×

தீர்க்கசுமங்கலி ஆக்கும் திருமணப் பொருத்தம்!

மனதைப் பொறுத்துத்தான் நாம் வாழும் வாழ்க்கை அமையும். மனம் என்பது உணர்வுகளாலும், எண்ணங்களாலும் சூழப்பட்டது. மாறுபட்ட உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் வெளிப்பாடே, ‘‘என்னை ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்கறாங்க’’ என்கிற கேள்வி. இதுதான் வீட்டில் நடக்கும் கணவன், மனைவி பிரச்னையை அலுவலகம் வரை இழுத்துவந்து அலைக் கழிக்க வைக்கிறது. ‘‘ஏன் என்னை எப்போ பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கா’ என்று எரிச்சலை ஏற்படுத்துகிறது. சிறுசிறு மனஸ்தாபங்கள் சேர்ந்துதான் பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது. பொருத்தங்களை சரியாகப் பார்த்து சேர்க்கும்போதுகூட பிரச்னைகள் வரும். ஆனால், வந்தபடியே போய்விடும். ‘‘வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா’’ என்று நகர்ந்து விடும். அது பத்து நிமிட இடியுடன் கூட மழை… அவ்வளவுதான்! பொருத்தமற்று சேர்க்கும்போது கணவன், மனைவி பிரச்னையில், மறைமுகமாக பழிவாங்கும் குணமும், விரோதத் தன்மையும் ஏற்பட்டு விடும். மெல்லியதாய் வாழ்வில் நஞ்சு பரவும்.

அதனால்தான் திருமணப் பொருத்தங்கள் தினசரி உரையாடல் முதல் உயிர் காக்கும் பொருத்தம் வரை முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறது. அப்படிப்பட்ட உயிரையே காக்கும் பொருத்தத்தைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். என்னதான் வசியம் இருந்தாலும், அன்யோன்யமாகப் பேசி ‘நீ பாதி நான் பாதி’ என்று பரவசம் காட்டினாலும், அந்த சுகமும் சந்தோஷமும் தொடர்ந்து நீடிக்குமா அல்லது நீர்க்குமிழி போல மறைந்து விடுமா என்பதையெல்லாம் நிர்ணயிப்பதே இந்த ‘ரஜ்ஜு பொருத்தம்’தான். ‘ரஜ்ஜு’ என்றால் கயிறு என்று பொருள். நாம் திருமாங்கல்யம், தாலிக் கயிறு என்று பொருள் கொள்ள வேண்டும். ‘‘கழுத்துப் பொருத்தம் கயிறுப் பொருத்தமெல்லாம் பார்த்தாச்சா’’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்களெல்லாம் பேச்சுவாக்கில் சொன்னதெல்லாம் இந்தப் பொருத்தத்தைப் பற்றித்தான். எத்தனை சௌபாக்கியங்கள் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு தாலி பாக்கியத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை.

‘‘கார் சுக்குநூறா கிடக்குது. அதைப் பார்த்ததும் சப்தநாடியும் ஒடுங்கிடுச்சு. நம்ம எஞ்சினியர் லேசான அடியோட தப்பிச்சது பெரிய விஷயம்…’’ ‘‘எல்லாம் அந்தம்மாவோட தாலி பாக்கியம்தான். இதோட நாலாவது தடவையாமில்ல இப்படி நடக்கறது’’ என்று யாரேனும் பேசிக் கொண்டால், அங்கு பலமான ரஜ்ஜு பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். ‘‘சும்மா அழுதுகிட்டே இருக்காதீங்கம்மா. யாராவது பெரியவங்களைக் கூப்பிடுங்க. பெரிய ஆபரேஷன்மா இது’’ என்று மரணத்தின் விளிம்பில் இருக்கும் கணவரை மருத்துவர் விட்டாலும்கூட, மகாதேவனாக இருந்து காப்பாற்றும் மகிமையுள்ள பொருத்தம் இது.

‘‘என் கல்யாணத்துக்கு நூறு பேர்கூட வரலை. ஆனா, என் பையன் கல்யாணத்துக்கு ஊரே திரண்டு வந்து வாழ்த்தினாங்க. இதையெல்லாம்கூட பெருமையா நினைக்கலை. அவருக்கு முன்னாடி நான் தீர்க்க சுமங்கலியாக போயிடணும். அந்த யோகம் எனக்கு இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க’’ என்று கேட்கும் பெண்மணிகளின் பேச்சிலும், மூச்சிலும் இருப்பதெல்லாம் இந்த ரஜ்ஜு பொருத்தம்தான்.

‘‘தினம், கணம், யோனிப் பொருத்தமெல்லாம் நல்லாயிருக்குங்க. ஆனா, ரஜ்ஜு மட்டும் தட்டுதுங்க. மத்த பொருத்தமெல்லாம் நல்லாயிருக்கும்போது இந்த பொருத்தம் இல்லேன்னா, அதுவே சரி பண்ணிக்காதா’’ என்று கேட்பவர்கள் உண்டு. சாம்பாரில் உப்பும், மிளகாய்த்தூளும், பருப்பும் சேர்ந்து தனிச் சுவையை அளிக்கிறது. இப்படி எல்லாமும் சேர்ந்து தனிச் சுவையைக் கொடுத்தாலும், நீரின் தன்மையில்தான் அதன் ருசி அடங்கியிருக்கிறது. சிறுவாணி தண்ணீருக்கும் செம்பரம்பாக்கம் தண்ணீருக்கும் தனித்தன்மைகள் உள்ளன. அதுபோல ஆணையும் பெண்ணையும், காதலனையும் காதலியையும் தாலிபாக்கியம் தம்பதியர் ஆக்குகிறது. அதில் தினப் பொருத்தம் அனுதினமும் இனிமையான பேச்சை அளிக்கிறது. கணம் குணநிலையையும், மனநிலையையும் சமமாக வைக்கிறது. ராசிப் பொருத்தம் விட்டுக் கொடுத்தலை உருவாக்குகிறது. வசியப் பொருத்தம் அகலாத ஈர்ப்பு சக்தியை வழங்குகிறது. யோனிப் பொருத்தம் அந்தரங்க அன்பான வாழ்வைத் தீர்மானித்து சந்தோஷத்தை அளிக்கிறது. இத்தனை சுகங்களையும் மகிழ்ச்சியையும் நிரந்தரமாகக் கிடைக்கச் செய்வதுதான் ரஜ்ஜு பொருத்தம். எல்லாவற்றையும் தங்கு தடையின்றி தொடரச் செய்வது தான் இந்தப் பொருத்தம்.

சரி, இந்த ரஜ்ஜு என்கிற விஷயம் தம்பதியருக்கு என்ன விதமாக உபயோகப்படுகிறது? காப்பு கட்டுதல் என்று கிராமத்தில் சொல்வார்கள் அல்லவா? அந்த காப்புதான் இந்த ரஜ்ஜு பொருத்தம். காப்பு கட்டும்போது கயிற்றைத்தான் கட்டுவார்கள். அதையேதான் திருமணத்தில் தாலியாகக் கட்டுகிறார்கள். காப்பு கட்டுவதற்கு எந்தெந்த விதமான சடங்குகள் உண்டோ, அத்தனையும் தாலி கட்டும்போதும் உண்டு. நட்சத்திரங்களைப் பார்த்து, யாரோடு யார் இணைந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள் என்று பார்த்துச் சேர்க்க வேண்டும். கணவன், மனைவி உறவு மற்றும் அந்தரங்கத்திற்கான காப்புதான் இந்த ரஜ்ஜு. நாம் ரட்சா (ரட்சாபந்தன்), ரட்சகர் என்றெல்லாம் ‘பாதுகாப்பவர்’ எனும் அர்த்தத்தில் கூறுகிறோம் அல்லவா? அதுபோல இந்த ரஜ்ஜு என்பதும் காக்கும் அம்சமுள்ள காப்பு என்பதைத்தான் குறிக்கிறது. ரஜ்ஜு பொருத்தம் என்கிற தாலிக்கயிறு பொருத்தம் சரியாக அமைந்து விட்டால், எமனின் பாசக்கயிற்றைக்கூட எதிர்த்து விடலாம் என்கின்றன ஜோதிட நூல்கள்.

கால புருஷனை ஒரு மனிதராக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த காலபுருஷனின் அங்கங்களாக நவகிரகங்களை மனதிற்குள் கொண்டு வாருங்கள். இந்த அங்கங்கள் வழியாகத்தான் காலபுருஷன் இயங்குகிறான். இதில் பாதமாக கேதுவும் புதனும் இருக்கிறார்கள். கேதுவின் ஆளுமையுள்ள அஸ்வினி, மகம், மூலம் மற்றும் புதன் ஆட்சி செய்யும் ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்றவற்றை இந்தப் பாதம் குறிக்கிறது. இதையே ‘பாத ரஜ்ஜு’ என்று வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் மேலேயுள்ள தொடையாக சுக்கிரனும், சனியும் இருக்கிறார்கள். பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களை சுக்கிரன் ஆள்கிறார். அதேபோல பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களை சனி பகவான் ஆளுகிறார். எனவே இந்தத் தொகுப்பை ‘தொடை ரஜ்ஜு’ என்று வைத்திருக்கிறார்கள்.

அடுத்து தொப்புள் அல்லது வயிறாக சூரியனும், குருவும் இருக்கிறார்கள். சூரியன் ஆட்சி செய்யும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களும், குரு ஆளும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களும் இதில் அடங்குகின்றன. இதை ‘தொப்புள் ரஜ்ஜு’ என்கிறார்கள். அடுத்து கண்டம் என்கிற கழுத்தாக சந்திரனும், ராகுவும் உள்ளனர். அதில் சந்திரன் ஆட்சி செய்யும் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும், ராகு ஆதிக்கம் செலுத்தும் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களும் வருகின்றன. இந்தத் தொகுப்பை ‘கழுத்து ரஜ்ஜு’ என்று தனியே வைத்தார்கள். அடுத்து சிரசாக செவ்வாய் வருகிறது. செவ்வாய் ஆட்சி செய்யும் நட்சத்திரங்களாக மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் போன்றவை வருகின்றன. இதை ‘சிரசு ரஜ்ஜு’ என்று வைத்தார்கள்.

அதாவது இந்த தாலிக் கயிறுக்கான பொருத்தத்தைப் பார்ப்பதற்காக ரஜ்ஜுவை வைத்து பாதக் கயிறு, தொடைக் கயிறு, தொப்புள் கயிறு, கழுத்துக் கயிறு, சிரசுக் கயிறு என்று ஐந்தாக பிரித்தார்கள். அப்படி பிரித்து ஐந்துக்குள் எதை எதோடு சேர்த்தால் பொருத்தம் என்று தீர்மானமாகச் சொன்னார்கள். முதல் விதியாக, பாதத்திற்கு பாதம்… தொடைக்கு தொடை என்று ஒரே கயிற்றைச் சேர்க்கக்கூடாது என்றார்கள். அதாவது அந்த பாத ரஜ்ஜு தொகுப்புக்குள் வருகிற நட்சத்திரங்களை சேர்க்காதீர்கள் என்று சொன்னார்கள்.

ஏன் அப்படிச் சொன்னார்கள்? எப்போதுமே சேர்க்கும்போது பிணைப்பும், இணைப்பும் உறுதியாக இருக்க வேண்டும்; பிரியக் கூடாது. காந்தத்தில் வட துருவமும் வடதுருவமும் சேராது. வட துருவமும் தென் துருவமும் சட்டென்று கவர்ந்து இழுத்து ஒட்டிக் கொள்ளும். அதே நியதிதான் இங்கும். ஒரு பாத ரஜ்ஜுக்குள் இருக்கும் தொகுப்பு நட்சத்திரங்களை சேர்க்கும்போது ஈர்ப்பு சக்தி குறையும்; ஒட்டாது தள்ளி நிற்கும். ஆரம்பத்தில் சொன்னோமே அந்த காப்பு, அதாவது அந்த பாதுகாப்பு வளையம் உருவாகாது. ஒரே கயிறு கொண்டவர்களைச் சேர்த்தால், பிரிய வேண்டிய சூழ்நிலை விதியாக அவர்களைத் தேடிவரும். இந்த சூட்சுமமான விஷயத்தை ரஜ்ஜு பொருத்தத்திற்குள் அழுத்தமாக
வைத்தார்கள் முன்னோர்கள்.

நீங்கள் நட்சத்திரங்களால் ஆளப்படுகிறீர்கள். அவைகளுக்குள்ளும் நண்பர்கள், பகைவர்கள், இணையானவர்கள் என்று உண்டு. எந்த நட்சத்திரம் எதனோடு சேரும்போது நல்லதோ, அதைச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுதான் இந்த ரஜ்ஜு பொருத்தம்.

இதற்கு அடுத்ததாக வேதைப் பொருத்தம் என்று பார்ப்பார்கள். வேதை என்பதற்கு வதைபடுதல், வருத்தப்படுதல், எல்லாம் இருந்தும் எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுதல் என்று பல அர்த்தங்கள் உண்டு. இந்த நிலையெல்லாம் வராமல் இருப்பதற்காக சில ஜோடிகளைத் தவிர்ப்பது நல்லதென்று பழைய நூல்கள் கூறுகின்றன. அதாவது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருப்பினும் சரி இந்த நட்சத்திர ஜோடிகளை மட்டும் சேர்க்காதீர்கள் என்று எச்சரிக்கின்றன. அதாவது அஸ்வினியோடு கேட்டையை சேர்க்கக் கூடாது. பரணி – அனுஷம், கார்த்திகை – விசாகம், ரோகிணி – சுவாதி, திருவாதிரை – திருவோணம், புனர்பூசம் – உத்திராடம், பூசம் – பூராடம், ஆயில்யம் – மூலம், மகம் – ரேவதி, பூரம் – உத்திரட்டாதி, உத்திரம் – பூரட்டாதி, அஸ்தம் – சதயம் இவற்றை சேர்க்கக் கூடாது. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்றவைகளை தங்களுக்குள்ளாகவே சேர்க்கக் கூடாது.

எல்லா கோயில்களிலும் பெண்களின் முதல் வேண்டுதலே இந்த மாங்கல்ய பாக்கியம்தான். இதன் காரணமாகத்தான் சுமங்கலி பூஜைகள் செய்கின்றனர். அப்படி பலமான மாங்கல்ய பாக்கியத்தை அருளும் தலமே திருமங்கலக்குடி ஆகும். பிராணேஸ்வரர் எனும் திருநாமத்தோடு ஈசன் இத்தலத்தில் அருள்கிறார். மங்களாம்பிகை எனும் திருநாமத்தோடு அம்பாள் அருள்கிறாள். இந்த அம்பாள் சந்நதியில் திருமாங்கல்யக் கயிற்றை அம்பாளின் ஆசீர்வாத பிரசாதமாகப் பெற்றுக் கொண்டால் மாங்கல்ய பாக்கியம் கிட்டும். இந்த சந்நதியில் பெண்கள் குழுமிய வண்ணம் இருப்பர். இத்தலம் கும்பகோணத்தை அடுத்த சூரியனார் கோயிலுக்கு அருகேயே உள்ளது.

பத்துக்கு பத்து பொருத்தம் இருந்தும் பத்தாம் நாளே பிரியக்கூடிய தம்பதியர் இருக்கிறார்களே… நீதிமன்றத்தை நாடுவோர் உண்டே. அப்போது பொருத்தங்கள் எங்கே போயின. அவர்கள் பிரிவிற்கு என்ன காரணம்? நட்சத்திர பொருத்தங்களையும் தாண்டி வேறெந்த சக்தி தம்பதியரின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது?

மாற்றம் தரும் மந்திரம்
காரடையான் நோன்பு அன்று அம்பிகையின் படத்தின் முன்பு மஞ்சள் சரடை வைத்து கீழ்க்கண்ட துதியை 108 முறை சொல்லுங்கள். பிறகு மஞ்சள் சரடை கழுத்தில் கட்டிக் கொள்ளுங்கள். இந்த மகத்தான சௌபாக்கிய ஸ்லோகம் சத்யவான் சாவித்திரி சொன்னதாகும்…

“ஓங்காரபூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி
வேதமாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச பிரியவாதினி
அவைதவ்யம்ச ஸௌபாக்யம் தேஹித்வம்
மம ஸுவ்ருதே ஸௌமங்கல்யம் ச தேஹிமே’’

The post தீர்க்கசுமங்கலி ஆக்கும் திருமணப் பொருத்தம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்