×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோவிந்தா, கோவிந்தா’ என்று பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பரமபதவாசல் எனக்கூடிய சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத  மலையப்ப சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர்.

கோயில் ஜீயர்கள் முன்னிலையில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்ஷிதலு தலைமையில் உற்சவ மூர்த்திகளுக்கு சொர்க்க வாசலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து கவர்னர் நரசிம்மன், மத்திய, மாநில அமைச்சர்கள், தேவஸ்தான உயரதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை சொர்க்கவாசல் வழியாக தரிசனம்  செய்தனர். தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் சாதாரண பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி தரிசனத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்திருந்தனர்.

தொடர்ந்து காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். நாளை துவாதசியையொட்டி  ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையே மார்கழி மாதம் காரணமாக குளிருடன் கூடிய காற்று வீசி வருகிறது.

எனவே, சுவாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் மூத்த பக்தர்கள், கைக்குழந்தைகள் ஆகியோரின் வசதிக்காக நாராயணகிரி தோட்டம், நான்கு மாட வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் தேவஸ்தான நிர்வாகம் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய தற்காலிக நிழற்பந்தல்களை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் நள்ளிரவு 12.30 மணி  முதல் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி, பால்  ஆகியவை வழங்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதுதவிர சுகாதாரத்துறை சார்பில் மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக திருப்பதி திருமலை இடையே 24 மணி நேர வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : opening ,Parikrama ,Vaikunda Ekadasi ,Thirupathi Ezhumalayyan ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்