×

ஏரல் சேர்மன் கோயில் தை அமாவாசை திருவிழா கோலாகலம் : பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி தரிசனம்

ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாசை திருவிழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் தாமிரபரணியில் புனித நீராடி சுவாமியை தரிசித்தனர். ஏரலில் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். தனித்துவமிக்க தை அமாவாசை திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் 10ம் திருநாளான நேற்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் நடந்தது. இதில் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தினார். இதையொட்டி பெருந்திரளாக வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி தரிசித்தனர்.

நேற்று மாலை இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு முதற்கால கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தியும், தாமிரபரணி ஆற்றில் வாணவேடிக்கையும் நடந்தது. தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி கோயிலை வலம் வந்து ஏரல் மற்றும் முக்கிய வீதிகளில் உலா சென்ற பின்னர் மீண்டும் கோயிலை வந்தடைந்தார். இதனிடையே தை அமாவாசை திருவிழாவையொட்டி கார், வேன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாதை வழியாக ஆற்று கரையோரப் பகுதியில் விடப்பட்டிருந்தன. மேலும் பக்தர்களின் நலன்கருதி இரவை பகலாக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் டவர் அமைத்து மின்விளக்கு வசதி செய்துதரப்பட்டிருந்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாயஜோஸ் தலைமையில் ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி, எஸ்.ஐக்கள் சரவணன், சண்முகசுந்தரம், சுந்தரராஜன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். 11ம் திருநாளான இன்று (5ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1.30 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சியும் நடக்கிறது.

நாளை (6ம் தேதி) தை அமாவாசை திருவிழா நிறைவுபெறுகிறது. தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் காலை சுவாமி நீராடலும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலைச் சயனம் மங்கள தரிசனமும் நடக்கிறது. தை அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார்.

Tags : Tamar Chakram ,
× RELATED இணைந்திருக்கும் தெய்வீக இசை