×

நயன்தாரா படத்துக்கு தடை வெற்றிமாறன் ஆவேசம்

 

சென்னை: நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ படம், சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆனதை அடுத்து வட இந்தியாவில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ஜெய், நயன்தாராவிடம், ‘ராமர் கூட அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்’ என்று பேசுவது போல இருக்கும். மேலும் அர்ச்சகரின் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த காட்சிகளைக் குறிப்பிட்டு இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா பிரமுகர் ரமேஷ் சோலான்கி என்பவர் மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டுடியோஸ் வருத்தம் தெரிவித்து சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கவுள்ளதாகவும் அதுவரை படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவித்தது. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை இப்படி மிரட்டி ஓடிடி தளத்தில் இருந்து நீக்குவதை பலரும் கண்டித்து வந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்தியாவில் சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இல்லை. இது ஓடிடிகளுக்கும் பொருந்தும். தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து ஓடிடியில் இருந்தே நீக்கவைப்பது திரைத்துறைக்கே நல்லதல்ல. ஒரு படத்தை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் சென்சார் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகளே தணிக்கைக் குழுவின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும்’ என்றார்.

 

The post நயன்தாரா படத்துக்கு தடை வெற்றிமாறன் ஆவேசம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Vetimaaran Avesam ,CHENNAI ,North India ,Netflix ,Jai ,Ramar ,Kollywood Images ,
× RELATED 6 சொகுசு கார்களை வைத்திருக்கும் சமந்தா