×

’யுஐ’(UI) விமர்சனம்…

முன்னணி திரைப்பட இயக்குனர் உபேந்திரா இயக்கத்தில் வெளியான ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கும் மக்களில் ஒரு தரப்பினர் கொண்டாடுகின்றனர். மற்றொரு தரப்பினர், இதை உடனே தடை செய்ய வேண்டும் என்று போராடுகின்றனர். முன்னணி திரைப்பட விமர்சகர் முரளி சர்மா, இப்படத்தை பலமுறை பார்த்த பிறகும் கூட விமர்சனம் எழுத முடியாமல் தவிக்கிறார். இதனால், இப்படம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உபேந்திராவை தேடிச் செல்கிறார். அவருக்கான விடை கிடைத்ததா, உபேந்திரா இயக்கிய படத்தின் கதை என்ன என்பது மீதி கதை.

யுனிவர்சல் இண்டலிஜன்ஸ் என்பதன் சுருக்கமே UI. இன்றைய அரசியலை நையாண்டி செய்து, அதில் ஃபேண்டஸியை கலந்து, மதம் மற்றும் சாதியை வைத்து மக்களை பிரிக்கும் சில சக்திகள் குறித்து பேசியிருக்கும் இயக்குனர் உபேந்திரா, இயற்கை வளங்களைச் சுரண்டுவதால் எதிர்காலத்தில் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை, 2040ல் கட்டமைக்கப்பட்ட தனது கற்பனை உலகின் மூலம் ரசிகர்களுக்குக் கடத்தியிருக்கிறார்.

கல்கி பகவான், சத்யா ஆகிய இரட்டை வேடங்களில் தனது ஸ்டைலில் நடித்திருக்கும் உபேந்திரா, கல்கி பகவான் கேரக்டரில் ஏகப்பட்ட பன்ச் டயலாக்குகள் பேசி மிரட்டலாக நடித்துள்ளார். அவரை ஒருதலையாய்க் காதலிக்கும் ரீஷ்மா நானய்யா, பாடல் காட்சியில் அழகாக இருக்கிறார். நடிக்க வாய்ப்பு குறைவு. திரைப்பட விமர்சகராக முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக அச்யுத் குமார் மற்றும் பி.ரவிசங்கர், சாது கோகிலா உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

எச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவு காட்சிகளை பளிச்சென்று காட்டியிருக்கிறது. கற்பனை உலகை விஎஃப்எக்ஸ் மூலம் மிரட்டலாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர். பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் கேட்கக்கூடிய ரகம். பின்னணி இசையில் ஓவர் இரைச்சல். உபேந்திராவின் முயற்சி வித்தியாசமானதாக இருந்தாலும், இப்படத்தில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று ரசிகர்களுக்கு உடனே புரியவில்லை. அதைக் கவனித்து சரிப்படுத்தி இருக்கலாம்.

Tags : Upendra ,Murali Sharma ,
× RELATED 2040ல் கற்பனை உலகில் நடக்கும் கதை யுஐ: உபேந்திரா தகவல்