×

குமரி மஹாவிஷ்ணு ஆலயத்தில் பஞ்சபாண்டவர்களுக்கு சிறப்பு வழிபாடு

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மிகவும் புனித பூமியாக போற்றப்படுகிறது. அந்தப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இடம் சொத்தவிளை கடற்கரை. இந்த கடற்கரையை ஒட்டியவாறு பஞ்சபாண்டவர்களில் நான்குபேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப்பொய்கையும் அதையொட்டி, மஹாவிஷ்ணு ஆலயமும் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் தர்மனைத் தவிர மற்ற நான்கு பேரும் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை என்ற பெயர் இருந்திருக்கிறது. காலப்போக்கில் அந்த பெயர் மருவி சொத்தவிளை என்று பெயர் மாறி இருக்கிறது. சொத்தவிளை நஞ்சுப்பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது.

மண்ணுக்கு அடியில் கிடைக்கும் வெள்ளைக் கல்கொண்டு நேர்த்தியாக இந்த கோயிலின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டு உள்ளது. மகாவிஷ்ணுவும், மகாலட்சுமி தேவியும் காட்சி தருகிறார்கள். தொடக்கத்தில் மகாவிஷ்ணுவின் பஞ்சலோக ரூபம் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் பஞ்சலோக ரூபம் காணாமல் போனது. மகாவிஷ்ணு, லட்சுமி தேவியும் நின்றகோலத்தில் காட்சியளிக்கின்றனர். வலப்புறம் சந்நிதியில் சிவலிங்கமும், லிங்கத்தின் எதிரே நந்தியும் காட்சியளிக்கிறார்கள். இந்த கோயிலின் புனிதத் தீர்த்தமான நஞ்சுப்பொய்கையில் கால் நடைகள் நீர் அருந்தாது. நஞ்சுப்பொய்கை என்பதால் பொது மக்களும் பயன்படுத்துவது இல்லை. மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு நஞ்சுப் பொய்மையிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள்.

இந்த தீர்த்தத்தால் உடலில் ஏறற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள். எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்த பொய்கை வறண்டு போகாது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்த கோயிலில் தண்ணீர் தேங்கினாலும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை. நஞ்சுப் பொய்கை பற்றிக் கேள்விப்பட்டு பக்தர்கள் வருகை தற்போது அதிகரித்துள்ளது. பொய்கையை பார்த்தவண்ணம் வினைத்தீர்க்கும் விநாயகர்சந்நிதி அமைந்திருக்கிறது.
பொய்கை கரையில் எமதர்மனுக்கு வடக்குப்பார்த்து பீடம் அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரக சந்நிதி, மகா விஷ்ணுக் கோயிலை பார்த்தவாறு ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மகாவிஷ்ணு, சிவன் சந்நிதிக்கு மத்தியில் பஞ்சபாண்டவர் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பஞ்சபாண்டவர் பீடத்தில் தனியாக படையல் இடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி வைகுண்ட ஏகாதசி தினங்களில் கோயில் விழாக்கள் நடக்கிறது. பிரதோஷம், அனுமன் ஜெயந்தியின் போதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

ஞாயிறு சிறப்பு பூஜை

இந்த கோயிலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரை சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் சொந்தவிளை நஞ்சுப்பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் அமைந்திருக்கிறது.


Tags : Kumari Mahavishnu Temple ,
× RELATED இந்த வார விசேஷங்கள்