- அஇஅதிமுக
- பாஜக
- தமிழ்நாடு அரசு
- கர்நாடக
- காவிரி
- நீர்வளத்துறை அமைச்சர்
- Duraimurugan
- தமிழ்நாடு சட்டமன்றம்
- மேகதாட்டு
கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரைவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தனி தீர்மானத்தின் மீது அரசியல் கட்சி தலைவர்கள் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): காவிரி தொடர்பான பிரச்னையில் அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இதனால் 20 மாவட்ட மக்களின் குடிநீர் பாசனமும் பாதிக்கப்படும். அந்த பகுதி மக்களுக்கு குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும். அதிமுக ஆட்சியின் போது இந்த பிரச்னை குறித்து 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகா அரசு தன்னிச்சையாக நிதி ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தகக்கது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த தனி தீர்மானத்தை அதிமுக ஒருமனதாக ஆதரிக்கிறோம்.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): காவிரி பிரச்னைக்காக முதல்வர் யாரிடமும் சென்று கெஞ்சப்போவதில்லை. இந்த பிரச்னையை கண்டு அஞ்சப்போவதும் இல்லை. நமது முதல்வர் வெற்றி பெறுவார். தமிழக அரசின் தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்.ஜி.கே.மணி (பாமக): 2023ம் ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்குள் அணை கட்ட வேண்டும் என்று அந்த அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக ₹1000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக தமிழக குழுவினர் டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த போது, கர்நாடகா மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். ஆனால் இதே ஒன்றிய அமைச்சர் கர்நாடகாவுக்கு சென்று நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார். மறைமுகமாக ஒன்றிய அரசு கர்நாடகா அரசுக்கு ஆதரவாக இருக்கிறதோ என்று சந்தேகம் உள்ளது.நயினார் நாகேந்திரன் (பாஜ): காவிரி ஆணையத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் மேகதாதுவின் குறுக்கே அணை கட்டப்படும் என்று கர்நாடகா அரசு கூறுகிறது. அதை தடுக்கும் வகையில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜ முழு மனதுடன் ஆதரிக்கிறது. சிந்தனைசெல்வன் (விடுதலை சிறுத்தைகள்): கர்நாடகா அரசு மேகதாது குறுக்கே அணை கட்டும் நடவடிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும். இதற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் துணை நிற்போம்.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக செயல்படும் கர்நாடகா அரசின் நடவடிக்கையை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): கர்நாடக அரசு காவிரி குறுக்கே அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறும். முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும். சதன் திருமலைக்குமார் (மதிமுக): காவிரி நீரை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி): திராவிடர் மாடல் ஆட்சியை நடத்தும் முதல்வர் எடுக்கும் முயற்சிக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்.ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி): ஒன்றிய அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி வருகின்றது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): கர்நாடகா அரசு தொடர்ந்து அடாவடித்தனம் செய்து வருகிறது. ஒரு காலத்தில் காவிரியில் இருந்து 350 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வந்தது. ஆனால் இன்று தண்ணீரே வரக்கூடாது என்று கூறி அணை கட்டப்படுகிறது. அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் பேரவையில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்கிறோம்.ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்): காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தலைவர்கள் பேசினர்.துரைமுருகன் (நீர்வளத்துறை அமைச்சர்): அரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய அனைவருக்கும் நன்றி. இதையடுத்து அமைச்சர் வந்த தனி தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது….
The post காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டும் முயற்சியை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு: அதிமுக, பாஜ உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் உறுதி appeared first on Dinakaran.
