×

14 மணி நேரத்துக்கு பிறகு சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் விடுதலை

திருமலை: ‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்தபோது, தியேட்டரில் நெரிசலில் சிக்கி ரசிகை பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து 14 மணிநேரத்திற்கு பின் அவர் வெளியே வந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் முதல் பிரிமியர் காட்சி கடந்த 4ம் தேதி இரவு காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது தியேட்டருக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜூனை பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார்.

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜூன், ரேவதி குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், ரேவதி குடும்பத்தின் முழு பொறுப்பை ஏற்பதாக கூறி இருந்தார். இந்நிலையில் பெண் இறப்பு சம்பந்தமாக சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் ஓனர் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் 11 வது குற்றவாளியாக நடிகர் அல்லு அர்ஜூன் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் அல்லுஅர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நாம்பள்ளி நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி, நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால் போலீசார் உடனடியாக செஞ்சுலகூடா சிறைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையில் அல்லு அர்ஜூன் உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து ஜாமீன் கேட்டிருந்தார். இதுதொடர்பாக அல்லு அர்ஜூன் தரப்பில் சுமார் 2 மணி நேரம் வாதங்களை கேட்ட நீதிபதி ரூ.50 ஆயிரம் பிணையுடன் 4 வாரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர்.

இதனால் அல்லு அர்ஜூனை சிறையில் இருந்து அழைத்து நீதிமன்ற உத்தரவை கொண்டு செல்வதிலும் அதனை சிறை அதிகாரிகள் பரிசீலனை செய்வதில் காலதாமதம் ஆனது. இதனால் நேற்றிரவு அல்லு அர்ஜூன் சிறையில் தங்க நேரிட்டது. இதற்காக அல்லு அர்ஜூனுக்கு கைதி எண்: 7697 ஒதுக்கப்பட்டு சிறையில் உள்ள மஞ்சிரா பிளாக்கில் உள்ள ஒரு சிறப்பு அறையில் வைக்கப்பட்டார். இரவில் அவர் தரையில் படுத்து உறங்கினார். பிறகு சுமார் 14 மணி நேரத்திற்கு பின் நேற்று காலை 6.45 மணிக்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Tags : Allu Arjun ,Tirumala ,Hyderabad, Telangana… ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...