×

நினைக்க முக்தித்தரும் அக்னி திருநகரில் அண்ணாமலை மீது மகாதீப தரிசனம்

திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, தில்லையம்பலத்தான் அருள்தரும் சிதம்பரத்தை தரிசிக்க முக்தி. ஆனால், இருக்கும் இடத்தில் இருந்தபடி ஒருநொடி பொழுதேனும் உள்ளத்தில் நினைக்க முக்திதரும் திருத்தலம் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் அருள்பாலிக்கும் திருவண்ணாமலை. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என பக்தர்கள் மெய்யுருகி தரிசிக்கும் தென்னகத்து கைலாயம். அடிமுடி காணாத ஜோதி பிழம்பாக, அக்னி திருவடிவில் அண்ணாமலையார் எழுந்தருளிய அருள்நகரம். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூத தலங்களில், அக்னிக்கு உரிய தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக அருள்தரும் திருவண்ணாமலையில், உமையாளுக்கு இடபாகம் அருளி, அர்த்தநாரீஸ்வரராக அண்ணாமலையார் அருள்பாலித்த ஆன்மீக பூமி.

காக்கும் கடவுளுக்கும் (திருமால்), படைக்கும் கடவுளுக்கும்( பிரம்மா) இடையே, தங்களுக்குள் யார் பெரியவர் எனும் அகந்தை எழுந்தபோது, அடி முடி காணாத ஜோதிப் பிழம்பாக ஆதி சிவம் எழுந்தருளிய திருநகரம். அவ்வாறாக, சிவபெருமான் விண்ணுக்கும், மண்ணுக்கும் விஸ்வரூபம் கொண்ட திருநாளே நாம் கொண்டாடும் கார்த்திகை தீபத்திருநாள். அக்னி வடிவாக எழுந்தருளிய அருளாளன், சாந்தவடிவானதன் திருப்பயனே நாம் தரிசிக்கும் தீபமலை. அருணை திருநகரில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக மகாதீப திருவடிவில் தரிசனமாகும் திருநாள் இன்று. அருள்வடிவான சிவபெருமான், அண்ணாமலை மீது ஜோதிப்பிழம்பாய் தரிசனமாகும் காட்சியை தரிசிப்பது பிறவியெனும் பெருங்கடலை நீந்திக்கடக்க உதவும். பஞ்ச பூதங்களையும், தம் அருட்கரத்தால் ஆட்டுவிக்கும் முக்கண்ணன், அக்னி வடிவாக மகா தீப திருநாளில் அருள்தருகிறார்.

‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன், பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ’ என திருஞானசம்பந்த பெருமானால் பதிகம் பாடப்பெற்ற திருவண்ணாமலை திருத்தலம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. மலர் அலங்காரம், மின்னொளி அலங்காரத்தில் கோயில் பிரகாரங்கள் பிரகாசிக்கிறது. உமையாளுக்கு இடபாகம் அருளிய ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருக்கோலத்தில், இன்று மாலை திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் அண்ணாமலையாரை தரிசிக்கவும், மலை மீது எழுந்தருளும் மகா தீபத்தை தரிசிக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். அடிமுடி காணாத ஈசன் திருவடியை தரிசிக்க பக்தர்கள் பக்திப்பெருக்குடன் காத்துள்ளனர். ஜோதி வடிவாக எழுந்தருளிய திருக்காட்சியை தரிசிக்கும் மகாதீப திருநாளுக்காக திருவண்ணாமலை நகரம் பூவுலகின் கைலாயம் போல காட்சியளிக்கிறது.

கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் ரத்தின மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் காட்சிதரும் அண்ணாமலை உச்சியில் இன்று மாலை ஏற்றப்படும் மகாதீபத்தை, ஞானிகளும், ேயாகிகளும், சித்தர்களும், மகான்களும் தரிசிப்பது வியப்பிலும் வியப்பு. கார்த்திகை மாத பவுர்ணமி நாளில், சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும் போது கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவருணை திருநகரில், இறைவனே கிரிவுருவாக காட்சிதரும் மலை உச்சியில், இன்று மாலை 6 மணிக்கு மகாதீப வடிவாக இறைவன் அருள்பாலிக்கும் தரிசனம் காண, பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது தீபநகரம். ஓம்நமசிவாயம் எனும் திருமந்திரத்தை உச்சரித்து, மலைமீது மகா தீபத்தை தரிசிப்பது பிறவியெனும் பெருங்கடலை கடப்பதற்கான வழியாகும்.

Tags : darshan ,Mahatipha ,Annamalai ,Agni Tirunagar ,
× RELATED கோடை விடுமுறையில் அலைமோதும் கூட்டம்...