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாக்காலங்களில் மாக்காப்பு, அன்னாபிஷேகம். சந்தனகாப்பு என்றும் உண்டு. மலர் அர்ச்சனை இங்கு சிறப்பு அம்சம். பக்தர்களே மலர் அர்ச்சனை செய்யலாம். ஆனி மாதம் முதல் வெள்ளி அன்று அன்னை பூமோதேவியின் காட்சி திருநாள் விழா சிறப்பாக நடைபெறுகின்றது. தை கடைசி வெள்ளி விளக்கு பூஜை பிரசித்தம். குருவோடு தெய்வம் கோயில் கொண்டுள்ள மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்று. இயற்கை சூழலும் அமைதியும் இங்கு பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது. தியானம் செய்ய உகந்த இடம், வேண்டும் வரங்களை அள்ளித் தருபவர்களாக அன்னையும், குருவும் இருக்கிறார்கள்.

 பூமியில் இருந்து கிடைக்கும் ஒரு வகை திருமண்ணே இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. குருவின் வாரிசுகள் இங்கு ஆராதனை செய்து வருகிறார்கள். விழாக் காலங்களில் அருள்வாக்கு சொல்வதுண்டு. இங்கு பாடப்படும் அனைத்து பாடல்களும் அன்னையே கொடுத்தது.திருநெல்வேலியில் அமைதியான சூழலில் தியான நிலைக்கு ஏற்றவாறு மக்களின் குறைதீர்க்கும் ஆலயமாக சர்வ வல்லமையும் தன்னுள்ள அடக்கி பூமியின் பிரளயம் என்ற பயமில்லாதவாறு தன் மக்களைப் பரிவுடன் காத்து வருகிறாள் அம்மா ஸ்ரீபூமாதேவி. எண் கோண வடிவில் பிரபஞ்ச  சக்தியை ஈர்க்கும் வகையில் குரு சந்நதிக்கு எதிரே அமைந்துள்ளது. தியானப்பயிற்சி பெற உகந்த இடம். இவ்வாலயத்தின் சிறப்பு பூஜைகளையும் மற்றும் விழாக்களையும் ஆன்மீக அன்பர்கள் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அன்பர்கள் அனைவரும் இவ்வாலய அற்புதத்தை நேரில் காண வாருங்கள். பல வகையான காய்கறிகளைச் சேர்த்து தயாரிக்கப்படும் ‘‘உண்பான்’’ என்பது இங்கு பிரதான பிரசாதமாகும்.

உண்பான் (சாம்பார் சாதம்)
 
தேவையான பொருட்கள் :- 
 
அரிசி   : 1 படி
துவரம் பரும்பு   : 1/2 கிலோ
கத்தரிக்காய்  : 250 கிராம்
முருங்கைக்காய் . 2 வாழைக்காய் : 3
பீன்ஸ்    : 100 கிராம்
கேரட் : 100 கிராம்
அவரைக்காய்  : 100 கிராம்
சீனி அவரை : 100 கிராம்
உருளை  : 250 கிராம்
உள்ளி : 300 கிராம்
தக்காளி  : 300  கிராம்
வத்தல்  : 50 கிராம்
தேங்காய் : 2
சீரகம் : 2 டீஸ்பூன்
புளி : 300 கிராம்
மஞ்சள் பொடி : தே - அளவு
நல்லெண்ணெய் : 200
உப்பு : தே - அளவு
காயப்பொடி : 1 டீஸ்பூன்
வெய்காய வடகம் : 100

செய்முறை :


முதலில் பருப்பை நன்கு மசிய வேக வைத்துக் கொள்கிறார்கள். பிறகு காய்கறிகளை நறுக்கி வேக வைக்கிறார்கள். இதனுடன் மஞ்சள் பொடி சேர்க்கிறார்கள்.  அரிசி வெந்து வரும் சமயத்தில் வேக வைத்த பருப்பை சேர்க்கிறார்கள். அதனுடன்.  தேங்காய் சீரகம் அரைத்த கலவையும் வத்தல் அரைத்த கலவையும் சேர்க்கிறார்கள். பின்  ஊற வைத்த புளியை உப்பு சேர்த்து அதனுடன் சேர்த்து நன்கு கிளறுகிறார்கள். இறுதியில் ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதனுடன் கடுகு உள்ளி சீரகம் காயப்பொடி வெங்காய வடகம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி சாம்பார் சாதத்தில் சேர்க்கிறார்கள். நாவினிக்கும் சாம்பார் சாதம் பிரசாதம் தயார்..
படங்கள்: சுடலை குமார்

Tags :
× RELATED சுந்தர வேடம்