×

விடுமுறை நாளில் குடும்பத்தினருடன் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்: விடுமுறை நாளில் குடும்பத்தினருடன் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னம், செல்பி பாயிண்டில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ரம்ஜான் விடுமுறையையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநில சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தோடு குவிந்தனர். இதனால், மாமல்லபுரம் நகரின் முக்கிய வீதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. புராதன சின்னங்களை கண்டு ரசித்து குடும்பம், குடும்பமாக செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

சில பயணிகள் கடற்கரை கோயில் நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்டில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாமல்லபுரம் முழுவதும் கடும் வெயிலால், அனல் காற்று வீசி வருவதால் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வந்த பயணிகள் சிலர் வெயிலுக்கு பயந்து அங்குள்ள மரத்தடியில் அமர்ந்தும், படுத்தும் ஓய்வெடுத்தனர். மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் சார்பில், கோடை வெயிலை சமாளிக்க பயணிகளுக்கு நீர்மோர் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாமல்லபுரத்துக்கு தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு ரசிக்கின்றனர். வெளிநாட்டு, பயணிகளுக்கு 600 ரூபாயும், உள்நாட்டு பயணிகளுக்கு 40 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, வெயில் அதிகரித்து மாமல்லபுரம் முழுவதும் அனல் காற்று வீசி வருகிறது. இதனால், மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உடல் சூட்டை தணிக்கும் வகையில், மே மாதம் முடியும் வரை தொல்லியல் துறை நிர்வாகம் நீர்மோர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Tags : Mamallapuram ,Tamil Nadu ,Ramzan holiday ,
× RELATED நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்....