×

திருமலையில் வைகுண்ட துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விழா

திருமலை: திருமலையில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று அதிகாலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சுமார் 20 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும், சக்கரத்தாழ்வாரும் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் வராக சுவாமி கோயில் முன்பு கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், இளநீர், கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர் தெப்பகுளத்தில் புனித நீராடினர். வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை 1 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக 81 ஆயிரத்து 188 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 16 ஆயிரத்து 462 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். திங்கட்கிழமை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் நேற்று எண்ணப்பட்டதில் 3.28 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இன்று துவாதசியில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்ய வைகுண்டம் காத்திருப்பு அறையில் 31 நிரம்பிய நிலையில் ஆழ்வார் ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.  எனவே தரிசனத்திற்கு 20 மணிநேரமாகும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12.30 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து நடை அடைக்க உள்ளனர். மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது.

Tags : Chakarathalvar Thirthavari Festival ,Vaikuntha Thavadi ,
× RELATED இந்த வார விசேஷங்கள்