×

புத்திர பாக்கியத்துடன் வளமும் நலமும் அருளும் சோமேஸ்வரர்

தர்மபுரியில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இருக்கிறது புட்டிரெட்டிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருக்கிறது நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சோமேஸ்வரர் கோயில். கிழக்கு திசை நோக்கியுள்ள இந்த கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகா மண்டபம்,  ஆகியவற்றை கொண்டதாகும். கோயில் மகாமண்டபத்தில் தெற்கே விநாயகரும், வடக்கே முருகனும் உள்ளனர். பரிவார தெய்வங்களாக விநாயகர், காலபைரவர், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. அம்பிகை ஆலயம் சோமசுந்தரி என்ற பெயரில் தனியே சிவனின் இடதுபுறத்தில் உள்ளது.

இக்கோயில் புட்டிரெட்டிப்பட்டிக்கு அருகில் உள்ள தாழைநத்தத்தில் விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் இக்கோயில் பராமரிப்பின்றி சிதைந்த நிலையில் இருந்ததாகவும், இதனால் இக்கோயிலை அப்படியே பெயர்த்தெடுத்து, தாழைநத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புட்டிரெட்டிப்பட்டியில் அதே அமைப்பில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் கோயிலில் விஜயநகர மன்னனான இம்மிடி நரசிம்மன் காலத்தியக் கல்வெட்டு உள்ளது.

முன்பொரு காலத்தில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. இதில் மனம் வருந்திய பிரம்மன், பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத் தொழிலை எங்கிருந்து செய்வதென்று சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், ‘‘நீ இப்போதே புண்ணிய தலங்களில் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு கலந்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை ஊற்றி வை. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயை வைத்து மாவிலையால் அலங்கரித்து கும்பமாக்கி வை, அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்து விடாதபடி ஒரு உறியின் மீது வை’’ என்று கூறினார்.

மேலும் அந்த குடத்திற்கு வில்வத்தால் தினமும் அர்ச்சனை செய்ய வேண்டும். கும்பம் பிரளய வெள்ளத்தில் எந்தெந்த திசையில் எல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் நான் வருவேன் என்றும் உறுதி அளித்துள்ளார். அப்படி பிரளய காலத்தில் பெருவெள்ளம் வந்தது. அப்போது வெள்ளத்தில் கும்பம் மிதந்து வந்தது.  அதற்கு ஆதாரமாக இருந்த உறி சிதறியது. உறி சிதறி விழுந்த இடங்களில் எல்லாம் சுயம்புவாக லிங்கம் உருவானது. இப்படி உருவான லிங்கத்தை சந்திரன் வழிபட்டார். இதனால் சிவன், சோமேஸ்வரர் என்று அழைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் கோயில்கள் கட்டப்பட்டன. இப்படி தாழைநத்தத்தில் உருவானது தான் சோமேஸ்வரர் கோயில்’’ என்பது தலவரலாறு.

தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயிலில் பிரதோஷம், சிவராத்திரி என்று அனைத்து விழாக்களும் களைக்கட்டும். அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைப்பார் சோமேஸ்வரர். ஈசனுக்கு அருகில் அருள்பாலிக்கும் அன்னை சோமசுந்தரி, மங்களம் அருள்வாள் என்பது ஐதீகம். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலில் சிவலிங்கத்துக்கு அருகில் ஒரு பெரிய பாம்புப் புற்று உள்ளது. இந்த புற்றில் பால் வார்த்து நாகபூஜை செய்தால், நாக தோஷங்களோடு, அனைத்து தோஷங்களும் நீங்கும். புத்திரபாக்கியம் தந்து வளமும், நலமும் அருளும் சோமேஸ்வரர், எளி யவர்களையும் வாழ்வில் உயர வைப்பார் என்பது ஆண்டாண்டு காலமாய் வழிபடும் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கை.

Tags : Someswarar ,
× RELATED சொக்க வைக்கும் சோமேஸ்வரர் ஆலயம்