×

பழமொழிகள் சொல்லும் பாடம்!

இலக்கியங்கள் வரி வடிவமாகவும் (எழுத்து), வாய் மொழியாகவும் பரவி, தம்மை நிலைப்படுத்திக் கொள்கின்றன. வாய்மொழி இலக்கியங் களில் ‘பழமொழி’ என்பதும் ஒன்று. ‘முதுசொல்’ என்று தொல்காப்பியம் போற்றும் பழமொழிகள் இன்றும் நம் பேச்சுவழக்கில் இயல்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.இவை அதிகமாக எழுத்துவடிவம் பெறாமல், வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் தம் உண்மைப் பொருளிலிருந்து மருவி மாற்றுப் பொருளைத் தருவதாக மாறிவிட்டன. அவ்வகையில் சில பழமொழிகளின் உண்மைப் பொருளைக் காணலாம்.

சிலர் தன் எளிமை நிலையை சொல்வதற்கு ‘‘குருவிக்குத் தகுந்த ராமேசுவரம்’’ என்ற பழமொழியைப் பயன்படுத்துவர். இது இராமனின் வில்லாற்றலைக் குறிப்பிடும் பழமொழியாகும். ‘‘குறி வைக்கத் தகுந்த ராமசரம்’’ என்பதே இதன் உண்மை வடிவம். இராமனின் வில்லிருந்து புறப்படும் ஒவ்வொரு சரமும் குறியை அடைந்தே தீரும் என்பதே, இதன் உண்மை விளக்கமாகும். கிராமங்களில் பால், தயிர், போன்ற பண்டங்களில் எறும்பு இறந்து கிடந்தால், ‘‘எறும்பு தின்னா? கண் தெரியும்’’ என்ற பழமொழியைக் கூறி, அவற்றை சேர்த்து உண்பது பழக்கம். இப்பழமொழியின் உண்மை விளக்கம் அக்காலத்தில் எறும்பு தின்னவேண்டும் என்பதற்காக அரிசிமாவால் கோலமிடுவது வழக்கம்.

அரிசிமாவை ‘‘எறும்பு தின்றால்’’, தானத்தின் பலனாக நமக்கு முதுமையில் கண்பார்வை தெரியும்’’ ஆகவே எறும்பை நாம் தின்றால் கண் தெரியாது. நாம் செய்யும் தானத்தால் ‘எறும்பு தின்னா? கண் தெரியும்’ என்பதே இதன் பொருள் என்பர் பெரியோர்.

வாழ்வின் நிலையாமையைப் பற்றிப்பேச ‘‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’’ என்ற பழமொழியைக் கூறுவது இயல்பு. ஆனால், இப்பழமொழியோ செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்த கர்ணனின் நிலையைக் கூறுவதாகும். மகாபாரதத்தில் கர்ணன். பாண்டவருள் ஒருவனாகப் பிறந்தவன். ஆனால், வஞ்சகர்களாகிய கௌரவர்களுள் ஒருவனாக வாழ்ந்தான். போரில் கர்ணன் ஒருவன் இறந்தால், கர்ணனைச் சேர்ந்து பாண்டவர் அறுவருள் ஒருவன் இறந்ததாகவும் கௌரவர் நூறுபேரில் ஒருவன் இறந்ததாகவும் பொருள். ஆகவே கர்ணன் இறந்துவிட்டால் ‘‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’’ என்பது புலப்படுகிறது.

கல்விகற்றலில் பிள்ளைகள் ஆர்வம் காட்டாவிடில், ‘‘அடியாத புள்ள படியாது’’ என்ற பழமொழியைக் கருத்தில் கொண்டு சில ஆசிரியர்கள், பிள்ளைகளை அடித்து, பாடம் நடத்துவர். ஆனால், இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் மேற்கண்ட செயலுக்கு மாறானதாகும். ‘‘அடியாதே, புள்ள படியாது’’ என்று பிள்ளைகளை அடிக்காமல் அன்புப் பாடத்தையே நடத்த வேண்டுமென இப்பழமொழி அறிவுறுத்துகின்றது.

‘‘ஆனைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்’’ என்ற பழமொழி பழிவாங்கும் எண்ணத்தைத் தருவதைப் போலத் தோன்றினாலும், அரிய மருத்துவக்குறிப்பை அகத்தே கொண்டுள்ளது. ‘‘ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால், பூ நெய்க்கு ஒரு காலம் வரும்’’ என்று இப்பழமொழியை சரியாகப் பிரித்துப் பொருள் கண்டால், ஆநெய் (பசுநெய்) உண்பதற்கு ஒரு காலம் வந்தால் பூநெய் (தேன்) உண்பதற்கு ஒருகாலம் வரும் என்பது புலப்படும். இளமையில் நெய்யும், முதுமையில் தேனும் உண்ண வேண்டும் என்ற உடல்நலப் பாதுகாப்பை பயிற்றுவிப்பது இப்பழமொழி.

தமிழ் மக்கள் மரபில் சகுனம் (நிமித்தம்) பார்ப்பது ஒரு நம்பிக்கையாகக் கருதப்படுகிறது. வெளியே பயணம் மேற்கொள்ளும் போது, பாதையின் குறுக்கில் பூனை சென்றால் அபசகுனம் என்ற மூடநம்பிக்கை ஒரு பழமொழியை மாற்றிப் புரிந்துகொண்டதன் விளைவாகும். பூனை யானையைவிட சிறிய மிருகமாக இருந்தாலும், அது மலம் கழிக்கும்போது, கண்ட இடத்தில் கழிக்காமல் தானே மண்ணைப் பறித்துக் குழிசெய்து, தில் மலம் கழித்து தூய்மை வாழ்வு வாழும்.

ஆனால், யானை இத்தகைய தன்மையதல்ல. இக்கருத்தை ‘‘ஆனை மலம் கிடைத்தாலும் பூனை மலம் கிடைக்காது’’ என்ற பழமொழி பகர்கிறது. ஆனால், இப்பழமொழியிலுள்ள ‘மலம்’ என்ற சொல் ‘வலம்’ என்று மாறி ‘‘ஆனை வலம் கிடைத்தாலும் பூனை வலம் கிடைக்காது’’ என்று திரிந்தது. ஆகவே, மாற்றிப் புரிந்துகொண்டதால் பூனை வலமாகச் சென்றால் ‘நன்று’ எனவும், இடப்புறமாகச் சென்றால் ‘தீது’ எனவும் கருதுவது திருத்திக்கொள்ள வேண்டி மனப்பான்மை ஆகும். பூனையிடமிருந்து சகுனம் பார்ப்பதை விடுத்து அதனுடைய தூய்மை வாழ்வைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சிறுகுழந்தைகள் ஏதேனும் ஒரு செயலைப் பிழையாக செய்துவிட்டால், உடனே சில பெரியோர்கள் ‘‘சிறுபிள்ளை வெள்ளாம வீடு வந்து சேராது’’ என்றுகூறித் திட்டுவர். ஆனால், இப்பழமொழியோ குழந்தைகளின் செயல் வலிமையை வரவேற்பது ஆகும். ‘‘சிறு பிள்ளை, வெல்லாம, (வெல்லாமல்) வீடு வந்து சேராது’’ ஒரு செயலில் வெற்றி வாகை சூடும் என்று கூறுவதே இப்பழமொழியாகும். இதன் உண்மை விளக்கத்தை உணர்ந்து பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.

மருத்துவத்தைப் பற்றி கூறும்போது ‘‘ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்’’ என்ற பழமொழியைக் கூறுவர். ஆனால், இதன் உண்மை வடிவம் ‘‘ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்’’ என்பதாகும். ஆயிரம் வகையான மூலிகைகளின் வேரை தன்னகத்தே கொண்டவனே அரைவைத்தியன் என்று அறிய வேண்டும்.

வாழ்க்கையில் சில சமயங்களில் ‘அடி உதவுறமாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்ற பழமொழியைக் கூறுவர் இது வன்முறையை வளர்ப்பதைப் போல தோன்றும். அண்ணன் தம்பிமார்களைவிட அடியே உதவும் என்பது அப்பழமொழியின் கருத்து அன்று. இது மகாபாரதத்தில் அர்ச்சுனனின் போர்க்கள நிலைமையை உணர்த்துவதாகும். போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு அவனுடைய அண்ணன் தம்பிமார்களாகிய பாண்டவர்களும் கௌரவர்களும் உதவவில்லை. மாறாக, கண்ணனுடைய திரு ‘அடி’ (பாதம்) தான் உபதேசம் செய்து உதவியது. ஆகவே, இப்பழமொழி ஆண்டவனின் திரு‘அடிப்’ பெருமையை போற்றுவதாகும்.

‘எறும்பு ஊர கல்லும் தேயும்’ என்ற பழமொழி சிற்பக்கலையில் பயன்படுத்தப்பட்ட ஒருவகைத் தொழில் நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடுவதாகும். ஒரு கல்தூணின் மேற்பகுதியிலிருந்து அடிப்பகுதி வரை கடுகு நுழையும் அளவிற்கு துவாரம் இடுவர். இதற்கு முதலில் கல்லின் மேற்பகுதியில் ஒரு சிறுதுளையை மட்டும் இட்டு, பின்னர் நாள்தோறும் அத்துளையின் மீது இனிப்பையோ அல்லது தேனையோ சிறிது வைப்பர். அதனை உண்பதற்காக எறும்பு ஊரும். நாட்போக்கில் கல்லின் அடிப்பகுதி வரையில் எறும்பு ஊரு கல்லைத் தேய்த்து சிறு துவாரத்தை உருவாக்கும். இந்தக் கலை நயம்மிக்க தொழிற்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடுவதே ‘எறும்பு ஊற கல்லும் தேயும்’ என்பதாகும்.

உள்ளத்தின் கருத்தை மறைக்காமல் அப்படியே வெளியே காட்டுவதை ‘உள்ளங்கை நெல்லிக்கனிப்போல’ என்ற பழமொழியை பயன்படுத்திக் கூறுவது வழக்கமாக உள்ளது. இப்பழமொழியில் வேறு பழங்களை உவமையாகக் கூறாமல் நெல்லிக்கனியைக் கூறியதற்கு காரணம் உண்டு. நெல்லிக்கனிக்கு மட்டும்தான் உட்புறத்தில் அமைந்துள்ள விதையின் வடிவமும் வெளிப்புறத்தில் உள்ள கனியின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கும்.

மேலும், இந்தக்கனி மட்டும்தான் உண்ணும் முன்னே கசக்கும்; பின்னே இனிக்கும். இவை வேறு எந்தவொரு கனியிலும் காணக் கிடைக்காத ஒன்றாகும். அதனால்தான் உள்ளக்கருத்தை வெளிப்படையாகக் கூறும்போது ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது.

யாராவது நீண்ட நேரம் அழுதால். உடனே ‘‘நீலிக்கண்ணீர் வடிக்காதே’’ என்ற பழமொழியைக் கூறுவது வழக்கமாக உள்ளது. இந்த ‘‘நீலிக்கண்ணீர்’’ என்ற பழமொழியின் உண்மைப் பொருள். சிலப்பதிகாரத்தில் உள்ள ஒரு முற்பிறவிக் கதை ஆகும். ‘நீலி’ என்பவள் ‘சங்கமன்’ என்பவனின் மனைவி ஆவாள். சங்கமன் என்பவன் ஒருவணிகன். அவன் ‘பரதன்’ என்பவனின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். சங்கமன் இறந்தவுடன் ‘நீலி’ பதினான்கு நாட்கள் அழுது கண்ணீர் வடித்து உயிர்விட்டாள். இவள் வடித்த கண்ணீரே ‘‘நீலிக்கண்ணீர் வடிக்காதே’’ என்ற பழமொழி உருவாவதற்குக் காரணமாகும்.

அந்த ‘சங்கமன்’ மறுபிறப்பில் பொற்கொல்லனாகப் பிறக்கிறான். தன்னை முற்பிறவியில் சூழ்ச்சி செய்து கொன்ற கோவலனை பொற்கொல்லன் ‘‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’’ என்பதற்கு ஏற்ப கொல்கிறான். இது சிலப்பதிகாரத்தில் கட்டுரைக் காதையில் காணப்படும் செய்தி ஆகும்.ஒருவனைத் தவறு செய்யத் தூண்டும் போது ‘‘களவும் கத்து மற’’ என்ற ஒரு பழமொழியைப் பயன்படுத்துகின்றனர் சிலர். திருடுவதையும் கூட கற்றுக்கொள்ள வேண்டும்.

பின்னர், அதனை மறந்துவிட வேண்டும். என்பதாக தவறான பொருள் கொள்ளப்படுகிறது. இந்தப் பழமொழியின் உண்மை வடிவம் ‘‘களவும் கத்தும் மற’’ என்பதாகும். ஆனால் இது தற்போது ‘‘களவும் கத்து மற’’ என்று திரிந்து உள்ளது. ‘களவும்’ என்பது திருட்டையும் ‘கத்தும்’ என்ற சொல் பொய் சொல்லுதலையும் குறிக்கும். ஆகவே, திருட்டையும் பொய்யையும் மறந்துவிட வேண்டும். என்பதே உண்மையான பொருளாகும்.

சமய வேற்றுமையை வெளிப்படுத்த ‘‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்’’ என்ற பழமொழி பயன்படுத்தப்படும். உண்மையில் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் சம்பந்தம் உண்டு. இஸ்லாமிய சமயத்தை சார்ந்தவர்கள் தான் அமாவாசை நாளைக் கணக்கில் கொண்டு, தொடர்ந்து மூன்றாம் நாள் பிறைபார்த்து நோன்பு மேற்கொள்வது வழக்கம். ஆகவே அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் சம்பந்தம் உண்டு என்பதை உணரவேண்டும்.

(தொடரும்)

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

The post பழமொழிகள் சொல்லும் பாடம்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்