×

மகாராஜா – திரைவிமர்சனம்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் அவருடைய 50-வது திரைப்படம் “மகாராஜா ’’, ‘‘குரங்கு பொம்மை’’ படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். சலூன் கடையில் நீண்ட நாட்களாக வேலை செய்துவரும் மகாராஜா (விஜய் சேதுபதி). அவருக்கு ஒரு மகள் பள்ளியில் படிக்கிறார். இருவருக்கும் சொந்தமான ஒரு முக்கிய உறவாக லட்சுமி. பள்ளி விளையாட்டு போட்டிகளுக்காக கேம்பிற்கு செல்லும் மகள். அவ்வேளையில் வீட்டில் இருந்த லட்சுமி திருடு போகிறது. அதற்காக காவல் துறை உதவியை நாடுகிறார் மகாராஜா. லட்சுமி கிடைத்ததா? இல்லையா? பின்னணி என்ன என்பது மீதிக் கதை.

படத்தின் முதல் வரிக் கதைத் தவிர எதுவுமே வெளியே சொல்ல முடியாத, அதே சமயம் யாரிடமும் கதைப் பற்றிக் கேட்காமல் பார்க்க வேண்டிய படம். ஏனேனில் படம் துவங்கி சில நிமிடங்களிலேயே லட்சுமி யார்? என்பது தெரிந்துவிடும். அதன்பிறகு படம் எதை நொக்கி செல்கிறது, பின்னணி என்ன, ஏன் லட்சுமிக்காக போராடுகிறார் விஜய் சேதுபதி என்பதற்கு அதிர்ச்சியான திரைக்கதையும், திருப்பங்களும் ஆச்சர்யங்களை உண்டாக்குகின்றன. 50வது படமாக ஒரு முன்னணி நடிகர் இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்ததற்கே முதலில் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள். நடுத்தர வயது, படம் முழுக்க அவமானங்கள், அடி உதை, இதில் காதில் கட்டுடன், நரை முடி சகிதமாக ஒரு பதின் பருவ மகளுக்கு அப்பா இப்படி எல்லாம் சொன்னாலே மற்ற நடிகர்கள் ஒப்புக்கொள்வார்களா தெரியவில்லை. ஆனால் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார். நடிப்பில் அசத்துகிறார். மகளிடம் அடங்கி நிற்பது, காவல் நிலையத்தில் எகிறி நிற்பது என படம் முழுக்க விஜய் சேதுபதி நடிப்பில் அவ்வளவு கோணங்கள். பாரதிராஜா, அனுராக் கஷ்யப், அபிராமி, நட்டி , சிங்கம் புலி, ‘பாய்ஸ்‘ மணிகண்டன், மம்தா மோகன் தாஸ், குழந்தை அக்ஷனா என ஒவ்வொருவருமே சோடை சொல்ல முடியாத அளவுக்கு மேலும் இதற்கு முன்பு பார்த்த படங்களில் இல்லாத அளவிற்கு வித்யாச கதாபாத்திரங்கள்.
பெரும்பாலும் நான்லினியர் படம் என்றாலே 50-50 வாய்ப்புதான்.

காரணம் கொஞ்சம் சொதப்பினாலும் கதை புரியாமல் தொங்கிவிடும். அல்லது மொத்தமும் குழம்பிவிடும். புதிய கதை இல்லை ஆனால் தெளிவான திரைக்கதையில் நான்லீனியர் இப்படிக் கொடுக்க வேண்டும் என வகுப்பெடுக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். அவருக்கு பக்க பலமாக ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், எவ்விடத்திலும் எந்த சந்தேகமும் வர இயலாமல் காட்சிகளில் டோன் கொடுத்திருப்பது அருமை. இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை திரைக்கதைக்கு மிகப்பெரும் சப்போர்ட்டாக நிற்கிறது. படத்தின் இன்னொரு இயக்குநர் என்றே எடிட்டர் பிலோமினைச் சொல்லலாம். இந்தப் படம் முழுக்கவே எடிட்டர் டேபிளில் தான் உயிர் பெற்றிருக்கும் என்றாலும் பொருந்தும். மொத்ததில் ஒரு பெரிய நடிகர் தனது மைல்கல் எண்களில் படங்கள் தேர்வு செய்வதற்கும், தெளிவான நான்லீனியர் படம் கொடுப்பது எப்படி என்பதற்கும் மிகப்பெரும் உதாரணமாக மாறியிருக்கிறது ‘மகாராஜா‘ திரைப்படம்.

The post மகாராஜா – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nitilan Saminathan ,Vijay Sethupathi ,Sudhan Sundaram ,Jagadish Palaniswami ,Ajaneesh Loknath ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இனிமே என் படம் ஓடாதுனு சொன்னாங்க - Vijay Sethupathi Emotional Speech at Maharaja Success Meet