×

குற்றப்பின்னணி விமர்சனம்

தண்ணீர் கேன்கள் விற்பது, பால் விற்பது என்று எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வரும் சூசை என்கிற ‘ராட்சசன்’ சரவணன், ஒரு மகனுக்கு தாயான இளம் பெண்ணை திடீரென்று கழுத்தை நெரித்துக் கொல்கிறார். பிறகு அநியாய வட்டி வசூலிக்கும் பைனான்ஸ் நிறுவனரை சம்மட்டியால் தாக்கிக் கொல்கிறார். இதையடுத்து ஒரு சிறுமியின் தாயையும், தந்தையையும் மூச்சு திணறடித்து சாகடிக்கிறார்.

இப்படி வரிசையாக கொலைகள் செய்து, போலீசாரின் பிடியிலிருந்து தப்பித்துச் செல்லும் ‘ராட்சசன்’ சரவணன், ஒருகட்டத்தில் போலீசாரிடம் வசமாகச் சிக்குகிறார். எனினும், பதற்றமின்றி காவல் நிலையத்துக்கு வருகிறார். ‘நான் திரும்பி வருவேன். ஆனா, திருந்தி வரமாட்டேன்’ என்று சொல்கிறார். அப்படி என்ன அவருக்கு சில பெண்கள் மீதும், தவறான செயல்களில் ஈடுபடும் சில ஆண்கள் மீதும் வெறுப்பு? இதற்கு அவரது பிளாஷ்பேக் விடை சொல்கிறது. அது என்ன என்பது மீதி கதை.

சில படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துவிட்டு, பிறகு ‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சரவணன். இப்போது அவர் ’குற்றப்பின்னணி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். படம் முழுக்க யதார்த்தமாகவும், இயல்பாகவும் நடித்துள்ள அவரது பாடிலாங்குவேஜூம், டயலாக் டெலிவரியும் அடிக்கடி விஜய் ஆண்டனியை ஞாபகப்படுத்துகிறது. அவரது மனைவியாக தீபாலி, பைனான்ஸ் நிறுவனர் சிவா மற்றும் தாட்சாயிணி, ஹனீபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர்.

நாட்டில் நாள்தோறும் நடந்து வரும் பெண்கள் சார்ந்த குற்றங்களை கதைக்களமாகக் கொண்டு, குடும்பத்திலுள்ள சில பெண்களின் கலாசாரம் மீறிய நடவடிக்கைகளால் அக்குடும்பமும், அதைச்சார்ந்த தனி மனிதனும் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சமூக அக்கறையுடன் இயக்குனர் என்.பி.இஸ்மாயில் சொல்லியிருக்கிறார். சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவும், ஜித் இசையும், ரா.ராமமூர்த்தியின் வசனமும் படத்துக்கு பலம். நாடகத்தனமாக நகரும் சில காட்சிகளால், சஸ்பென்ஸ் திரில்லர் படத்துக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய பரபரப்பு மிஸ்சிங்.

The post குற்றப்பின்னணி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Saravanan ,Susai ,Sammati ,Kollywood Images ,
× RELATED மகளிர் காவல் நிலையம் முன் இளம்பெண் தர்ணா