×

தீர்த்தமலையில் மாசிமகத் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மாசிமகத் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 16வது கிலோ மீட்டரில், பிரசித்திபெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா, கடந்த 18ம் தேதி துவங்கியது.

10 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல்நாள் கணபதி ஹோமம், விநாயகர் பூஜை ஆகியவையும் 19ம் தேதி கொடியேற்றமும், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்னப்பட்சி, ராவனேசுவர மற்றும் மயில் வாகனம் ஆகியவற்றில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 21ம் தேதி விளக்கு பூஜையும், 23ம் தேதி சுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழாவில் நேற்று மாலை 3 மணியளவில் திருத்தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், வடிவாம்பிகை உடனமர் தீர்த்தகிரீஸ்வரர், அம்மன் சுவாமியை வைத்து தேரோட்டம் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச்சென்றனர். அப்போது தேரின் மீது விவசாயிகள் தங்கள் விளை பொருட்களையும், பக்தர்கள் மிளகு, உப்பு, பொறி கடலை, ஆமணக்கு உள்ளிட்டவற்றை இரைத்தனர். இந்த தேரோட்ட விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், தீர்த்தமலைக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.  விழாவில் ஆர்டிஓ புண்ணியகோட்டி, தாசில்தார் அன்பு, கோயில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரூர் டிஎஸ்பி செல்லப்பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  விழாவையொட்டி அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Mahasamtha Thottam Kolakkalam ,devotees ,Thirthamalai ,
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி