×

நலமெலாம் அருளும் நரசிங்கபுரத்தான்

*நலம் தரும் நரசிம்மர் தரிசனம் 9
* நரசிங்கபுரம், திருவள்ளூர்


சென்னைக்கு அருகே உள்ள பழமையான நரசிம்ம தலங்களுள் நரசிங்கபுரம்  திருத்தலமும் ஒன்று. ‘நாளை என்பதில்லை  நரசிம்மனிடத்தில்’ என்பது  இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங்களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன்  கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஒன்றுதான்.

இவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே  நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால்,  நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர்.

மூலவர் : ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர். உற்சவர் : ஸ்ரீபிரஹலாத வரதர். தாயார் : ஸ்ரீமரகதவல்லி தாயார் , ஆகமம் பாஞ்சரார்த்தம் , புராண பெயர் : நரச  நாயகர்புரம். ஊர் : நரசிங்கபுரம். ‘பிரகலாதவரதர்’ எனும் உற்சவர் சிலையை உருவாக்கிய விதம் பற்றிய ஆவணம் கூறும் ஒரு பழைய கல்வெட்டு இந்த ஊரின் வரலாற்றினையும்  சற்று விரிவாக உரைக்கிறது. சந்திரகிரி ராஜ்ஜியத்தின், ஜெயங்கொண்ட சோழமண்டல எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றின் அருகில்,தெற்குப் பகுதியில்  நரசநாயகர் புரம் எனும் ஒரு பழைய கிராமம் அமைந்துள்ளது. அவ்வூரில் உள்ள கோயிலில் ‘கடவுளின் அவதாரம்’ எனப் பெயரிடப்பட்டு ‘புரந்தர  நரசிங்க பெருமாள்’ எனும் மூலவர் வீற்றிருந்தார் என மேலும் அக்கல்வெட்டு உரைக்கிறது. அந்த ‘நரச நாயகர் புரம்’ பின் பேச்சு வழக்கில் நரசிங்கபுரம்  என பெயர் மாற்றம் ஆனது.

ஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில்  சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் அருட்பாலிக்கின்றனர். பிராகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி,  மேற்கு பிராகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். இங்கு  அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம்.

மகாவிஷ்ணுவின்,  தசாவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை  அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு. ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை  அழைப்பானோ என்று எண்ணி, அனைத்திலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக  புராணங்கள் சொல்கின்றன.  

இத் தல மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார்  மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காண்பிப்பது  சிறப்பு. தாயாரின்  பார்வை முழுவதும் பக்தர்களை  நோக்கியவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. இத்தல பெருமாளுக்கு கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற  பெயரும் உண்டு.

இரண்யனை வதம் செய்து கோபம் தீராத நரசிம்மரை தாயார் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வது போன்ற இந்தத் தோற்றம், வேறு  எத்தலத்திலும் இல்லாத சிறப்பாகும். கருவறை விமானம் உயர்ந்த நிலையில், திருமாலின் பல அரிய சுதைச் சிற்பங்களோடு அழகாகக்  காட்சியளிக்கிறது. கருவறையில் அருளும் மூலவர், இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் கம்பீரக்  கோலம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும்,  சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை,  அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார். இந்த நரசிம்மரைத் தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு,  லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும்.

நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருப்பது தனிச்  சிறப்பு.சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம் பிரத்யட்ச தெய்வ சக்தி நல்கி, துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. ஜாதகத்தில்  லக்னத்திலிருந்து 6ம் இடமாகிய ருண (கடன்), ரோக (வியாதி), சத்ரு (பகை) ஸ்தான தோஷத்தை உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர் இந்த லட்சுமி  நரசிம்மன்.

 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்தது இக்கோயில்.  ஆலயத்தின் கட்டிட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத்  திறனைப்பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அடித்தளமும் அதன் மேல்பாகமும் கற்களாலும், விமானம், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன.  கருவறை விமான கோபுரத்தில் சுண்ணாம்பு சுதையால் ஆன அழகிய உருவங்கள் உள்ளன.

இக்கோயிலில், 14 கல்வெட்டுகள் படி எடுக்கப் பட்டுள்ளன. இதில் முதலாம் குலோத்துங்கன் காலத்திய இரண்டு கல்வெட்டுகளில், அவன் காலத்தில்  ராமர், சீதை உற்ஸவ மூர்த்திகள் இந்தக் கோயிலுக்கு வழங்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. ராமருக்கு உற்ஸவம் நடத்த அந்த மன்னன் சில  தானங்களை அளித்த செய்தியையும் அந்தக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  இத்தலம் ஸ்ரீ அஹோபில மடம் 45ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரால் மங்களாஸாசனம் செய்யப்பட்ட  தலமாகும்.

சக்கரத்தாழ்வார், ஆண்டாள் மற்றும்  ராமருக்கும் தனித் தனியே சந்நதிகள் அமைக்கப் பட்டுள்ளது. ஆஞ்சநேயர்  சந்நதி கோயிலுக்கு வெளியே  பெருமாளைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. பிராகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சந்நதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கல்யாண மண்டபமும் உள்ளது. 4 அடி உயரத்தில்,  16 நாகங்களை அணிகலனாக கொண்ட பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு அருள்கிறார்.

 இவரைத் தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள்  வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.ஆனி பிரமோற்ஸவம் 10 நாட்கள், நரசிம்ம ஜெயந்தி, கருட சேவை, சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்), அன்னக்கூட உற்சவம் போன்ற  விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

நரசிம்ம அவதாரத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. மற்ற அவதாரங்களில் நாராயணன் ஒரு குறிக்கோளுடன் உலக நன்மைக்காக நேரிடையாக  அவதரித்து, அவதார நோக்கம் முடிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளிவிட்டார். ஆனால், நரசிம்மனாக அவதரித்தது முதல் அன்றும், இன்றும்,  என்றும், எங்கும், எதிலும் வீற்றிருந்து இவ்வுலகை அவர் ரட்சிக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை.

ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா

சிங்க முகமும், பயங்கர உருவமும், அபய கரமும், கருணையும் கூடிய, எங்கும் நிறைந்திருக்கும் பெருமானே..! இவ்வுலகைக் காத்து, பாவங்களைக்  களைந்து, விரைவில் பலன் தருகின்ற அன்னை லட்சுமியின் அருளோடு கூடிய லட்சுமி நரசிம்மா..! வரங்களைத் அள்ளித் தந்தருளும்!  சென்னையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், நரசிங்கபுரத்தில் மரகதவல்லி சமேத லட்சுமி நரசிம்மன் கோயில், திருவள்ளூர் மாவட்டத்தில்  பூவிருந்தவல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

(தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்


Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்