வாழ்க்கைக் கல்வி அவசியம்!

எனக்கு மூன்று பெண் குழந்தைகள். என் கணவர் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து 20 வருடங்களுக்கு முன் என்னைத் திருமணம் செய்தார். குழந்தைகளின் படிப்பிற்காக அவரை விட்டு விலகி சொந்த ஊரில் குடியேறினேன். கடந்த ஏழு வருடமாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். சட்டப்பூர்வமாக அவரை விட்டு விலக முயற்சித்தால் அவர் மறுத்து என்னுடன் வாழ விரும்புவதாகக் கூறுகிறார். என் ஜாதகத்தைக் கொண்டு எனக்கு நல்வழி காட்டுங்கள். சரவணகுமாரி, பொள்ளாச்சி.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது 06.11.2018 வரை சுக்கிரதசையில் சனிபுக்தி நடக்கிறது. அதற்குள்ளாக உங்கள் பிரச்னைக்கு ஒருவழி பிறந்து விடும். கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் லக்னாதிபதி குருவுடன் சனியும் இணைந்து அமர்ந்திருப்பதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆழ்மனதில் அவரை மிகவும் விரும்பும் உங்களால் அவர் செய்திருக்கும் துரோகத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அமாவாசை நாளில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகபலத்தின்படி இது உங்களுடைய விதிப்பயனே என்பது தெரிகிறது. நீங்கள் அவரை அருகில் சேர்த்துக் கொள்ளவும் வேண்டாம், மொத்தமாக விலகிவிடவும் வேண்டாம். அவர் இருக்கும் இடத்தில் இருந்து கொள்ளட்டும். உங்கள் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வினில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். அவர்களுக்கு தந்தையாக அவர் செய்ய வேண்டிய கடமையை மட்டும் செய்யட்டும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். மனம் தெளிவடையக் காண்பீர்கள்.

என் மகள் வயிற்றுப் பேத்தி 11ம் வகுப்பு படிக்கிறார். அவளுக்கும், அவள் தந்தையாருக்கும் ஒரு சில மனஸ்தாபத்தால் என் வீட்டில் இருந்து படித்து வருகிறாள். அவளது மனக்குழப்பங்கள் நீங்கி அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஒரு தீர்வு தாருங்கள். வடிவேல், பெருந்துறை.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகத்தின்படி தற்போது சந்திரதசையில் செவ்வாய்புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகபலத்தின்படி உங்கள் மருமகன் மீது பெரிய அளவிலான தவறுகள் இருப்பது போல் தெரியவில்லை. மனோகாரகன் சந்திரனின் தசை உங்கள் பேத்திக்கு நடந்து வருகிறது. சந்திரன் ஆசையைத் தூண்டும் ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள சுக்கிரனின் சாரம் பெற்று ஏழில் அமர்ந்துள்ளதால் கடுமையான மன சஞ்சலத்தில் உள்ளார் என்பது தெளிவாகிறது. அவரைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டுங்கெட்டான் வயதில் உள்ள உங்கள் பேத்தி 15.08.2020 வரை மனத் தெளிவற்ற சூழலில் இருப்பார்.

அதுவரை அவர் உங்கள் குடும்பத்துடன் இருப்பதே நல்லது. வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களைப் பற்றி தாத்தாவாகிய நீங்கள் அவருடன் அவ்வப்போது பேசி வாருங்கள். தற்போதைய சூழலில் வகுப்புக் கல்வியை விட வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டியதே மிகவும் அவசியம். தன்னுடைய வயதிற்கு எது தேவை என்பதை அவர் புரிந்து கொண்டால் தந்தையாரோடு சென்று இணைந்து விடுவார். உங்கள் பேத்தியை செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதையும், காக்க காக்க கனகவேல் காக்க.. என்ற வரிகளை மனக்குழப்பத்தின் போது உச்சரிப்பதையும் வழக்கத்தில் கொள்ளச் சொல்லுங்கள். உத்யோகமும், எதிர்காலமும் அவருக்கு சிறப்பாக அமையும்.

எங்களுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. பல கோயில்களுக்கும், மருத்துவர்களிடமும் சென்றும் பயனில்லை. எங்களுக்கு பிள்ளைச் செல்வம் எப்போது கிடைக்கும்? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பத்மப்ரியா, சென்னை.

தாமதமான திருமணம் குழந்தை பாக்கியத்தை தாமதமாக்கி வருகிறது. திருமணத்தின்போது உங்கள் இருவருக்கும் முறையே 33 மற்றும் 35 வயது நடந்திருக்கிறது. இன்னும் ஐந்து வயது தற்போது கூடியிருக்கிறது. உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகுதசையில் சந்திரபுக்தி நடந்து வருகிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் குருபுக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி குரு புத்ர ஸ்தானமாகிய ஐந்தில் உச்சம் பெற்றிருப்பதால் தற்போது சாதகமான நேரமே நடந்து கொண்டிருக்கிறது.

உங்களுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் இரண்டாம் வீட்டில் சந்திரன், குரு, ராகு ஆகிய கிரஹங்களுடன் இணைந்துள்ளார். செவ்வாய் தோஷம் என்பது இல்லையென்றாலும், இந்தவொரு அமைப்பு பிள்ளைப்பேற்றினைத் தாமதமாக்கி வருகிறது என்றாலும் வருகின்ற 01.03.2019 முதல் நல்லநேரம் துவங்குவதால் அந்த நேரத்தில் குழந்தைச் செல்வம் கிடைத்துவிடும். செவ்வாய்க்கிழமைதோறும் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு தம்பதியராகச் சென்று வழிபட்டு வாருங்கள். தினமும் கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி குமரக்கடவுளை வழிபட்டு வருவதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கக் காண்பீர்கள். குமரனின் அருளால் குலம் விருத்தி அடையும்.

“ஜநித்ரீபிதாச ஸ்வபுத்ர அபராதம் ஸஹேதே ந கிம் தேவஸேநாதிநாத அஹம்சாதிபாலோ பவான் லோகதாத: க்ஷமஸ்வ அபராதம் ஸமஸ்தம்மஹேச.”

என் மகன் பொறியியல் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுவிட்டான். ஆனால், அதைச் சார்ந்த பணியில் சேராமல் டி.என்.பிஎஸ்.சி. தேர்வு எழுத இரவு பகல் கண்விழித்து அதிக முனைப்போடு படித்து வருகிறான். நடுவில் ஒருமுறை தேர்வில் தோல்வி ஏற்பட்டது. உடல்நலமும் சரியில்லை. அவனுக்கு அரசு உத்யோகம் கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? செல்வம், பட்டுக்கோட்டை.

அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதோடு அலைச்சலைத் தரக்கூடிய 12ம் வீட்டில் கேதுவுடன் இணைந்து அமர்ந்துள்ளார். இதனால் அவருடைய முயற்சியில் வெற்றி கிடைப்பது என்பது தாமதப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணிகளுக்கு மட்டும் முயற்சிக்காமல் மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கான தேர்வுகளையும் எழுதி வரச் சொல்லுங்கள். அவருக்கான உத்யோகம் தமிழ்நாட்டில் அமையாது. வடமேற்கு திசையில் உள்ள மாநிலங்களில் வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்டத்தை நம்பாமல் தன்மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து முயற்சித்து வரச் சொல்லுங்கள். விடாமுயற்சி ஒன்றே அவருடைய கனவினை நனவாக்கும். அவருடைய முயற்சிக்கு பக்கபலமாக துணை நில்லுங்கள். 01.07.2020க்குள் உத்யோகம் கிடைத்துவிடும். உடல்நிலையைப் பொறுத்தவரை வயிறு சார்ந்த உபாதைகளும், உஷ்ண உபாதையும் இருந்து வரும். உஷ்ணத்தைத் தணிக்கும் விதமான உணவு வகைகளை உட்கொள்வது ஆரோக்யத்திற்கு நல்லது. சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதாலும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி தினமும் அனுமனை வணங்கி வருவதாலும் உயர்ந்த உத்யோகம் கிடைத்துவிடும்.

“அஸாத்ய ஸாதகஸ்வாமின் அஸாத்யம் தவகிம்வத
ராமதூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ.”


நாற்பத்தோரு வயதாகும் எனக்கு பெற்றோர் இறந்து விட்டனர். இன்னும் திருமணமாகவில்லை. தனியாக வசிக்கிறேன். டிகிரி முடித்து விவசாயம் பார்த்து வரும் எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? அரசியலில் ஈடுபடலாமா? உரிய வழி காட்டுங்கள். தீனதயாளன், பேரையூர்.

பத்தாம் வீட்டில் சூரியன், செவ்வாயின் இணைவினைப் பெற்றிருக்கும் நீங்கள் தயக்கம் ஏதுமின்றி அரசியலில் ஈடுபடலாம். விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன்தசையில் சனிபுக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு பகவான் ஆறில் அமர்ந்திருப்பதால் சுகமாக அமர்ந்திருக்காமல் நியாயத்திற்காகப் போராடுவதில் நாட்டம் கொண்டிருப்பீர்கள். நேர்மையான அரசியல்வாதியாக உருவெடுக்கும் தகுதி உங்களுக்கு உண்டு. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஒன்பதில் அமர்ந்திருக்கிறார். தகப்பனார் வழி உறவுமுறையில் அவரது பூர்வீகம் சார்ந்த ஊரினில் உங்களுக்கான பெண் காத்திருக்கிறார்.

தற்போதைய நேரம் சாதகமாக உள்ளதால் முதலில் திருமணம் செய்து கொள்வதில் முனைப்பாக செயல் படுங்கள். அரசியல் ஈடுபாட்டினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி வாருங்கள். 52வது வயது முதல் முழுநேர அரசியல்வாதியாகவும் அரசியல் சார்ந்த பதவியினை அலங்கரிப்பவராகவும் உயர்வு பெறுவீர்கள். வாழ்நாள் முழுவதும் விவசாயம் செய்வதையும் உங்களுடைய லட்சியமாக வைத்துக் கொள்ளுங்கள். புதன்கிழமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும் ரங்கமன்னாரையும் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வருகின்ற மார்ச் மாதத்திற்குள் உங்கள் திருமணம் நடந்துவிடும். தனிமை என்பது காணாமல் போய் எப்பொழுதும் உங்களைச் சுற்றி ஆட்கள் நிறைந்திருக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பெற்றோரை இழந்த எனக்கு சகோதரர்களால் உதவி இல்லை. உரிய வழி காட்டுங்கள். காதல் திருமணம் செய்த என் மனைவி ஆண் குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள். பெண் குழந்தையை வைத்துக்கொண்டு யாருடைய ஆதரவும் இன்றி தனிமரமாக தவிக்கிறேன். ஜாதியை காரணமாக வைத்து அவளுடைய பெற்றோர் என்னிடமிருந்து பிரித்து வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழ பரிகாரம் சொல்லுங்கள். பாக்கியராஜ், திட்டக்குடி.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிரதசையில் சந்திரபுக்தி நடந்து வருகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகத்தின்படி தற்போது சூரியதசையில் குருபுக்தி நடந்து வருகிறது. நீங்கள் அனுபவித்து  வரும் சிரமங்களுக்கு அடுத்தவர்களை குறை சொல்லி என்ன பயன்? நிரந்தரமாக உத்யோகம் இல்லாத சூழலில் ஒரு பெண் என்ன செய்வார்? சொந்த வீடும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

வேலை இல்லை, சம்பாத்தியமும் இல்லை என்று எதையும் இல்லை, இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்க்கை எவ்வாறு செல்லும்? முதலில் நிரந்தரமாக ஒரு பணியைத் தேடுங்கள். சுயதொழிலும் கைகொடுக்கும். ஆன்மிகம் சார்ந்த பணியாக அமையும். உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் இருக்கும் ராகு அவர் மனதைக் குழப்பியிருக்கிறார். திங்கட்கிழமைதோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வழிபட்டு வாருங்கள். தினமும் கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவதும் நல்லது. 08.01.2019ற்குள் உங்கள் மனைவி உங்களுடன் வந்து சேர்வதற்கான சந்தர்ப்பத்தைக் காண்பீர்கள்.

“க்ருபாஸமுத்ரம் ஸூமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதிவாமபாகம்
ஸதாசிவம் ருத்ரம் அனந்த மூர்த்திம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி”.


நிறைய சோதனைகள் கஷ்டங்களுக்குப் பிறகு நானும் என் கணவரும் இப்பொழுது சேர்ந்து வாழ்கிறோம். ஆனால் இருவருக்கும் ஒழுங்கான வேலை இல்லை. என் கணவர் என்னை விட்டுப் பிரியாமல் இருக்கவும், எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவும் நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  பிரவீணா, கன்னியாகுமரி.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிரதசையில் சுக்கிரபுக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சுக்கிரதசையில் புதன்புக்தி நடந்து வருகின்றது. உங்களுடைய ஜாதகபலத்தின்படி நீங்கள் மொத்த கவனத்தையும் உத்யோகத்தின் மீது செலுத்த வேண்டிய நேரம் இது. கணவரைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் உத்யோகத்தின் மீது அதிக அக்கறை செலுத்துங்கள். 01.01.2019 முதல் நிரந்தர சம்பாத்தியத்திற்கான யோகம் துவங்குகிறது. அலைச்சல் உத்யோகமாக அமைந்தாலும் வருமானம் சிறப்பாக அமையும்.

கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் அவர் உங்களை விட்டுப் பிரியமாட்டார். அவருடைய ஜாதகத்தின்படி மனைவியை விட்டுப் பிரிந்தால் அவருக்குத்தான் நஷ்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. மனைவியால்தான் தனது வாழ்வு சிறக்கும் என்ற உண்மை இன்னும் சிறிது காலத்தில் அவருக்குப் புரிந்துவிடும். அவராக மனம் தெளியும் வரை காத்திருங்கள். கட்டாயப்படுத்தினால் உங்கள் கணவரைக் கட்டுப்படுத்துவது கடினம். உங்கள் குழந்தைகளின் ஜாதகம் மிகச்சிறப்பாக உள்ளது. நிச்சயமாக அவர்கள் இருவருக்கும் வலிமையான எதிர்காலத்தை உருவாக்கித் தருவீர்கள். வெள்ளிக்கிழமை தோறும் காலை நேரத்தில் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள துதியைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். நலமுண்டாகும்.

“தாரித்ர்ய சைல தம்போளி: க்ஷூத்ர பங்கஜ சந்த்ரிகா
ரோகாந்தகார சண்டாம்சு: பாபத்ரும குடாரிகா.”

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

× RELATED மேஷ ராசிப் பெண் - காவல் தெய்வம் காதல் தேவதை