×

இலை கட்சியில் வைரஸ் போல பரவி வரும் கோஷ்டி மோதல்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சட்டமன்ற தேர்தலை விட, உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு பிறகுதான், இலை கட்சியில் புயல் வீச தொடங்கி இருக்குபோல…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின்போது கூட இலை கட்சி கொஞ்சம் ஸ்டிராங்காக இருந்தது. காரணம் அப்போது ஆட்சியில் இருந்த காரணத்தால் அதிருப்தியாளர்கள் கூட அடக்கிவாசித்தனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு பிறகு இலை கட்சியில் தொண்டர்கள் நிலையில் இருந்து தலைவர்கள் நிலை வரை எங்கு பார்த்தாலும் கோஷ்டி பூசல் முளைத்துள்ளதாம். குறிப்பாக தேனிக்காரர் ஒரு பக்கம் லாபி செய்கிறார். சேலம்காரர் மற்றொரு பக்கம் லாபி செய்கிறார்… தொண்டர்கள், நிர்வாகிகள் எந்த கோஷ்டியில் இணைவது என்று தெரியாமல் மாவட்ட அளவில் லாபி செய்து கோஷ்டிகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை பகுதியில் இலை கட்சியில் நிலவி வரும் உள்ளடி வேலை குறித்து இலை கட்சியின் நிர்வாகி பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம். அந்த போஸ்டரில், கடந்த சட்டசபை தேர்தலில் குளித்தலை தொகுதியில் கூடவே இருந்து குழிபறித்த துரோகிகளை களையெடுங்கள் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாம். பிரபல நகைச்சுவை நடிகர் மகனின் பெயரை கொண்டவரும், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய மாவட்ட இளைஞரணி நிர்வாகி பெயரில் அந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதாம். குளித்தலை தொகுதியில் இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், சட்டமன்ற தேர்தலிலும், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் இலை கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலையில் ஈடுபட்டனராம். இதனால் இதுபோன்ற போஸ்டர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதாம். டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் விரைவில் நிர்வாகிகள் மாற்றம் அதிகம் இருக்க கூடும் என இலைகட்சிக்குள்ளே தற்போது விவாதமே நடக்கிறதாம்… மாநிலம் முழுவதும் கோஷ்டிபூசல், கட்சி உடைவது, கட்சி தாவும் சம்பங்களை தடுக்க முடியாமல் தலையின் தலைகள் தடுமாறி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘உள்ளாட்சியில் இன்னும் 5 வருஷத்துக்கு நிர்வாகத்தை களைக்கும் போக்கு நீடித்து கொண்ட தான் இருக்கும்போல…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து தலைவர், துணை தலைவர்கள், மேயர், துணை மேயர் பதவியேற்பு முடிந்தாலும் கவுன்சிலர்களை இழுக்கும் அரசியல் பரபரப்பு இன்னும் குமரி மாவட்டத்தில் முடிவுக்கு வந்தபாடில்லை. தலைவர் பதவி ஆளுங்கட்சி வசம் உள்ள சுசீந்திரம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள் இருவரை இலை தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளது. தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு இலை கட்சி ஆள்பிடிக்கும் வேலையை இங்கு தொடங்கியுள்ளது என்கின்றனர். ஆனால் இலையின் முயற்சி பலன் அளிக்காது என்கிறது ஆளுங்கட்சி. ஆனால், தலைவர் பதவியை பிடிக்கும் வரை நாங்கள் எங்கள் கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து கொண்டே இருப்போம் என்கிறார்கள் இலை கட்சியினர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அறுவை சிகிச்சையிலும் கரன்சியை அறுவடை செய்யும் மருத்துவ பணியாளர்களை என்ன சொல்வது…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், கண், காது-மூக்கு-தொண்டை, முடநீக்கியல், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நபர்களில் சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட நபர்களுக்கு, மருத்துவ குழுவினர், தேதி குறிப்பிட்டு அறுவை சிகிச்சை செய்கின்றனர். தினமும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, நோயாளிகளை மீண்டும் வார்டுக்கு கொண்டு செல்ல தேவையான அளவு மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். இந்த பணியாளர்கள், ஆபரேஷன் தியேட்டர் வாசலில், நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் கறந்துவிடுகின்றனர். பணம் கொடுக்க மறுத்தால், ஸ்டிரெச்சர் நகர மறுக்கிறது. குறைந்தபட்சம் 100 முதல் அதிகபட்சம் 500 ரூபாய் வரை பணம் பறிக்கின்றனர். காசு இல்லை எனக்கூறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம், மல்லுக்கட்டல் தொடர்கிறது. இப்படியாக, தினமும் பல ஆயிரம் ரூபாய் சுருட்டி விடுகின்றனர். பல ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்களின் ஊக்கத்தொகையைவிட அதிகம் சம்பாதித்து விடுகிறார்கள். ஆபரேஷன் தியேட்டர் ஊழியர்களுக்கு, மேலதிகாரிகள் ‘விசேஷ ஆபரேசன்’ செய்தால் மட்டுமே இந்த போக்கு மாறும் என்கிறார்கள் சில நேர்மையான ஊழியர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பிரியாணி நகராட்சியில வசூலில் பட்டைய கிளப்பும் ஆபிசர் பற்றி சொல்லுங்க… அப்படியே நமக்கும் நாலு பிளேட் பார்சல் கேளுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஓசியில வாங்கி சாப்பிடறது எல்லாம் ஒரு வேலையா.. கேட்கவே அசிங்கமா இருக்கு. வேறு மேட்டர் சொல்றேன் கேளு… மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பிரியாணிக்கு பெயர் போன 4 எழுத்து நகர் ஆட்சி தான் வருவாய் அதிகமாக வர்ற நகர் ஆட்சியாம். இந்த நகர் ஆட்சியில தூய்ைம பிரிவுல ஆபிசராக, பெயரோட முடிவுல ரத்தினத்தை கொண்டவரு இருக்குறாரு. இவரு பிரியாணி நகர் ஆட்சிக்கு வந்ததுல இருந்து, பல பேர் வேலை செய்யவே அச்சப்படுறாங்களாம். ஆரம்பத்துல நான் ரொம்ப ஸ்ட்ரிட் ஆபிசர்னு காட்டிக்கிட்டாராம். அதுக்கப்புறமாக பல வழிகள்லயும் துட்டு பாக்குறாராம். சமீபத்துல, நகர்ப்புற தேர்தல் நடந்து முடிஞ்சு, கவுன்சிலருங்க வந்துட்டதால, இனிமே பழையபடி துட்டு பாக்க முடியாதுன்னு, திடீர்னு ஒன்றரை லட்சத்துக்கு தூய்மை பணிக்கு தேவையான பொருட்களை வாங்கினாராம். ஆனா, அதுக்கு ரூ.8 லட்சம் செலவானதாக பில் போட்டு, நல்ல லாபம் பார்த்துட்டதாக பேச்சு அடிபடுதாம்….’’ என்றார் விக்கியானந்தா.    …

The post இலை கட்சியில் வைரஸ் போல பரவி வரும் கோஷ்டி மோதல்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Koshti ,leaf party ,Peter ,Leaf ,Dinakaran ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது