×

அண்ணாமலையே அண்ணாமலையார்!

அண்ணாமலை என்றால் அருகே நெருங்க இயலாத மலை என்பது பொருளாகும். திருநாவுக்கரசர் இம்மலையை அணாமலை என்றும் அண்ணாமலை என்றும் தம்  மூன்று பதிகங்களில் குறிப்பிட்டுள்ளார். அணாமலை என்றாலும் அதே பொருளாகும். ஐந்து பூதங்களுக்கு (நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்) உரிய தலங்களுள்  இது நெருப்பின் வடிவாய தலம் என்பதால் அங்கு திகழும் மலை. ஒரு காலத்தில் சோதியாகவே காட்சி அளித்ததாகும். லிங்கபுராணம் குறிப்பிடும்  சோதிப்பெருந்தூண் இதுவாகத் திகழ்ந்து பின்பு லிங்கமாகவே மாறிய திருமலையாகும்.

திருஞானசம்பந்தப் பெருமானாரும், திருநாவுக்கரசரும் அங்கு சென்று திருப்பதிகங்கள் (தேவாரம்) பாடி வழிபட்டபோது இன்று திகழும் திருவண்ணாமலை எனும்  நகரமோ பெருங்கோயிலோ அங்கு திகழவில்லை. மலையையே லிங்கமாகத் தரிசித்தனர். அதுவே கோயிலாகத் தோன்றியது. அதனைக் கண்டே தரிசித்து பதிகம்  பாடினர். திருப்பாடல்கள் கிடைக்கப்பெற்ற இருநூற்று எழுபத்தாறு தேவாரத் தலங்களில் மூன்று தலங்கள் மட்டுமே மலையாகக் காட்சி அளிப்பவையாகும். அங்கு  கோயிலோ லிங்கத் திருமேனியோ கிடையாது. திருக்கயிலாயம் திரு இந்திர நீல பருப்பதம் (இமய மலையில் உள்ள நீலகண்ட பர்வதம்) திருவண்ணாமலை  இவை மூன்றினை மட்டுமே சிவலிங்கமாக திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் போற்றினர்.

தற்போதுள்ள திருவண்ணாமலை நகரின் நடுவண் உள்ள பெருங்கோயில் முதலில் ஆதித்த சோழனால் எடுக்கப்பெற்று பின்வந்த மன்னர்களால்தான்  விரிவுபடுத்தப் பெற்றதாகும். மேலே கண்ட செய்திகளுக்கான விரிவான சான்றாதாரங்களை பெரிய புராணத்தில் காணப்பெறும் சேக்கிழார் பெருமானின்  திருவாக்குகளை ஆழ்ந்து நோக்கும்போது மட்டுமே புலப்படும். திருத்தலப் பயணம் மேற்கொண்ட திருஞானசம்பந்தர் நடுநாட்டின் திரு அறையணி நல்லூர் கோயில்  சென்று அங்கு பதிகம் பாடி நின்றிருந்தபோது அங்கிருந்த அன்பர்கள் தூரத்தில் தெரியும் திருவண்ணா மலையினைச் சுட்டிக்காட்டிட முதன்முதலில் தம் கண்ணாற  அம்மலையைத் தரிசித்தார்.

உடன் அறையணி நல்லூர் கோயிலில் இருந்தவாறே ‘‘உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்-’’ எனத் தொடங்கும் பதிகத்தினைப் பாடி  மலையை அண்ணாமலையாராகவே கண்டு தரிசித்தார். இதனை சேக்கிழார்பெருமான், ‘‘அண்ணாமலை அங்கு அமரர் பிரான்வடிவு போன்று தோன்றுதலும்  கண்ணால் பருகிக் கைதொழுது கலந்துபோற்றும் காதலினால் உண்ணாமுலையாள் எனும் பதிகம் பாடித் தொண்டருடன் போந்து தெண்ணீர் முடியார்  திருவண்ணாமலையைச் சென்று சேர்வுற்றார் ’’ என்று ஞானசம்பந்தர் புராணத்தில் கூறியுள்ளார்.

இவ்வாறு திருவண்ணா மலையை அடைந்த திருஞானசம்பந்தர் கட்டுமான கோயிலுக்குச் சென்றதாக எங்கும் குறிக்காத சேக்கிழார் பெருமான், ‘‘அங்கண்  அனைவார் பணிந்தெழுந்து போற்றி செய்த அம்மலைமீது தங்கு விருப்பில் வீற்றிருந்தார்-’’  என்றே குறிப்பிட்டுள்ளார். மேலும் அம்மலை மீதே சிலநாள் தங்கி  வழிபட்டதாகவும் அடுத்த பாடலில் கூறியுள்ளார். அம்மலைமீது உள்ள பெருமானை வழிபட்ட சம்பந்தர் ‘‘ பூ ஆர் மலர் கொண்டு ’’ எனத் தொடங்கும்  பதிகத்தினை அங்கு பாடியபோது ‘‘ நிமலர் உறைகோயில் அண்ணாமலையாரே’’என்றும், ‘‘பரமன் உறைகோயில் அண்ணாமலையாரே-’’ என்றும்,  ‘‘உமையாள் பங்கர் மன்னி உறைகோயில் திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே ’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப் பெருமானாரின் பார்வையில் திருமலையையே சிவலிங்கமாகவும் கோயிலாகவும் கண்டார் என்பது புலப்படும். அவர் பத்ரிநாத் பகுதியில் உள்ள நீலகண்ட  பர்வதம் எனும் மலையை காணாமலேயே திருக்காளத்தி மலையிலிருந்து பாடும்போது அம்மலையை சிவனாகவும் அவனுறையும் இடமாகவுமே (கோயிலாகவுமே)  பாடியுள்ளார். திருநாவுக்கரசரின் தலப் பயணத்தை விவரிக்கும் சேக்கிழார்பெருமான் அப்பர் பெருமான் தரிசித்துப் பாடிய திருவண்ணாமலையை தற்போதுள்ள  கோயிலாகக் கூறாமல் மலையை சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு தேவாரம் பாடிய திறத்தை மட்டுமே உரைத்துள்ளார்.

இதனைப் பெரியபுராணத்து நாவுக்கரசர் புராணம், ‘‘செங்கண் விடையார் திருவண்ணாமலையைத் தொழுது வலம் கொண்டு துங்க வரையின் மிசை ஏறித்  தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும் அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்’’  என்று கூறுகின்றது. மேலும், ‘‘அண்ணாமலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்தங் கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து  எழுந்த உண்ணாநஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகுஞ் சிந்தையுடன் பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பரவி பணி செய்தார்-’’என்றும் தெளிவுபட உரைக்கின்றது.

எனவே, சேக்கிழார் பெருமானின் திருவாக்கின்படி மலையைத்தான் அண்ணாமலையாராக சம்பந்தரும் அப்பரும் கண்டு பதிகம் பாடினர் என்பது ஐயம் திரிபற  உறுதியாகின்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ராஜராஜனின் கல்வெட்டுச் சாசனம் ஒன்று அவன்தேவி அபிமானவல்லி என்பாள் எடுத்த  ‘‘லிங்கபுராணதேவர்-’’ என்ற செப்புத் திருமேனி பற்றி விவரிக்கின்றது. அதனைப் படிக்கும்போது அத்திருமேனி அண்ணாமலையாரின் திருவடிவமே என்பதை  நாம் அறியலாம். திருநாவுக்கரசு பெருமானார் லிங்கபுராணத் திருக்குறுந்தொகை என ஒரு பதிகமே பாடியுள்ளார்.

அதன் கடைப்பாடலில்,

செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்
இங்குற்றேன் என்று லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே

 - என்று அண்ணாமலையாரின் புராணத்தையும் லிங்கபுராணத் தேவர் திருவுருவத்தையும் குறித்துள்ளார். பதினெண் புராணங்களில் ஒன்றாகிய  ஸ்ரீசிவமகாபுராணத்தின் ஞானசம்ஹிதையில் முதலாவதாக ஜோதிலிங்கம் தோன்றிய புராணம் கூறப் பெறுகின்றது. ஒருமுறை திருமாலும் பிரம்மனும் பெரும்  அகந்தையுற்றனர். படைத்தல், காத்தல் ஆகிய இரு தொழில்களுக்கும் தாங்களே காரணம் என்பதால் அவர்தம் ஆணவம் மேலோங்கியது. தங்களுக்குள் பெரியவர்  எவர் என்பதில் போட்டி எழுந்தது.

தங்கள் இருவரைக் காட்டிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா உயர்ந்தோன் ஒருவன் உளன் என்னும் எண்ணம் இருவருக்கும் எழவில்லை. நான்முகனும் மாலவனும்  இதுகுறித்து வாதித்துத் தம்முட் கலகம் விளைவிக்கத் தொடங்கியதும் அவ்விருவர் நடுவே பேரொளிப் பிழம்பொன்று தோன்றியது. அதன் அடியும் முடியும்  கண்ணுக்கு எட்டாதவாறு எல்லை கடந்து உயர்ந்து நின்றது. அதை ஆராயத் தொடங்கியவர்கள் அதன் அடி முடி காணாதவர்களாய்த் திகைத்துத் தளர்வுற்றனர்.  இவை இரண்டிலொன்றைக் கண்டு முதலில் திரும்புகின்றவரே மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவர் என முடிவு கொள்வோம் எனக் கூறிப் புறப்பட்டனர்.

பிரம்மன் அன்னப் பறவையின் உருக்கொண்டு ஔிப்பிழம்பின் உச்சியைத் தேடி உயரப் பறந்தான். மாலவனோ அடியினைக் காணும் அவாவுடன் பன்றி (ஏனம்)  வடிவம் தாங்கி நிலத்தை அகழ்ந்துகொண்டே கீழே சென்றான். அடியும் முடியும் காணவொண்ணாதவாறு அனற்பிழம்பு விளங்குவதைக் கண்டு தேட  ஆற்றலற்றவராய் செயலிழந்து திரும்பி வந்தனர். அவர்களின் ஆணவம் அவிந்து அடங்கியது. ஔிப்பிழம்பாய்த் திகழ்ந்த நெடுந்தூணிலிருந்து (சோதிவடிவாய்)  பெரும் லிங்கத்திலிருந்து சிவபெருமான் தம் திருவுருவத்தினைக் காட்டியருளினார்.

மாலவனும் நான்முகனும் கரம் கூப்பிப் போற்றினர். இந்நிகழ்வினை லிங்கபுராணம் விளக்கமுற உரைக்கின்றது. லிங்கபுராணம் குறிப்பிடும் லிங்கபுராண  மூர்த்திதான் நம் திருக்கோயில்களில் மேற்குப்புற கோஷ்டங்களில் காணப்பெறும் அண்ணாமலையார் எனும் திருவடிவமாகும். இவை அனைத்தையும் தொகுத்து  நோக்கும்போது திருவண்ணாமலை எனும் மலைதான் லிங்க புராணமூர்த்தி. அவரே அண்ணாமலையார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வழிபட்டு பதிகம்  பாடிய அண்ணாமலையே அண்ணாமலையாரின் திருவடிவமாகும்.

கோயிற்கலைச் செல்வர் குடவாயில் பாலசுப்ரமணியன்


Tags : Annamallai Annamallai ,
× RELATED இந்த வார விசேஷங்கள்