×

ஆஸி. முன்னாள் நட்சத்திரம் சைமண்ட்ஸ் விபத்தில் பலி

குயின்ஸ்லேண்ட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் நட்சத்திரம் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46 வயது), கார் விபத்தில் பலியானார். இது குறித்து குயின்ஸ்லேண்ட் போலீசார் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘சைமண்ட்ஸ் ஓட்டிச் சென்ற கார் சாலையில் இருந்து விலகி உருண்டதில் அவர் படுகாயம் அடைந்தார். மீட்புக் குழுவினர் அவசர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளனர். மனைவி லாரா கூறுகையில், ‘இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எங்களின் இரண்டு குழந்தைகள் பற்றி மட்டுமே இப்போது நினைக்கிறேன்’ என்றார்.கார் விபத்தில் சிக்கி சைமண்ட்ஸ் பலியானது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த ஆல் ரவுண்டரான சைமண்ட்ஸ் இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். கவுன்டி கிரிக்கெட்டில் குளோசெஸ்டர், கென்ட், லங்காஷயர், சர்ரே அணிகளுக்காக விளையாடி உள்ளார். 1998ல் ஆஸி. அணிக்காக அறிமுகமாகி 26 டெஸ்ட், 198 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2 முறை உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றதுடன், 2006-07ல் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வெற்றியிலும் பங்களித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். சைமண்ட்சின் மறைவுக்கு சச்சின், ஹர்பஜன், வி.வி.எஸ்.லக்‌ஷ்மண், கில்கிறிஸ்ட் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் ஷேன் வார்ன், ராட்னி மார்ஷ், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் என 3 கிரிக்கெட் பிரபலங்கள் அடுத்தடுத்து இறந்தது, ஆஸி. ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. …

The post ஆஸி. முன்னாள் நட்சத்திரம் சைமண்ட்ஸ் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Symonds ,Queensland ,Andrew Symonds ,Dinakaran ,
× RELATED உலக அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில்...