×

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நவராத்திரி விழா : பிரம்மச்சாரினி அலங்காரத்தில் ஞானபிரசூனாம்பிகை

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நவராத்திரி விழாவின் 2வது நாளில் பிரம்மச்சாரினி அலங்காரத்தில் ஞானபிரசூனாம்பிகை தாயார் அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூதங்களில் வாயு ஸ்தலமாகவும், ராகு, கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்யும் தலமாகவும் விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு விமரிசையாக நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான நவராத்திரி விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. நவராத்திரி விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கிறது.

மேலும், கோயில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான நேற்று ஞானபிரசூனாம்பிகை தாயார் பிரம்மச்சாரினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஞானபிரசூனாம்பிகை தாயாரின் மூலவர் சன்னதி எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொம்மை கொலு  பக்தர்களைக் கவரும் வகையில் இருந்தது. இதேபோல், கோயிலில் மணிகண்டீஸ்வரர் சுவாமி சன்னதி அருகில் நவராத்திரி விழாவை யொட்டி தினந்தோறும் ஆன்மிக கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவன் கோயிலின் துணை கோயிலான கனகாச்சல மலை மீதுள்ள கனக துர்க்கை அம்மன் கோயிலில் நேற்று மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. சிவன் கோயில் துணை கோயிலான பிரசன்ன வரதராஜ சுவாமி கோயிலிலும் கூர்ம அவதாரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் முத்தியாலம்மன் கோயிலிலும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீகாளஹஸ்தி கொத்த பேட்டையில் உள்ள அம்மன் பாலாதிரிபுரசுந்தரியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஓம்சக்தி கோயிலிலும் நவராத்திரி விழாவையொட்டி யாக பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் சீதலாம்பா சன்னதியிலும், சந்தை மைதானத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags : Navarathri Festival ,Srikalahasti Shiva Temple ,Brahmacharyini ,
× RELATED ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம்