×

இணைந்திருக்கும் தெய்வீக இசை

இசை என்பதற்கு என்ன பொருள்?

இசை என்பதற்கு ஏற்றுக் கொள்ளல் என்று பொருள். இசைதல் (தலையாட்டுதல்) என்று பொருள். அதனால்தான் பாடும் பொழுது நாம் தலையாட்டுகின்றோம். இசையைக் கேட்டு தலையாட்டுகின்றோம். நாம் மட்டும் தலையை ஆட்டவில்லை, எல்லா உயிர்களும் பயிர்களும் தலையை ஆட்டுவதாக நிரூபித்து இருக்கிறார்கள். நம் பிரார்த்தனைக்கு பகவான் இசைகிறான். அவனை இசைய வைக்க நாயன்மார்களும், ஆழ்வார்களும் பண்ணில் தேவாரத்தையும் திவ்ய பிரபந்தத்தையும் பாடினார்கள். இசை வழிபாடு நடத்தினார்கள். வாழ்வில் இசைதான் பிரதானம். மக்கள் இசையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என்பதை கோயில் வழிபாட்டிலும் ஏனைய திருவிழா சமயங்களிலும் இசைக்கு அவர்கள் தந்த முக்கியத்துவத்தைக் கொண்டு அறியலாம்.

கோயில்களில் காலை முதல் இரவுவரை இசைதான்

சைவ வைணவ ஆலயங்கள் எதுவாக இருந்தாலும், பிரதானமாக இசை இசைக்கப்படுகின்றது. பூஜை வேளைகளிலே இசை இல்லாமல் எந்தப் பூஜைகளும் நடப்பதில்லை. இசையைக் கேட்பதற்கு பகவான் பிரியப் படுகின்றான். காலையில் தொடங்கியது முதல் இடையில் நடைபெறும் பூஜைகள் முதற்கொண்டு நிறைவாக நடைபெறும் அர்த்த ஜாம பூஜை வரைக்கும் இசை மரபு என்பது ஆலயங்களில் உண்டு. அதற்காக ஓதுவா மூர்த்திகளையும் இசைவாணர்களையும் கோயில்களில் நியமித்து இருக்கின்றார்கள். அதோடு பல்வேறு இசைக் கருவிகளும் கோயில்களில் இருக்கின்றன. தெய்வங்கள் அனைத்தும் இசை வடிவங்களாகவே, இசை பாடும்படிவங்களாகவே அல்லது இசை கருவி ஏந்திய வடிவங்களாகவே நாம் காணலாம். புராண, இதிகாச தல வரலாறுகள் இசையோடு தொடர்புடையதாகவே தெய்வங்களைச் சித்தரிக்கின்றன. தெய்வங்கள் ஒன்று இசைக்கு இசையும். அல்லது இசையை இசைக்கும். இசைக்கு “புகழ்” என்ற பொருள் இருப்பதால் பகவானின் புகழை நாம் இசையோடு பாடுவது தானே முறையாக இருக்கும்.

புல்லாங்குழல் இசை

கண்ணன் புல்லாங்குழல் இசைக்கின்றான். வேணுகானம் என்பார்கள். அந்தக் குழல் இசையால்தான் இந்த உலகம் பரிணமித்துக்கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கிறது என்பார்கள். குழலிசையின் பெருமையைப் பற்றிய ஒரு பதிகம் பாடி இருக்கிறார் பெரியாழ்வார். அதில் ஒரு பாசுரம்.

“புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்
பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்தணையான் குழலூத
அமர லோகத்தளவும் சென்று இசைப்ப
அவி உணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர் பாடி நிறைய புகுந்து ஈண்டி
செவி உணா இன் சுவை கொண்டு மகிழ்ந்து
கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே’’

குழலிசையைச் கேட்டு தேவர்கள் அவி உணவை மறந்தார்களாம். அது மட்டுமில்லை; இசை கேட்டு நன்றாக இருக்கிறதே என்று அரங்கம் தேடி நுழைவதைப் போல, அவர்கள் பூலோகத்தில் ஆயர்பாடி, தேடி வந்தார்களாம்.

வேணுகாணமும், வீணாகானமும்

வேணுகாணமும் வீணாகானமும் உலகின் பல்வேறு வடிவங்களாகவும், உணர்வுகளாகவும், படைப்புகளாகவும் பறந்தும் விரிந்தும் இருக்கின்றன. அது பல்வேறு தோற்றங்களைத் தருகின்றது. ராகங்களை வர்ணங்கள் என்றே சொல்வார்கள். ஸ்வரங்களின் பல்வேறு வடிவங்கள்தான் ராகங்கள். ராகங்களுக்கு வண்ணம் உண்டு. பாடல்களிலும் வண்ண பாட்டு என்று ஒரு வகை உண்டு. எண்ணம், உணர்ச்சி உண்டு. குழலையும் யாழையும் போற்றியவர்கள் நாம். வள்ளுவர்,

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.

– என்பார். மழையைச் சொல்லிலே இரண்டு இசைக் கருவிகளின் இன்ப உணர்வுகள் கலந்து இருக்கின்றன என்பார். இதற்கு குழல் என்றால் அந்த இசை ஆண் குழந்தையைக் குறிப்பதாகவும், யாழ் என்பது பெண் குழந்தையின் குரலை குறிப்பதாகவும் ஒப்பிட்டு நயம் சொல்வார்கள்.

அரையர் சேவை

வைணவத்தில் ராப்பத்து – பகல்பத்து உற்சவங்களில் அரையர் சேவை என்று அரையர்களால் பெருமாள் முன்பாக அபிநயத்துடன் பாடப்பட்டு வருவதைக் காணலாம். குறிப்பாக, முத்துகுறி, அமிர்தமதனம் (பாற்கடல் கடைதல்) பாடப்படும் நாட்களில் அரையர்கள் பழங்கால பண்களுடன் தாள வகைகளைக் கையாண்டு இசைப்பார்கள். ஆழ்வார் பாசுரங்களின் பல்வேறு இசைக் கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இசைக் கருவிகள் துணையோடுதான் பாசுரங்கள் பாடப்பட்டன.

ஏராளமான இசைத்தமிழ் நூல்கள்

பழந்தமிழில் ஏராளமான இசைத்தமிழ் நூல்கள் இருந்தன. பின்னால் வந்த நூல்களுக்கு இவை முன்னோடி நூல்களாகக் கருதப்பட்டன. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தில் பல இசை இலக்கண நூல்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. சில முக்கியமான இசை நூல்கள்: அகத்தியம், இசைநுணுக்கம், இந்திரகாவியம், குணநூல், கூத்தநூல், சயந்தம், செயிற்றியம், தாள வகையொத்து, நூல், பஞ்சபாரதீயம், பஞ்ச மரபு, பஞ்ச சேனாபதியம், பரதம், பெருங்குருகு, தெருநாரை, மதிவாணர் நாடகத் தமிழ் நூல், முறுவல் என பல நூல்கள் உண்டு.

The post இணைந்திருக்கும் தெய்வீக இசை appeared first on Dinakaran.

Tags :
× RELATED துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்