திருவள்ளூர்: காஸ் தட்டுப்பாடு எதிரொலியாக திருவள்ளூரில் மண் அடுப்பு தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தங்களுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, சில ஓட்டல்கள் மூடும் நிலைக்கு வந்துள்ளன. மேலும், வீட்டில் பயன்படுத்தும் காஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவு காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளில் சமைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், பழையபடி மக்கள் சமைப்பதற்கு மண் அடுப்புக்கு திரும்பி உள்ளனர். திருவள்ளூரில், இருப்பு வைத்திருந்த மண் அடுப்புகளும் விற்று தீர்ந்துவிட்டது. இதனால் திருவள்ளூர் அடுத்த மேலானூர் பகுதியில் மண் அடுப்பு தயாரிக்கும் தொழில் தீவிரம் அடைந்துள்ளது. அதிகளவில் ஆர்டர் தர முன் வந்திருப்பதால் மண் அடுப்பு தயாரிக்கும் பணி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மண் அடுப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தாலும் மண் அடுப்பு விலை ஏற்றம் தற்போது வரை இல்லை என்றும், ஒரு அடுப்பு ரூ.80 முதல் ரூ.100 அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மண்பாண்டம் தொழில் செய்யும் தங்களுக்கு அரசு வங்கி கடன் அளித்து உதவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
