×

வெளிநாட்டினர் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வரவேண்டும்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு

சென்னை: வெளிநாட்டினர் தங்கள் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வர வேண்டும் என கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு விடுத்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா அரங்கில் நேற்று நடந்த வட்ட மேஜை மாநாட்டில் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு பில்லியனுக்கும் அதிகமான திரைப்பட பார்வையாளர்களின் சந்தையாக இந்தியா திகழ்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து திரைத்துறையினரின் நலனுக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அரசு ஊக்குவிப்புகளை அளித்துள்ளது. திரைப்பட தயாரிப்பு துறையில் இருந்து திறமையான இந்திய ஸ்டார்ட்அப்களை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் எண்ணற்ற இந்திய திரைப்படத்துறையினர் பங்கேற்க ஒன்றிய அரசு வழிவகை செய்துள்ளது. வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பாளர்களை இணைத்து திரைப்படங்கள் தயாரிப்பதற்கு அரசால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வெளிநாட்டுப் படங்களின் படப்பிடிப்புக்கு ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது. கதை சொல்லும் பாரம்பரியம் மற்றும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் பாரம்பரியத்துடன், இந்தியா இப்போது மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்படத் தணிக்கை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான அலுவலகத்தை விரிவுபடுத்தி, ஒற்றைச் சாளரத்தின் கீழ் பல்வேறு அனுமதிகளை பெறுவதற்கான நடைமுறையை தடையின்றி செயல்படுத்துகின்றன. இன்றையச் சூழலில் பார்வையாளர்களுக்கு மொழி ஒரு தடையாக இல்லை. இந்தியாவில் இருந்து வரும் பிராந்திய திரைப்படங்கள் இப்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் இந்தியாவில் படமெடுக்க வர வேண்டும். இந்தியாவில் நடைபெறும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த திரைப்படத்துறையினர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்….

The post வெளிநாட்டினர் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வரவேண்டும்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Union Minister ,L. Murugan ,Cannes Film Festival ,Chennai ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...